சிறப்புக் கட்டுரைகள்

விழி இன்றியும், ‘ஜூடோ’ விளையாடலாம்..! + "||" + Without Ocular, Playing Judo

விழி இன்றியும், ‘ஜூடோ’ விளையாடலாம்..!

விழி இன்றியும், ‘ஜூடோ’ விளையாடலாம்..!
போட்டிகள் நிறைந்த இந்த உலகில், சாதிப்பது என்பது சவாலானது. சாமானியர்களுக்கே இப்படி ஒரு நிலை என்றால், மாற்றுத்திறனாளிகளின் நிலை போராட்டம் நிறைந்தது. அப்படிப்பட்ட போராட்ட குணம் நிறைந்த மாற்றுத்திறனாளியாக திகழ்கிறார், சுபாஷினி.
கண் பார்வை இழந்த ஏழை மாணவியான சுபாஷினி, ஜூடோ போட்டியில் தேசிய அளவில் வெற்றிபெற்று சாதனை படைத்திருக் கிறார். மேலும் லண்டனில் நடைபெற இருக்கும் பாரா காமன்வெல்த் போட்டியில் பங்கேற்க, தகுதி பெற்றுள்ளார்.

சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே உள்ள செட்டிமாங்குறிச்சியை சேர்ந்தவர் பழனிசாமி, இவருடைய மனைவி அம்மாசி. இவர் களது 2-வது மகள்தான், சுபாஷினி. இவருக்கு மணிமேகலை என்ற சகோதரியும், ராஜ்குமார் என்ற சகோதரரும் இருக்கிறார்கள். இவர்கள் மூவருமே, பார்வை குறைபாட்டுடன் பிறந்தவர்கள். மேலும் மரபணு குறைபாடும் இவர்களுக்கு இருப்பதால், இயல்பான நிறத்தில் இருந்து வேறுபட்டு, வெள்ளைக்காரர்களை போல தோற்றமளிக்கிறார்கள். சுபாஷினியின் போராட்ட வாழ்க்கை குறித்து அறிந்து, அவரை சந்திக்க சென்றோம். அவர் நம்மிடம் மனம் திறந்து பேசினார்.‘‘நான், என்னுடன் பிறந்தவர்கள் என அனைவரும் பார்வை இழந்தவர்கள். மிகவும் சிரமத்துக்கு மத்தியிலேயே நான் படித்தேன். 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை எங்களது ஊரில் உள்ள நடுநிலைப்பள்ளியிலும், 6-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை மாசிநாயக்கன்பட்டி நடுநிலைப்பள்ளியிலும், 9, 10-ம் வகுப்பு அம்மாபேட்டை அரசு உயர் நிலைப்பள்ளியிலும், 11, 12-ம் வகுப்புகளை அயோத்தியாப்பட்டணம் அரசு மேல்நிலைப்பள்ளியிலும் படித்தேன். தற்போது கல்லூரியில் சேர்ந்து பி.ஏ. வரலாறு 2-ம் ஆண்டு பயின்று வரு கிறேன்.

6-ம் வகுப்பு படிக்கும் போது, எனக்கு ஜூடோவில் ஆர்வம் ஏற்பட்டது. மாற்றுத்திறனாளியாக இருந்தாலும் நம்மால் சாதிக்க முடியும் என்ற எண்ணம் என் மனதில் தோன்றியது. இதற்காக தீவிர பயிற்சியில் ஈடுபட்டேன். எனக்கு மாஸ்டர்கள் மகேஸ்வரன், உஷா ஆகியோர் பக்கபலமாக இருந்தனர். இதன் மூலம் பல்வேறு பதக்கங்களையும், சான்றிதழ்களையும் பெற்றுள்ளேன். தேசிய அளவில் நடந்த 5 போட்டிகளில் கலந்து கொண்டு 4 முறை தங்கப்பதக்கமும், ஒரு முறை வெள்ளிப்பதக்கமும் வென்றுள்ளேன். இதன்மூலம் செப்டம்பர் மாதம், லண்டனில் நடைபெற உள்ள, பாரா காமன்வெல்த் போட்டிக்கு தகுதிபெற்றுள்ளேன். இது எனக்கு மகிழ்ச்சியை அதிகப்படுத்தி இருக்கிறது’’ என்றவர், தன்னுடைய போராட்ட வாழ்க்கைக்கு முட்டுக்கட்டை போடும் வறுமை பற்றி பேசினார்.

‘‘எங்களுக்கு பிறவி குறைபாடு ஒருபுறம் இருக்க, குடும்ப வறுமையும் எங்களை பெருமளவில் சோதிக்கிறது. என்னுடைய அப்பா பழனிசாமிக்கு சிறுநீரகம் செயல் இழந்துவிட்டது. அவரால் வேலைக்கு செல்ல முடியாத சூழலில், அம்மா கரும்பு வெட்டும் கூலி வேலைக்கு சென்று குடும்பத்தை காப்பாற்றி வருகிறார். இதனால் குறைபாட்டை எதிர்த்து போராட தெரிந்த எனக்கு, வறுமையை எதிர்த்து போராட தெரியவில்லை. அன்றாட வாழ்க்கையில் நிழலாடும் வறுமையை தாண்டி, ஜூடோ வாழ்க்கையில் சாதிக்கும் கனவும் கேள்விக்குறியாகிவிட்டது.

தற்போதுகூட, லண்டனில் நடக்கும் பாரா காமன்வெல்த் போட்டியில் பங்கேற்கும் வாய்ப்பு கிடைத்தாலும், அதற்கான சூழல் அமையவில்லை. விமான டிக்கெட், பாஸ்போர்ட் போன்றவற்றை ஏற்பாடு செய்ய அம்மாவிடம் போதிய வசதியும் இல்லை’’ என்று வருத்தப்பட்டவருக்கு சில நல்ல உள்ளங்களின் ஆதரவு கிடைத்திருப்பதால், லண்டன் கனவு நனவாக இருக்கிறது. அதனால் லண்டன் சென்று, பாரா காமன்வெல்த் போட்டியில் இந்தியாவிற்காக தங்கம் வெல்வது, இவரது இலக்காக இருக்கிறது.

‘‘ஜூடோ விளையாட்டு என்பது ஒருவர் மற்றொருவரை, மடக்கி, கீழே சாய்க்க வேண்டும், எதிராளியின் முதுகு தரையில்படும் வகையில் 20 நொடிகள் வைத்து அழுத்தி பிடிக்க வேண்டும். இந்த கலையில் சுபாஷினி கைத்தேர்ந்தவர். அவர் 40 முதல் 44 கிலோ எடை பிரிவில் தேர்ச்சி பெற்றிருக் கிறார். 7 ஆண்டுகால தொடர் பயிற்சி, அவரை லண்டனிற்கு அழைத்து சென்றிருக்கிறது.’’ என்கிறார்கள், சுபாஷினியின் பயிற்சியாளர்கள்.

சுபாஷினியை படிப்பிலும், ஜுடோ கலையிலும் வளர்த்தெடுத்த பெருமை, தமிழக விழியிழந்தோர் சங்கத்திற்கும் உண்டு. இந்த சங்கத்தின் மூலமாகவே சுபாஷினி படித்து வருகிறார்.

‘‘சுபாஷினிக்கு தமிழக பயிற்சியாளர் உமா சங்கர் என்பவரும் பயிற்சி அளித்து வருகிறார். எங்களது சங்க கட்டிடத்தில் தான் சுபாஷினி பயிற்சி பெற்று வருகிறார். அவர் பயிற்சி பெறுவதற்கு தரையில் விரிக்க மெத்தை கூட கிடையாது. வெறும் தரையில் கடும் சிரமத்துக்கு மத்தியில் தான் பயிற்சி பெறுகிறார். லண்டனில் நடைபெறும் போட்டியில் வெற்றி பெற்றால், விழியிழந்த அவரது வாழ்க்கை ஒளிவீசத்தொடங்கி விடும்’’ என்றனர், தமிழக விழியிழந்தோர் சங்க நிர்வாகிகள் சேகர் மற்றும் ரவி.

விழி இல்லாத நிலையிலும் சாதனை வாழ்க் கைக்கு வழி தேட நினைக்கும் சுபாஷினியை நாமும் வாழ்த்துவோம்.