பிற விளையாட்டு

புரோ கபடி: வெற்றியுடன் தொடங்கியது ஜெய்ப்பூர் அணி + "||" + Pro Kabaddi: The Jaipur team that started with success

புரோ கபடி: வெற்றியுடன் தொடங்கியது ஜெய்ப்பூர் அணி

புரோ கபடி: வெற்றியுடன் தொடங்கியது ஜெய்ப்பூர் அணி
புரோ கபடி லீக் போட்டி தொடரில் நேற்று நடந்த லீக் ஆட்டத்தில் ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் அணி 42-23 என்ற புள்ளி கணக்கில் மும்பையை வீழ்த்தி போட்டியை வெற்றியுடன் தொடங்கியது.
ஐதராபாத்,

7-வது புரோ கபடி லீக் தொடர் ஐதராபாத்தில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 12 அணிகளும் தங்களுக்குள் தலா 2 முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் முதல் 2 அணிகள் நேரடியாக அரைஇறுதிக்கு தகுதி பெறும். 3 முதல் 6 இடங்களை பிடிக்கும் அணிகள் வெளியேற்றுதல் சுற்றில் மோதி அதில் வெற்றி பெறும் அணிகள் அரைஇறுதிக்குள் நுழையும்.


இந்த போட்டி தொடரில் நேற்று இரவு நடந்த 5-வது லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன்களான ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ்-மும்பை (யூ மும்பா) அணிகள் மோதின. விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் அணி தொடக்கம் முதலே முன்னிலை வகித்தது. அந்த அணி வீரர் தீபக் ஹூடா (11 புள்ளிகள்) குவித்தார். அவருக்கு பக்கபலமாக நிதின் ராவல், தீபக் நர்வால் ஆகியோரும் ரைடில் சிறப்பாக செயல்பட்டனர்.

முதல் பாதியில் ஜெய்ப்பூர் அணி 22-9 என்ற கணக்கில் வலுவான முன்னிலை பெற்றது. அந்த முன்னிலையை ஜெய்ப்பூர் அணி கடைசி வரை தக்க வைத்து கொண்டது. ஜெய்ப்பூர் அணியின் தடுப்பு ஆட்டக்காரர்களும் அருமையாக டேக்கிள் செய்து எதிரணியினரை மடக்கினார்கள். முடிவில் ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் அணி 42-23 என்ற புள்ளி கணக்கில் மும்பை அணியை வீழ்த்தி போட்டியை வெற்றியுடன் தொடங்கியது. ஜெய்ப்பூர் அணியினர், 3 முறை மும்பை அணியை ‘ஆல்-அவுட்’ செய்து அசத்தினார்கள். 2-வது ஆட்டத்தில் ஆடிய மும்பை அணி சந்தித்த முதல் தோல்வி இதுவாகும்.

அடுத்து நடந்த 6-வது லீக் ஆட்டத்தில் புனேரி பால்டன்-அரியானா ஸ்டீலர்ஸ் அணிகள் சந்தித்தன. பரபரப்பான இந்த ஆட்டத்தில் முதலில் இரு அணிகளும் மாறி, மாறி புள்ளி சேர்த்தன. ஆனால் சற்று நேரத்தில் அரியானா ஸ்டீலர்ஸ் அணி, புனேரி பால்டனை ஆல்-அவுட் செய்து ஆதிக்கம் காட்டியது. முதல் பாதியில் அரியான ஸ்டீலர்ஸ் அணி 22-10 என்ற புள்ளி கணக்கில் முன்னிலை பெற்றது.

2-வது பாதியில் புனேரி பால்டன் அணி சரிவில் இருந்து மீண்டு வர முயற்சித்தது ஆனால் அதற்கு முழு பலன் கிடைக்கவில்லை. முடிவில் அரியானா ஸ்டீலர்ஸ் அணி 34-24 என்ற புள்ளி கணக்கில் புனேரி பால்டனை சாய்த்து முதல் வெற்றியை தனதாக்கியது. அரியானா அணியில் நவீன் 14 புள்ளிகள் திரட்டி அணியின் வெற்றியில் முக்கிய பங்கு வகித்தார்.

இன்று (செவ்வாய்க்கிழமை) ஓய்வு நாளாகும். நாளை நடைபெறும் லீக் ஆட்டங்களில் உ.பி.யோத்தா-பெங்கால் வாரியர்ஸ் (இரவு 7.30 மணி), தெலுங்கு டைட்டன்ஸ்-தபாங் டெல்லி (இரவு 8.30 மணி) அணிகள் மோதுகின்றன.