பிற விளையாட்டு

ஜப்பான் ஓபன் பேட்மிண்டன் போட்டி இன்று தொடக்கம்: சிந்து, ஸ்ரீகாந்த் பங்கேற்பு + "||" + Japan Open Badminton Tournament Beginning Today: Participation of Sindhu and Srikanth

ஜப்பான் ஓபன் பேட்மிண்டன் போட்டி இன்று தொடக்கம்: சிந்து, ஸ்ரீகாந்த் பங்கேற்பு

ஜப்பான் ஓபன் பேட்மிண்டன் போட்டி இன்று தொடக்கம்: சிந்து, ஸ்ரீகாந்த் பங்கேற்பு
ஜப்பான் ஓபன் பேட்மிண்டன் போட்டி டோக்கியோவில் இன்று தொடங்குகிறது. இதில் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து, வீரர் ஸ்ரீகாந்த் உள்பட பலர் கலந்து கொள்கிறார்கள்.
டோக்கியோ,

ரூ.5 கோடி பரிசுத்தொகைக்கான ஜப்பான் ஓபன் பேட்மிண்டன் போட்டி டோக்கியோவில் இன்று (செவ்வாய்க்கிழமை) முதல் 28-ந் தேதி வரை நடக்கிறது.

இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் உலக தரவரிசையில் 5-வது இடத்தில் இருப்பவரான இந்தியாவின் முன்னணி வீாங்கனை பி.வி.சிந்து, தனது முதல் சுற்று ஆட்டத்தில் சீன வீராங்கனை ஹான் யூவை சந்திக்கிறார். 2-வது சுற்றில் அவர் ஸ்காட்லாந்து வீராங் கனை கிர்ஸ்டி கில்மோர் அல்லது ஜப்பான் வீராங்கனை அயா ஒஹோரியை சந்திக்கக்கூடும்.


சிந்து கால்இறுதிக்கு முன்னேறும்பட்சத்தில் உலக தரவரிசையில் 4-வது இடத்தில் உள்ள ஜப்பான் வீராங்கனை அகானே யமாகுச்சியை சந்திக்க நேரிடும். கடந்த ஞாயிற்றுக்கிழமை நடந்த இந்தோனேஷிய ஓபன் இறுதிப்போட்டியில் சிந்து, அகானே யமாகுச்சியிடம் தோல்வி கண்டு பட்டம் வெல்லும் வாய்ப்பை இழந்தார். கடந்த 7 மாதங்களாக பட்டம் எதுவும் வெல்லாமல் இருக்கும் சிந்து தனது முந்தைய தோல்விக்கு பதிலடி கொடுப்பதுடன் இந்த போட்டியிலாவது கோப்பையை கையில் ஏந்துவாரா? என்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கிறார்கள்.

இந்த போட்டி குறித்து பி.வி.சிந்து கருத்து தெரிவிக்கையில், ‘இந்தோனேஷிய போட்டி ஒட்டுமொத்தத்தில் எனக்கு சிறப்பானதாகவே அமைந்தது. இந்த போட்டியில் கிடைத்த நம்பிக்கையின் மூலம் ஜப்பான் ஓபன் போட்டியில் சிறப்பாக செயல்படுவேன்’ என்று நம்பிக்கை தெரிவித்தார்.

பெண்கள் ஒற்றையர் பிரிவில் உலக தரவரிசையில் 8-வது இடத்தில் இருக்கும் இந்திய வீராங்கனை சாய்னா நேவால் தனது முதல் சுற்று ஆட்டத்தில் தாய்லாந்து வீராங்கனை பூசனன் ஓங்பாம்ருங்பானை சந்திக்கிறார்.

ஆண்கள் ஒற்றையர் பிரிவில் முதல் சுற்று ஆட்டத்தில் உலக தரவரிசையில் 23-வது இடத்தில் இருக்கும் இந்திய வீரர் சாய் பிரனீத், 10-ம் நிலை வீரரான கென்டா நிஷிமோடோவுடன் (ஜப்பான்) மோதுகிறார். மற்றொரு ஒற்றையர் ஆட்டத்தில் இந்திய வீரர்கள் பிரனாய்-ஸ்ரீகாந்த் சந்திக்கின்றனர். இன்னொரு இந்திய வீரர் சமீர் வர்மா தனது முதல் சுற்று ஆட்டத்தில் டென்மார்க் வீரர் அன்டோன்சென்னை எதிர்கொள்கிறார்.