பிற விளையாட்டு

புரோ கபடி: தமிழ் தலைவாஸ் அணி 3-வது வெற்றி + "||" + Pro Kabaddi: Tamil Thalaivas team wins 3rd

புரோ கபடி: தமிழ் தலைவாஸ் அணி 3-வது வெற்றி

புரோ கபடி: தமிழ் தலைவாஸ் அணி 3-வது வெற்றி
புரோ கபடி லீக் தொடரில் தமிழ் தலைவாஸ் 34-28 என்ற புள்ளி கணக்கில் குஜராத் பார்ச்சுன் ஜெயன்ட்ஸ் அணியை வீழ்த்தி 3-வது வெற்றியை ருசித்தது.
ஆமதாபாத்,

7-வது புரோ கபடி லீக் தொடரில் ஆமதாபாத்தில் நேற்று இரவு நடந்த 34-வது லீக் ஆட்டத்தில் குஜராத் பார்ச்சுன் ஜெயன்ட்ஸ்-தமிழ் தலைவாஸ் அணிகள் மோதின.

விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் தொடக்கம் முதலே இரு அணிகளும் மாறி, மாறி புள்ளிகள் எடுத்தன. முதல் பாதிக்குள் இரு அணிகளும் 3 முறை சமநிலை வகித்தன. முதல் பாதியின் கடைசி வினாடியில் தமிழ் தலைவாஸ் அணி, குஜராத்தை ‘ஆல்-அவுட்’ செய்ததுடன் 15-10 என்ற புள்ளி கணக்கில் முன்னிலை பெற்றது.


பிற்பாதியில் பெரும்பாலும் தமிழ் தலைவாஸ் அணி முன்னிலை வகித்தது. ஆனால் ஆட்டம் முடிய 3 நிமிடம் இருக்கையில் குஜராத் அணி, தமிழ் தலைவாசை ‘ஆல்-அவுட்’ செய்து பதிலடி கொடுத்ததுடன் ஒரு புள்ளி முன்னிலை பெற்றது. அடுத்து தமிழ் தலைவாஸ் அணியின் கேப்டன் அஜய் தாகூர் ஒரு ரைடில் 3 புள்ளிகள் குவித்து ஆட்டத்தில் திருப்பு முனையை ஏற்படுத்தினார். கடைசி நிமிடத்தில் தமிழ் தலைவாஸ் அணி மீண்டும் குஜராத் அணியை ‘ஆல்-அவுட்’ செய்து மிரட்டியது.

முடிவில் தமிழ் தலைவாஸ் அணி 34-28 என்ற புள்ளி கணக்கில் குஜராத் அணியை சாய்த்தது. தமிழ் தலைவாஸ் அணியில் கேப்டன் அஜய் தாகூர் ரைடு மூலம் 9 புள்ளிகள் சேர்த்தார். டேக்கிள்சில் அசத்திய தமிழ் தலைவாஸ் வீரர் மொகித் சில்லர் 5 புள்ளிகள் எடுத்தார். தமிழ் தலைவாஸ் அணியை சேர்ந்த மற்றொரு முன்னணி ரைடரான ராகுல் சவுத்ரி எதிர்பார்த்தபடி ஜொலிக்கவில்லை. 6-வது ஆட்டத்தில் ஆடிய தமிழ் தலைவாஸ் அணி பெற்ற 3-வது வெற்றி இதுவாகும். 6-வது ஆட்டத்தில் களம் கண்ட குஜராத் அணி சந்தித்த 3-வது தோல்வி இதுவாகும்.

இன்றைய ஆட்டங்கள்

மற்றொரு திரிலிங்கான ஆட்டத்தில் தபாங் டெல்லி அணி 32-30 என்ற புள்ளி கணக்கில் புனேரி பால்டனை தோற்கடித்து 5-வது வெற்றியை பெற்றது.

இன்று நடக்கும் லீக் ஆட்டங்களில் பெங்களூரு புல்ஸ் -அரியானா ஸ்டீலர்ஸ் (இரவு 7.30 மணி), குஜராத் பார்ச்சுன் ஜெயன்ட்ஸ் -தெலுங்கு டைட்டன்ஸ் (இரவு 8.30 மணி) அணிகள் மோதுகின்றன.