பிற விளையாட்டு

உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி: சுவிட்சர்லாந்தின் பாசெல் நகரில் நடைபெற உள்ளது + "||" + World Badminton Championship Tournament: To be held in Basel, Switzerland

உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி: சுவிட்சர்லாந்தின் பாசெல் நகரில் நடைபெற உள்ளது

உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி:  சுவிட்சர்லாந்தின் பாசெல் நகரில் நடைபெற உள்ளது
உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி வருகிற 19-ந்தேதி முதல் 25-ந்தேதி வரை சுவிட்சர்லாந்தின் பாசெல் நகரில் நடக்க உள்ளது.

* ஜார்ஜியாவில் நடந்து வரும் டிபிளிசி கிராண்ட்பிரி மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டியில், ஆண்களுக்கான 65 கிலோ உடல் எடைப்பிரிவின் இறுதி சுற்றில் நடப்பு சாம்பியனான இந்திய வீரர் பஜ்ரங் பூனியா 2-0 என்ற கணக்கில் ஈரானின் பிப்யானியை வீழ்த்தி தங்கப்பதக்கத்தை வசப்படுத்தினார். பஜ்ரங் பூனியா இந்த சீசனில் வென்ற 4-வது தங்கம் இதுவாகும். இதே போல் பெலாரசில் நடக்கும் மெட்விட் சர்வதேச மல்யுத்தத்தில் இந்திய வீராங்கனை வினேஷ் போகத் 53 கிலோ பிரிவில் உள்ளூர் வீராங்கனை யாப்ரிமென்காவை 11-0 என்ற கணக்கில் துவம்சம் செய்து இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.

* டிரினிடாட்டில் நடந்த இந்திய ‘ஏ’ அணிக்கு எதிரான அதிகாரபூர்வமற்ற 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியில் (4 நாள் ஆட்டம்) 373 ரன்கள் இலக்கை நோக்கி கடைசி நாளான நேற்று முன்தினம் 2-வது இன்னிங்சை ஆடிய வெஸ்ட் இண்டீஸ் ‘ஏ’ அணி 6 விக்கெட்டுக்கு 314 ரன்கள் எடுத்திருந்த போது ஆட்டம் டிரா ஆனது. அதிகபட்சமாக சோலோஜனோ 92 ரன்களும், பிரான்டன் கிங் 77 ரன்களும் எடுத்தனர். 3 போட்டிகள் கொண்ட இந்த தொடரை இந்திய ‘ஏ’ அணி 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியது.

* உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி வருகிற 19-ந்தேதி முதல் 25-ந்தேதி வரை சுவிட்சர்லாந்தின் பாசெல் நகரில் நடக்கிறது. இதில் யார்-யாருடன் மோதுவது என்ற போட்டி அட்டவணை குலுக்கல் (டிரா நிகழ்ச்சி) மூலம் ஏற்கனவே முடிவு செய்யப்பட்ட நிலையில், பெண்கள் ஒற்றையர் பிரிவில் ஊக்கமருந்து சோதனையில் சிக்கி இடைநீக்கம் செய்யப்பட்ட ஒரு வீராங்கனையை தவறுதலாக சேர்த்ததால் ஏற்பட்ட குளறுபடி காரணமாக மீண்டும் ‘டிரா’ நடத்தப்பட்டது. இதன்படி இந்திய நட்சத்திர வீராங்கனைகள் பி.வி.சிந்து, சாய்னா நேவால் ஆகியோர் நேரடியாக 2-வது சுற்றில் ஆடும் வகையில் முதல் சுற்றில் ‘பை’ சலுகை வழங்கப்பட்டுள்ளது. இவர்கள் தொடக்க கட்ட தடையை வெற்றிகரமாக கடந்தால் அரைஇறுதியில் நேருக்கு நேர் மோத வேண்டி வரும்.

* ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பர் முகமது ஷாசாத்தின் ஒப்பந்தத்தை ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரியம் காலம் குறிப்பிடாமல் இடைநீக்கம் செய்துள்ளது. வீரர்கள் வெளிநாட்டிற்கு செல்லும் போது ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரியத்திடம் அனுமதி பெற வேண்டும் என்ற விதிமுறையை அவர் மீறி விட்டதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

* வங்காளதேச கிரிக்கெட் அணியின் தொடக்க ஆட்டக்காரர் 30 வயதான தமிம் இக்பால் கிரிக்கெட்டில் இருந்து சில காலம் தனக்கு ஓய்வு தேவைப்படுவதால் அதற்கு அனுமதி அளிக்க வேண்டும் என்று அந்த நாட்டு கிரிக்கெட் வாரியத்தை கேட்டுக் கொண்டார். அவரது கோரிக்கையை வங்காளதேச கிரிக்கெட் வாரியம் ஏற்றுக் கொண்டுள்ளது. இதன் மூலம் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் மற்றும் 20 ஓவர் முத்தரப்பு தொடரில் அவர் ஆடமாட்டார்.

* கார் மற்றும் மோட்டார் சைக்கிள் பிரியரான இந்திய கிரிக்கெட் அணியின் மூத்த விக்கெட் கீப்பர் டோனி புதிதாக ரூ.90 லட்சத்திற்கு சொகுசு கார் ஒன்றை வாங்கியுள்ளார். தற்போது அவர் ராணுவ வீரர்களுடன் இணைந்து ரோந்து பணியில் ஈடுபட்டு வருவதால் அதை குறிப்பிட்டு அவரது மனைவி சாக்‌ஷி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், ‘டோனி, உங்களது பொம்மை (கார்) ஒரு வழியாக வீட்டிற்கு வந்து சேர்ந்து விட்டது. உங்களது வருகையை ஆவலோடு எதிர்நோக்கியுள்ளேன்’ என்று குறிப்பிட்டுள்ளார்.