பேட்டிங், பந்து வீச்சு பயிற்சியாளர் உள்ளிட்ட பதவிகளுக்கான தேர்வு பணி தொடக்கம்


பேட்டிங், பந்து வீச்சு பயிற்சியாளர் உள்ளிட்ட பதவிகளுக்கான தேர்வு பணி தொடக்கம்
x
தினத்தந்தி 19 Aug 2019 11:22 PM GMT (Updated: 19 Aug 2019 11:22 PM GMT)

இந்திய கிரிக்கெட் அணிக்கு பேட்டிங் மற்றும் பந்து வீச்சு பயிற்சியாளர் உள்ளிட்ட பதவிகளுக்கான தேர்வு பணி நேற்று தொடங்கியது.


* மெட்ராஸ் கிரிக்கெட் கிளப் மற்றும் முருகப்பா குழுமம் சார்பில் பள்ளி அணிகளுக்கான ஆக்கி போட்டி சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் வருகிற 22-ந் தேதி முதல் 24-ந் தேதி வரை நடக்கிறது. இதில் செயின்ட் பால்ஸ், நெல்லை நாடார், வேலம்மாள் உள்பட 12 அணிகள் கலந்து கொண்டு மோதுகின்றன. இதில் இறுதிப்போட்டிக்கு முன்னேறும் அணிகளுக்கு ரூ.50 ஆயிரம் மதிப்பிலான பரிசுகள் வழங்கப்படும். இந்த தகவலை போட்டி அமைப்பு குழு செயலாளர் சண்முகம் தெரிவித்துள்ளார்.

* இந்திய கிரிக்கெட் வாரிய பதவியில் இருக்கும் சிலர் மீது இரட்டை ஆதாய பிரச்சினை எழுந்தது. தெண்டுல்கர், கங்குலி, டிராவிட் ஆகியோர் மீது இந்த பிரச்சினை கிளப்பப்பட்ட போது சர்ச்சை ஆனது. இரட்டை ஆதாய பிரச்சினை குழப்பத்துக்கு தீர்வு காண இந்திய கிரிக்கெட் வாரிய நிர்வாக கமிட்டி உறுப்பினர்கள் டயானா எடுல்ஜி, ரவி தோட்ஜி ஆகியோர் முன்னாள் மற்றும் இன்னாள் வீரர்களிடம் கருத்து கேட்டு வருகிறார்கள். இதற்கான கூட்டம் மும்பையில் நேற்று நடந்தது. இந்த கூட்டத்தில் முன்னாள் கேப்டன் திலிப் வெங்சர்க்கார், மஞ்ச்ரேகர், இர்பான் பதான், பார்த்தீவ் பட்டேல், அகர்கர், ரோகன் கவாஸ்கர் உள்ளிட்டோர் கலந்து கொண்டு தங்களது கருத்தை தெரிவித்தனர். முன்னாள் கேப்டன் கங்குலி ‘ஸ்கைப்’ மூலம் தனது ஆலோசனையை தெரிவித்தார். வீரர்களின் கருத்தை ஆய்வு செய்து இரட்டை ஆதாய பிரச்சினையை கையாள்வது குறித்து வெள்ளை அறிக்கை தயார் செய்யப்படும் என்று நிர்வாக கமிட்டி உறுப்பினர்கள் தெரிவித்தனர்.

* இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட்கோலி 2008-ம் ஆண்டு ஆகஸ்டு 18-ந் தேதி தம்புல்லாவில் நடந்த இலங்கைக்கு எதிரான ஒருநாள் போட்டியில் சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகம் ஆனார். விராட்கோலி 11 ஆண்டு கால சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கையை நேற்று முன்தினம் கடந்து இருக்கிறார். இது குறித்து விராட்கோலி உணர்ச்சிபூர்வமாக டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். அதில், ‘பதின் பருவத்தில் இதே நாளில் (ஆகஸ்டு 18-ந் தேதி) 11 ஆண்டுகளுக்கு முன்பு எனது சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கையை தொடங்கினேன். இந்த அளவுக்கு எனக்கு கடவுள் கருணை காட்டுவார் என்று கனவில் கூட நினைத்தது கிடையாது. உங்கள் கனவுகளை பின்தொடர வலிமையும், சக்தியும் இருக்கட்டும். எப்பொழுதும் சரியான வழியை பின்பற்றுங்கள்’ என்று தெரிவித்துள்ளார்.

* இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக ரவி சாஸ்திரி கடந்த வாரம் தேர்வு செய்யப்பட்டார். பேட்டிங், பந்து வீச்சு பயிற்சியாளர் உள்ளிட்ட பதவிகளுக்கான தேர்வு பணி நேற்று தொடங்கியது. எம்.எஸ்.கே.பிரசாத் தலைமையிலான தேர்வு குழுவினர் பயிற்சியாளர்களை தேர்வு செய்கின்றனர். வருகிற வியாழக்கிழமை இந்த தேர்வு குறித்து அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படும் என்று தெரிகிறது.


Next Story