விளையாட்டு துளிகள்


விளையாட்டு துளிகள்
x
தினத்தந்தி 2 Aug 2019 9:30 PM GMT (Updated: 2 Aug 2019 9:19 PM GMT)

‘இந்திய கிரிக்கெட் அணிக்கு பயிற்சியாளராக வேண்டும் என்ற எண்ணம் எனக்கு உண்டு. ஆனால் இந்த சமயத்தில் அந்த ஆசை இல்லை.

* ரஷியாவில் நடந்து வரும் உமகானவ் நினைவு சர்வதேச குத்துச்சண்டை போட்டியில் 57 கிலோ எடைப்பிரிவில் அரைஇறுதி ஆட்டத்தில் இந்திய வீராங்கனை நீரஜ் 3-2 என்ற கணக்கில் முன்னாள் உலக சாம்பியன் அலிசியா மெசியானோவுக்கு (இத்தாலி) அதிர்ச்சி அளித்து இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.

* இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் கங்குலி அளித்த ஒரு பேட்டியில், ‘இந்திய கிரிக்கெட் அணிக்கு பயிற்சியாளராக வேண்டும் என்ற எண்ணம் எனக்கு உண்டு. ஆனால் இந்த சமயத்தில் அந்த ஆசை இல்லை. தற்போது ஐ.பி.எல்., பெங்கால் கிரிக்கெட் சங்க பொறுப்பு, வர்ணனையாளர் பணி ஆகியவற்றில் கவனம் செலுத்தி வருகிறேன். இந்த பணிகள் எல்லாம் முழுமையாக முடியட்டும். எதிர்காலத்தில் நிச்சயம் பயிற்சியாளர் ஆக வேண்டும் என்று விரும்புவேன்’ என்று தெரிவித்துள்ளார்.

* பல்கேரியாவில் நடந்து வரும் உலக கேடட் மல்யுத்த சாம்பியன்ஷிப்போட்டியின் 65 கிலோ எடைப்பிரிவில் இந்திய வீராங்கனை சோனம் மாலிக் 7-1 என்ற புள்ளி கணக்கில் சீனாவின் பின் பின் ஸியாங்கை வீழ்த்தி தொடர்ந்து 2-வது முறையாக தங்கப்பதக்கத்தை தட்டிச் சென்றார். 17 வயதான இவர் அரியானா மாநிலத்தில் உள்ள மதினா என்ற கிராமத்தை சேர்ந்தவர்.

* ‘டெஸ்ட் கிரிக்கெட்டில் வீரர்களின் சீருடையில் பெயர் மற்றும் நம்பர் பொறிக்கப்பட்டிருப்பதை பார்க்க கேலிக்கூத்தாக தெரிகிறது.’ என்று ஆஸ்திரேலிய முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் பிரெட்லீ சாடியுள்ளார்.

* தாய்லாந்து ஓபன் பேட்மிண்டன் போட்டி பாங்காக்கில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த ஆண்கள் ஒற்றையர் பிரிவு கால்இறுதி ஆட்டம் ஒன்றில் இந்திய வீரர் சாய் பிரனீத் 18-21, 12-21 என்ற நேர்செட்டில் ஜப்பான் வீரர் கான்டா சுனேயமாவிடம் பணிந்தார்.

* ஆஷஸ் டெஸ்டில் முதல் நாளில் 144 ரன்கள் அடித்து தங்கள் அணியை மோசமான நிலையில் இருந்து காப்பாற்றிய ஆஸ்திரேலிய வீரர் ஸ்டீவன் சுமித் அளித்த பேட்டியில், ‘கடந்த 15 மாதங்களில் (பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் தடையால் ஒதுங்கி இருந்த காலக்கட்டம் ) மீண்டும் என்னால் கிரிக்கெட் விளையாட முடியுமா? என்று சில நேரங்களில் நினைத்தது உண்டு. ஒரு கட்டத்தில் கிரிக்கெட் மீதான ஆர்வத்தையும் கொஞ்சம் இழந்தேன். குறிப்பாக முழங்கை ஆபரேஷனுக்கு பிறகு இந்த சிந்தனை என்னை ஆக்கிரமித்தது. ஆனால் ஆச்சரியம் என்னவென்றால், முழங்கை காயம் குணமானதும் கிரிக்கெட் மீதான மோகம் மறுபடியும் தொற்றிக் கொண்டது. ஆஸ்திரேலிய அணிக்காக விளையாட வேண்டும், ரசிகர்களை பெருமைப்படுத்தும் வகையில் முத்திரை பதிக்க வேண்டும் என்ற எண்ணம் உதித்தது. இந்த சதத்தை பற்றி பேச என்னிடம் வார்த்தைகளே இல்லை. நீண்ட இடைவெளிக்கு பிறகு சதம் அடித்திருக்கிறேன். அணியை சிக்கலில் இருந்து மீட்கும் வகையில் விளையாடியது பெருமை அளிக்கிறது. கடினமான சூழலில் அடித்த இந்த சதத்தை எனது சிறந்த சதங்களில் ஒன்றாக கருதுகிறேன்’ என்றார்.

Next Story