உலக பேட்மிண்டன் போட்டி: முன்னாள் ஒலிம்பிக் சாம்பியனுக்கு அதிர்ச்சி அளித்தார், பிரனாய்


உலக பேட்மிண்டன் போட்டி: முன்னாள் ஒலிம்பிக் சாம்பியனுக்கு அதிர்ச்சி அளித்தார், பிரனாய்
x
தினத்தந்தி 20 Aug 2019 10:30 PM GMT (Updated: 20 Aug 2019 9:21 PM GMT)

25-வது உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி சுவிட்சர்லாந்தின் பாசெல் நகரில் நடந்து வருகிறது.

பாசெல், 

25-வது உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி சுவிட்சர்லாந்தின் பாசெல் நகரில் நடந்து வருகிறது. இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நேற்று நடந்த 2-வது சுற்று ஆட்டம் ஒன்றில் 30-ம் நிலை வீரரான இந்தியாவின் பிரனாய், முன்னாள் ‘நம்பர் ஒன்’ வீரர் லின் டானுடன் (சீனா) மல்லுகட்டினார். 62 நிமிடங்கள் நீடித்த விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் பிரனாய் 21-11, 13-21, 21-7 என்ற செட் கணக்கில் லின் டானுக்கு அதிர்ச்சி அளித்து கால்இறுதிக்கு முந்தைய 3-வது சுற்றுக்கு முன்னேறினார். லின் டான், உலக சாம்பியன் பட்டத்தை 5 முறையும், ஒலிம்பிக்கில் தங்கப்பதக்கத்தை 2 முறையும் வென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. லின் டானுக்கு எதிராக 5-வது முறையாக மோதிய பிரனாய் அதில் பெற்ற 3-வது வெற்றி இதுவாகும். பிரனாய் அடுத்து ‘நம்பர் ஒன்’ வீரர் கென்டோ மோமோட்டாவை (ஜப்பான்) சந்திக்கிறார். மோமோட்டாவுக்கு எதிராக இதுவரை ஆடியுள்ள 4 ஆட்டங்களிலும் பிரனாய் தோற்று இருப்பது கவனிக்கத்தக்கது.

மற்றொரு ஆட்டத்தில் இந்தியாவின் சாய் பிரனீத் 21-16, 21-15 என்ற நேர் செட்டில் லீ டோங் கியனை (தென்கொரியாவை) வெளியேற்றி 3-வது சுற்றை எட்டினார். நேரடியாக 2-வது சுற்றில் ஆடும் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து, பாய் யூ போவை (சீனதைபே) இன்று எதிர்கொள்கிறார். மற்றொரு இந்திய வீராங்கனை சாய்னா நேவாலும் இன்று களம் காணுகிறார்.

Next Story