உலக டென்னிஸ் வீரர், வீராங்கனைகளின் தரவரிசைப்பட்டியல் வெளியீடு


உலக டென்னிஸ் வீரர், வீராங்கனைகளின் தரவரிசைப்பட்டியல் வெளியீடு
x

உலக டென்னிஸ் வீரர், வீராங்கனைகளின் தரவரிசைப்பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது.


* உலக டென்னிஸ் வீரர், வீராங்கனைகளின் தரவரிசைப்பட்டியலை சர்வதேச டென்னிஸ் சங்கம் நேற்று வெளியிட்டது. இதன்படி ஆண்கள் ஒற்றையர் பிரிவில் செர்பியா வீரர் ஜோகோவிச் (12,415 புள்ளிகள்) தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கிறார். ஸ்பெயின் வீரர் ரபெல் நடால் (7,945 புள்ளிகள்) 2-வது இடத்திலும், சுவிட்சர்லாந்து வீரர் ரோஜர் பெடரர் (7,460 புள்ளிகள்) 3-வது இடத்திலும், ஆஸ்திரியா வீரர் டோமினிக் திம் (4,775 புள்ளிகள்) 4-வது இடத்திலும் நீடிக்கின்றனர். கிரீஸ் வீரர் சிட்சிபாஸ் ஒரு இடம் முன்னேறி 5-வது இடத்தையும், ஜப்பான் வீரர் நிஷிகோரி ஒரு இடம் ஏற்றம் கண்டு 6-வது இடத்தையும், ஜெர்மனி வீரர் அலெக்சாண்டர் ஸ்வெரேவ் 2 இடம் சரிந்து 7-வது இடத்தையும் பிடித்துள்ளனர். ரஷிய வீரர் கரன் கச்சனோவ் 8-வது இடத்தில் தொடருகிறார். ரஷிய வீரர் மெட்விடேவ் ஒரு இடம் முன்னேறி 9-வது இடத்தையும், தென்ஆப்பிரிக்க வீரர் கெவின் ஆண்டர்சன் ஒரு இடம் முன்னேறி 10-வது இடத்தையும் பெற்றுள்ளனர்.

பெண்கள் ஒற்றையர் பிரிவில் ஆஸ்திரேலிய வீராங்கனை ஆஷ்லி பார்டி (6,605 புள்ளிகள்) முதலிடத்திலும், ஜப்பான் வீராங்கனை நவோமி ஒசாகா (6,228 புள்ளிகள்) 2-வது இடத்திலும், செக்குடியரசு வீராங்கனை கரோலினா பிளிஸ்கோவா 3-வது இடத்திலும், ருமேனியா வீராங்கனை சிமோனா ஹாலெப் 4-வது இடத்திலும், நெதர்லாந்து வீராங்கனை கிகி பெர்டென்ஸ் 5-வது இடத்திலும், செக்குடியரசு வீராங்கனை கிவிடோவா 6-வது இடத்திலும், உக்ரைன் வீராங்கனை ஸ்விடோலினா 7-வது இடத்திலும், அமெரிக்க வீராங்கனை ஸ்லோன் ஸ்டீபன்ஸ் 8-வது இடத்திலும் மாற்றமின்றி நீடிக்கின்றனர். பெலாரஸ் வீராங்கனை சபலென்கா ஒரு இடம் ஏற்றம் கண்டு 9-வது இடத்தையும், அமெரிக்க வீராங்கனை செரீனா வில்லியம்ஸ் ஒரு இடம் சரிந்து 10-வது இடத்தையும் பிடித்துள்ளனர்.

* இந்திய கிரிக்கெட் அணியின் புதிய பயிற்சியாளரை தேர்வு செய்ய முன்னாள் கேப்டன் கபில்தேவ் தலைமையில் கெய்க்வாட், சாந்தா ரங்கசாமி ஆகியோர் அடங்கிய கிரிக்கெட் ஆலோசனை கமிட்டி அமைக்கப்பட்டது. இந்த கமிட்டிக்கு இந்திய கிரிக்கெட் வாரிய நிர்வாக கமிட்டி அனுமதி அளித்து இருக்கிறது. பயிற்சியாளர் தேர்வு இந்த மாதம் மத்தியில் நடைபெறும் என்று இந்திய கிரிக்கெட் வாரிய நிர்வாக கமிட்டி தலைவர் வினோத்ராய் தெரிவித்துள்ளார். இந்திய கிரிக்கெட் வாரிய நிர்வாகிகள் தேர்தல் அக்டோபர் 22-ந் தேதி நடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றும் அவர் தெரிவித்து இருக்கிறார்.

* நியூசிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் வெட்டோரியின் சாதனைக்கு அங்கீகாரம் அளிக்கும் வகையில் அவர் ஒருநாள் போட்டியில் பயன்படுத்தி வந்த 11-ம் நம்பர் பனியனுக்கு ஓய்வு கொடுக்கப்பட்டு இருப்பதாக அந்த நாட்டு கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. அந்த நம்பர் பனியன் நியூசிலாந்து வீரர்கள் யாருக்கும் வருங்காலத்தில் வழங்கப்படமாட்டாது. முன்னாள் சுழற்பந்து வீச்சாளரான வெட்டோரி 113 டெஸ்ட் போட்டியில் விளையாடி 362 விக்கெட்டும், 4,531 ரன்னும், 295 ஒருநாள் போட்டியில் ஆடி 305 விக்கெட்டும், 2,253 ரன்னும் எடுத்துள்ளார்.

* அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் உள்ள லாடெர்ஹில்லில் நடந்த வெஸ்ட்இண்டீசுக்கு எதிரான முதலாவது 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி வேகப்பந்து வீச்சாளர் நவ்தீப் சைனி, நிகோலஸ் பூரன் விக்கெட்டை வீழ்த்தியதும் அவரை பார்த்து ஆக்ரோ‌ஷமாக கத்தினார். இது சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) விதிமுறையை மீறிய செயலாகும். இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்திய போட்டி நடுவர் ஜெப் குரோவ், நவ்தீப் சைனிக்கு எச்சரிக்கை விடுத்தார். அத்துடன் அவருக்கு ஒரு தகுதி இழப்பு புள்ளியும் விதிக்கப்பட்டது.


Next Story