தீபா மாலிக்குக்கு கேல்ரத்னா விருது: ஜடேஜா, அஜய் தாகூர் உள்பட 19 பேருக்கு அர்ஜுனா விருது அதிகாரபூர்வ அறிவிப்பு


தீபா மாலிக்குக்கு கேல்ரத்னா விருது: ஜடேஜா, அஜய் தாகூர் உள்பட 19 பேருக்கு அர்ஜுனா விருது  அதிகாரபூர்வ அறிவிப்பு
x
தினத்தந்தி 20 Aug 2019 11:40 AM GMT (Updated: 20 Aug 2019 11:40 AM GMT)

தீபா மாலிக்குக்கு கேல்ரத்னா விருதும், ஜடேஜா, அஜய் தாகூர் உள்பட 19 பேருக்கு அர்ஜுனா விருது என மத்திய விளையாட்டு அமைச்சகம் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.

புதுடெல்லி, 

இந்திய விளையாட்டுத்துறையில் சாதிக்கும் வீரர், வீராங்கனைகளுக்கு ஆண்டுதோறும் ராஜீவ் காந்தி கேல்ரத்னா, அர்ஜுனா விருதுகள் வழங்கி கவுரவிக்கப்படுகிறது. இந்த ஆண்டுக்கான விருதுக்கு தகுதியானவர்களை தேர்வு செய்ய ஓய்வுபெற்ற நீதிபதி முகுந்தகம் ஷர்மா தலைமையில் குத்துச்சண்டை வீராங்கனை மேரிகோம், முன்னாள் நீளம் தாண்டுதல் வீராங்கனை அஞ்சு ஜார்ஜ், பெண்கள் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் அஞ்சும் சோப்ரா உள்பட 12 பேர் கொண்ட கமிட்டி அமைக்கப்பட்டது. 

இந்த கமிட்டியினர் கடந்த 2 நாட்களாக டெல்லியில் கூடி ஆலோசித்தனர். இதில் இந்தியாவின் ‘நம்பர் ஒன்’ மல்யுத்த வீரரும், ஆசிய, காமன்வெல்த் விளையாட்டு சாம்பியனுமான பஜ்ரங் பூனியாவுக்கு மிக உயரிய விருதான ராஜீவ் காந்தி கேல்ரத்னா விருது வழங்க பரிந்துரைப்பது என்று ஏற்கனவே ஒருமனதாக முடிவு செய்யப்பட்டது.

இந்த நிலையில் கேல்ரத்னா விருதை இந்த ஆண்டு மேலும் ஒருவர் பெறுகிறார். 2016-ம் ஆண்டு ரியோ பாரா ஒலிம்பிக்கில் குண்டு எறிதலில் வெள்ளிப்பதக்கம் வென்ற மாற்றுத் திறனாளி வீராங்கனையான தீபா மாலிக்குக்கும் கேல்ரத்னா விருது வழங்க பரிந்துரை செய்யப்பட்டு இருக்கிறது. அரியானாவைச் சேர்ந்த 48 வயதான தீபா மாலிக் பாரா ஒலிம்பிக்கில் பதக்கம் கைப்பற்றிய முதல் இந்திய வீராங்கனை என்ற மகத்தான சாதனைக்கு சொந்தக்காரர் ஆவார். மேலும் தொடர்ச்சியாக மூன்று பாரா ஆசிய விளையாட்டில் பதக்கம் வென்ற ஒரே இந்திய வீராங்கனையும் இவர் தான். இடுப்புக்கு கீழே உறுப்புகள் செயலிழந்ததால் கடந்த 17 ஆண்டுகளாக வீல்சேர் உதவியுடன் போட்டிகளில் பங்கேற்று சாதித்து வருவது குறிப்பிடத்தக்கது.

அர்ஜுனா விருதுக்கு 19 பேர் தேர்வு செய்யப்பட்டு இருக்கிறார்கள். இதில் இந்திய கிரிக்கெட் அணியின் ஆல்-ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா, பெண்கள் கிரிக்கெட் அணியின் சுழற்பந்து வீச்சாளர் பூனம் யாதவ், தடகள நட்சத்திரங்கள் தஜிந்தர் பால் சிங் தூர், முகமது அனாஸ், ஸ்வப்னா பர்மன், தமிழ் தலைவாஸ் கபடி அணியின் கேப்டன் அஜய் தாகூர் ஆகியோரும் அடங்குவர்.

அர்ஜுனா விருது பெறுபவர்கள் விவரம் வருமாறு:-

தஜிந்தர் பால் சிங் தூர் (தடகளம்), முகமது அனாஸ் (தடகளம்), தமிழகத்தை சேர்ந்த பாஸ்கரன் (பாடி பில்டிங்) , சோனியா லாதர் (குத்துச்சண்டை), ரவீந்திர ஜடேஜா (கிரிக்கெட்), சிங்லென்சனா சிங் (ஆக்கி), அஜய் தாகூர் (கபடி), கவுரவ் சிங் கில் (கார்பந்தயம்), பிரமோத் பாகத் (மாற்றுத்திறனாளி பேட்மிண்டன்), அஞ்சும் மோட்ஜில் (துப்பாக்கி சுடுதல்), ஹர்மீத் ரஜூல் தேசாய் (டேபிள் டென்னிஸ்), பூஜா தன்டா (மல்யுத்தம்), பவாட் மிர்சா (குதிரையேற்றம்), குர்பிரீத்சிங் சந்து (கால்பந்து), பூனம் யாதவ் (கிரிக்கெட்), ஸ்வப்னா பர்மன் (தடகளம்), சுந்தர் சிங் குர்ஜர் (மாற்றுத்திறனாளிகளுக்கான தடகளம்), சாய் பிரனீத் (பேட்மிண்டன்), சிம்ரன் சிங் ஷெர்ஜில் (போலோ).

சிறந்த பயிற்சியாளர்களுக்கான துரோணாச்சார்யா விருது:- விமல்குமார் (பேட்மிண்டன்), சந்தீப் குப்தா (டேபிள் டென்னிஸ்), மொகிந்தர் சிங் தில்லான் (தடகளம்), சிறந்த பயிற்சியாளருக்கான துரோணாச்சார்யா வாழ்நாள் சாதனையாளர் விருது:- மெஸ்பன் பட்டேல் (ஆக்கி), ராம்பிர் சிங் கோகர் (கபடி), சஞ்சய் பரத்வாஜ் (கிரிக்கெட்).

வாழ்நாள் சாதனையாளருக்கான தயான்சந்த் விருது:- மானுல் பிரெட்ரிக்ஸ் (ஆக்கி), ஆருப் பசாக் (டேபிள் டென்னிஸ்), மனோஜ்குமார் (மல்யுத்தம்), நிட்டேன் கிர்டான் (டென்னிஸ்), லால்ரெம்சங்கா (வில்வித்தை).

இந்த பட்டியலுக்கு மத்திய விளையாட்டு அமைச்சகம் ஒப்புதல் வழங்கி   இதற்கான அதிகாரபூர்வமான அறிவிப்பை வெளியிட்டு உள்ளது.

கேல்ரத்னா விருதுக்கு ரூ.7½ லட்சமும், மற்ற விருதுகளுக்கு ரூ.5 லட்சமும் பாராட்டு பட்டயத்துடன் ஊக்கத்தொகையும் வழங்கப்படும்.

Next Story