பிற விளையாட்டு

சாக்‌ஷி மாலிக் உள்பட 3 வீராங்கனைகளுக்கு நோட்டீஸ் + "||" + Notice to 3 Players including Sakshi Malik

சாக்‌ஷி மாலிக் உள்பட 3 வீராங்கனைகளுக்கு நோட்டீஸ்

சாக்‌ஷி மாலிக் உள்பட 3 வீராங்கனைகளுக்கு நோட்டீஸ்
பயிற்சி முகாமில் இருந்து அனுமதியின்றி வெளியேறிய சாக்‌ஷி மாலிக் உள்பட 3 வீராங்கனைகளுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
புதுடெல்லி,

இந்திய மல்யுத்த அணியின் பயிற்சி முகாமில் இருந்து அனுமதியின்றி வெளியேறிய சாக்‌ஷி மாலிக் உள்பட 3 வீராங்கனைகளுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டு இருக்கிறது. எஞ்சிய வீராங்கனைகள் தகுதி சுற்று போட்டியில் கலந்து கொள்ள தடைவிதிக்கப்பட்டுள்ளது.


இந்திய மல்யுத்த பெண்கள் அணியினருக்கு பயிற்சி முகாம் உத்தரபிரதேச மாநிலம் லக்னோவில் உள்ள சாய் மையத்தில் நடந்து வருகிறது. இந்த பயிற்சி முகாமில் கலந்து கொண்ட 45 வீராங்கனைகளில் 25 பேர் உரிய அனுமதி பெறாமல் வீடு திரும்பி விட்டனர். அவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க இந்திய மல்யுத்த சம்மேளனம் முடிவு செய்துள்ளது.

பயிற்சி முகாமில் இருந்து அனுமதி இல்லாமல் வெளியேறியவர்களில் ஒலிம்பிக் போட்டியில் வெண்கலப்பதக்கம் வென்ற சாக்‌ஷி மாலிக் (62 கிலோ) மற்றும் சீமா பிஸ்லா (50 கிலோ), கிரண் (76 கிலோ) ஆகியோரும் அடங்குவார்கள். இவர்கள் மூவரும் அடுத்த மாதம் நடைபெறும் உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டிக்கான இந்திய அணிக்கு தேர்வு செய்யப்பட்டு இருக்கிறார்கள். இந்த 3 வீராங்கனைகளும் நாளைக்குள் (புதன்கிழமை) விளக்கம் அளிக்க வேண்டும் என்று இந்திய மல்யுத்த சம்மேளனம் சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டு இருக்கிறது.

பயிற்சி முகாமில் இருந்து அனுமதி இன்றி சென்ற மற்ற வீராங்கனைகளுக்கு தகுதி சுற்று போட்டிகளில் பங்கேற்க தடை விதிக்கப்பட்டதுடன், மறு உத்தரவு வரும் வரை பயிற்சி முகாம் எதிலும் பங்கேற்க முடியாது என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

இந்த பிரச்சினை குறித்து இந்திய மல்யுத்த சம்மேளன உதவி செயலாளர் வினோத் தோமர் கருத்து தெரிவிக்கையில், ‘சாக்‌ஷி மாலிக், சீமா, கிரண் ஆகியோர் எங்களது நோட்டீசுக்கு நாளைக்குள் விளக்கம் அளிக்க வேண்டும் என்று தெரிவித்து இருக்கிறோம். மற்றவர்கள் குறித்து நாங்கள் கவலைப்படவில்லை. மற்றவர்கள் ஒழுங்கு நடவடிக்கை காரணமாக முகாமில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். தேவைப்பட்டால் பிறகு அவர்களை பயிற்சி முகாமுக்கு அழைப்போம். பயிற்சி முகாமில் உள்ள வீராங்கனைகளுக்கு தொடர்ந்து பயிற்சிகள் நடைபெறும். வீராங்கனைகள் முகாமில் இருந்து சென்றதற்கு சொல்லும் காரணங்களை ஏற்றுக்கொள்ள முடியாது. உலக கோப்பை சாம்பியன்ஷிப் போட்டியில் கலந்து கொள்ள சாக்‌ஷி உள்ளிட்ட 3 வீராங் கனைகளுக்கு தடை விதிக்கப்படுமா? என்பது குறித்து தற்போது நான் கருத்து சொல்லமாட்டேன். இது குறித்து இந்திய மல்யுத்த சம்மேளனம் முடிவு செய்யும்’ என்று கூறினார்.

இதற்கிடையில் சாக்‌ஷி உள்பட 3 வீராங்கனைகளும் ரக்‌ஷா பந்தனையொட்டி வீட்டுக்கு சென்றதாகவும், அனுமதி பெறாமல் சென்றது தவறு தான் என்று மன்னிப்பு கேட்டுள்ளனர். இதனால் 3 பேரும் எச்சரிக்கையுடன் பயிற்சி முகாமில் சேர்த்துக்கொள்ளப்படுவார்கள் என்று தெரிகிறது.


தொடர்புடைய செய்திகள்

1. விழுப்புரம் அரசு பொறியியல் கல்லூரியில் இயந்திரம் தயாரித்தல் குறித்த பயிற்சி முகாம்
விழுப்புரம் அரசு பொறியியல் கல்லூரியில் இயந்திரம் தயாரித்தல் குறித்த பயிற்சி முகாமை கூடுதல் பதிவாளர் தொடங்கி வைத்தார்.