பிற விளையாட்டு

தாய்லாந்து ஓபன் பேட்மிண்டன்: சாய்னா, ஸ்ரீகாந்த் 2–வது சுற்றுக்கு தகுதி + "||" + Thailand Open Badminton: Saina, Srikanth qualify for 2nd round

தாய்லாந்து ஓபன் பேட்மிண்டன்: சாய்னா, ஸ்ரீகாந்த் 2–வது சுற்றுக்கு தகுதி

தாய்லாந்து ஓபன் பேட்மிண்டன்: சாய்னா, ஸ்ரீகாந்த் 2–வது சுற்றுக்கு தகுதி
தாய்லாந்து ஓபன் பேட்மிண்டன் போட்டியில் இந்திய வீராங்கனை சாய்னா நேவால், வீரர் ஸ்ரீகாந்த் ஆகியோர் 2–வது சுற்றுக்கு முன்னேறினார்கள்.

பாங்காக்,

தாய்லாந்து ஓபன் பேட்மிண்டன் போட்டியில் இந்திய வீராங்கனை சாய்னா நேவால், வீரர் ஸ்ரீகாந்த் ஆகியோர் 2–வது சுற்றுக்கு முன்னேறினார்கள்.

சாய்னா வெற்றி

மொத்தம் ரூ.3½ கோடி பரிசுத்தொகைக்கான தாய்லாந்து ஓபன் பேட்மிண்டன் போட்டி பாங்காக்கில் நேற்று தொடங்கியது. இந்த போட்டியில் இருந்து இந்தியாவின் முன்னணி வீராங்கனை பி.வி.சிந்து கடைசி நேரத்தில் விலகினார்.

இதில் நேற்று நடந்த பெண்கள் ஒற்றையர் பிரிவு முதல் சுற்று ஆட்டம் ஒன்றில் காயத்தில் இருந்து மீண்டு வந்துள்ள இந்திய வீராங்கனை சாய்னா நேவால், தகுதி சுற்று மூலம் முன்னேறிய தாய்லாந்து வீராங்கனை பிட்டயாபோர்ன் சய்வானை சந்தித்தார். 39 நிமிடங்கள் விறுவிறுப்பாக நடந்த இந்த ஆட்டத்தில் சாய்னா 21–17, 21–19 என்ற நேர்செட்டில் பிட்டயாபோர்ன் சய்வானை தோற்கடித்து 2–வது சுற்றுக்கு முன்னேறினார். மற்றொரு இந்திய வீராங்கனை சாய் உத்தேஜிதா ராவ் முதல் சுற்றில் தோல்வி கண்டு நடையை கட்டினார்.

சமீர் வர்மா தோல்வி

ஆண்கள் ஒற்றையர் பிரிவில் முதல் சுற்று ஆட்டம் ஒன்றில் உலக தரவரிசையில் 10–வது இடத்தில் இருக்கும் இந்திய வீரர் ஸ்ரீகாந்த் 21–13, 17–21, 21–19 என்ற செட் கணக்கில் தகுதி சுற்று மூலம் ஏற்றம் கண்ட சீனா வீரர் ரென் பெங்போவை வீழ்த்தி 2–வது சுற்றுக்குள் நுழைந்தார். இந்த ஆட்டம் 68 நிமிடம் நீடித்தது. மற்றொரு ஆட்டத்தில் தரவரிசையில் 31–வது இடத்தில் இருக்கும் இந்திய வீரர் பிரனாய் 21–16, 22–20 என்ற செட் கணக்கில் 27–ம் நிலை வீரரான ஹாங்காங்கின் வோங் விங் கி வின்சென்டை வீழ்த்தி 2–வது சுற்றுக்குள் அடியெடுத்து வைத்தார்.

இன்னொரு ஆட்டத்தில் தரவரிசையில் 35–வது இடத்தில் இருக்கும் இந்திய வீரர் காஷ்யப் 18–21, 21–8, 21–14 என்ற செட் கணக்கில் இஸ்ரேல் வீரர் மிஷா ஜில்பெர்மானை சாய்த்து 2–வது சுற்றுக்கு தகுதி பெற்றார். மற்றொரு ஆட்டத்தில் இந்திய வீரர் சுபான்கர் தேய், நம்பர் ஒன் வீரரான கென்டோ மோமோடாவை (ஜப்பான்) சந்திக்க இருந்தார். காயம் காரணமாக கடைசி நேரத்தில் கென்டோ மோமோடா போட்டியில் இருந்து விலகியதால் சுபான்கர் தேய் விளையாடாமலேயே 2–வது சுற்றுக்கு தகுதி கண்டார். இன்னொரு ஆட்டத்தில் இந்திய வீரர் சாய் பிரனீத் 17–21, 21–17, 21–15 என்ற செட் கணக்கில் தாய்லாந்து வீரர் கன்டாபோன் வாங்சாரீனை வீழ்த்தி 2–வது சுற்றுக்குள் நுழைந்தார். மற்ற முதல் சுற்று ஆட்டங்களில் இந்திய வீரர்கள் சமீர் வர்மா, சவுரப் வர்மா ஆகியோர் தோல்வி கண்டு வெளியேறினார்கள்.