தொழில்முறை குத்துச்சண்டையில் தொடரும் ஆதிக்கம்: விஜேந்தர்சிங் 11–வது வெற்றி


தொழில்முறை குத்துச்சண்டையில் தொடரும் ஆதிக்கம்: விஜேந்தர்சிங் 11–வது வெற்றி
x
தினத்தந்தி 14 July 2019 10:00 PM GMT (Updated: 14 July 2019 8:23 PM GMT)

இந்திய நட்சத்திர குத்துச்சண்டை வீரர் விஜேந்தர்சிங் தொழில்முறை குத்துச்சண்டைக்கு தாவிய பிறகு வெற்றி மேல் வெற்றிகளை குவித்து வருகிறார்.

நியூவார்க், 

இந்திய நட்சத்திர குத்துச்சண்டை வீரர் விஜேந்தர்சிங் தொழில்முறை குத்துச்சண்டைக்கு தாவிய பிறகு வெற்றி மேல் வெற்றிகளை குவித்து வருகிறார். இந்திய நேரப்படி நேற்று அதிகாலை அமெரிக்காவின் நியூவார்க் நகரில் நடந்த போட்டியில் விஜேந்தர்சிங், அனுபவம் வாய்ந்த மைக் ஸ்னிடரை (அமெரிக்கா) சூப்பர் மிடில்வெயிட் பிரிவில் சந்தித்தார். இது 8 ரவுண்ட் கொண்ட பந்தயமாகும். அமெரிக்க தொழில்முறை குத்துச்சண்டை களத்திற்குள் முதல்முறையாக அடியெடுத்து வைத்த விஜேந்தர்சிங் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்தினார். 4–வது ரவுண்டில் அவர் சரமாரி குத்துகளை விட்டதில் ஸ்னிடர் மிரண்டு போனார். களத்தின் கயிற்றோடு சாய்ந்து சமாளிக்க முடியாமல் திணறினார்.

இதையடுத்து ஆட்டத்தை நிறுத்திய நடுவர் விஜேந்தர்சிங் வெற்றி பெற்றதாக அறிவித்தார். தொழில்முறை குத்துச்சண்டை வீரராக உருவெடுத்த பிறகு தோல்வியே சந்திக்காமல் வீறுநடை போட்டு வரும் அரியானாவைச் சேர்ந்த விஜேந்தர்சிங் ருசித்த 11–வது வெற்றியாகும். இதில் 8 நாக்–அவுட் வெற்றிகளும் அடங்கும். விஜேந்தர் கூறுகையில், ‘2 அல்லது 3 ரவுண்டிலேயே ஆட்டம் முடிவுக்கு வரும் என்று எதிர்பார்த்தேன். ஆனால் 4–வது ரவுண்ட் வரை எடுத்துக் கொள்ள வேண்டியதாகி விட்டது. அமெரிக்காவில் அறிமுக போட்டியிலேயே வெற்றி பெற்றிருப்பது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது’ என்றார். அமெரிக்காவின் டாப் ரேங்க் நிறுவனத்துடன் ஒப்பந்தம் ஆகியுள்ள அவர் இந்த ஆண்டில் மேலும் இரு போட்டிகளில் பங்கேற்க இருக்கிறார்.

33 வயதான விஜேந்தர்சிங் சமீபத்தில் தெற்கு டெல்லி நாடாளுமன்ற தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு தோல்வி அடைந்தது குறிப்பிடத்தக்கது.


Next Story