தேசிய ஊக்க மருந்து ஆய்வு மையத்துக்கு 6 மாதம் தடை உலக ஊக்க மருந்து தடுப்பு முகமை நடவடிக்கை


தேசிய ஊக்க மருந்து ஆய்வு மையத்துக்கு 6 மாதம் தடை உலக ஊக்க மருந்து தடுப்பு முகமை நடவடிக்கை
x
தினத்தந்தி 23 Aug 2019 10:00 PM GMT (Updated: 23 Aug 2019 8:32 PM GMT)

தேசிய ஊக்க மருந்து தடுப்பு ஆய்வு மையத்துக்கு 6 மாதம் தடை விதித்து உலக ஊக்க மருந்து தடுப்பு முகமை அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது.

புதுடெல்லி,

தேசிய ஊக்க மருந்து தடுப்பு ஆய்வு மையத்துக்கு 6 மாதம் தடை விதித்து உலக ஊக்க மருந்து தடுப்பு முகமை அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது.

ஆய்வு மையத்துக்கு 6 மாதம் தடை

இந்திய வீரர், வீராங்கனைகளிடம் சிறுநீர் மற்றும் ரத்த மாதிரி சேகரித்து தேசிய ஊக்க மருந்து தடுப்பு முகமை ஊக்க மருந்து பரிசோதனை நடத்தி வருகிறது. இந்த மாதிரிகள் தேசிய ஊக்க மருந்து ஆய்வு மையத்துக்கு (என்.டி.டி.எல்.) அனுப்பப்பட்டு ஆய்வு செய்யப்படுகிறது. இந்த ஆய்வு மையத்துக்கு கடந்த 2008-ம் ஆண்டு உலக ஊக்க மருந்து தடுப்பு முகமை (வாடா) அங்கீகாரம் அளித்தது.

தற்போது தேசிய ஊக்க மருந்து ஆய்வு மையத்தின் அங்கீகாரத்தை அடுத்த 6 மாதத்துக்கு இடைநீக்கம் செய்து உலக ஊக்க மருந்து தடுப்பு முகமை அதிரடியாக நடவடிக்கை எடுத்துள்ளது. இந்த தடை கடந்த 20-ந் தேதியில் இருந்து நடைமுறைக்கு வந்துள்ளது. தேசிய ஊக்க மருந்து தடுப்பு முகமை தொடர்ந்து வீரர், வீராங்கனைகளிடம் சிறுநீர் மற்றும் ரத்த மாதிரியை பரிசோதனைக்கு எடுக்கலாம். ஆனால் அதனை தேசிய ஊக்க மருந்து ஆய்வு மையத்தில் சோதனை செய்ய முடியாது. வெளிநாட்டில் உள்ள ‘வாடா’வினால் அங்கீகரிக்கப்பட்ட பரிசோதனை மையத்துக்கு அனுப்பி தான் சோதனை செய்ய முடியும். எனவே இனிமேல் ஊக்க மருந்து சோதனைக்கு ஆகும் செலவு கணிசமாக உயரும்.

காரணம் என்ன?

தேசிய ஊக்க மருந்து ஆய்வு மையத்தை தாங்கள் ஆய்வு செய்த போது சர்வதேச தரத்துக்கு இணையான நம்பகத்தன்மை கொண்டதாக அதன் ஆய்வகங்கள் இல்லை என்பதால் இடைநீக்கம் செய்யப்பட்டு இருப்பதாக ‘வாடா’ நேற்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஊக்க மருந்து சோதனைக்கு சேகரித்த மாதிரியை ஆய்வு செய்யும் முறை சர்வதேச தரத்துக்கு ஈடானதாக இல்லை என்று தெரியவந்ததாகவும் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

அடுத்த ஆண்டு (2020) டோக்கியோவில் ஒலிம்பிக் போட்டி நடைபெற இருக்கும் நிலையில் தேசிய ஊக்க மருந்து ஆய்வு மையத்துக்கு தடை விதிக்கப்பட்டு இருப்பது இந்தியாவுக்கு பின்னடைவாக கருதப்படுகிறது. இந்த தடையை எதிர்த்து அடுத்த 21 நாட்களுக்குள் தேசிய ஊக்க மருந்து ஆய்வு மையம் சுவிட்சர்லாந்தின் லாசானேவில் உள்ள சர்வதேச விளையாட்டு தீர்ப்பாயத்தில் அப்பீல் செய்யலாம்.

மிகப்பெரிய பின்னடைவு

இது குறித்து தேசிய ஊக்க மருந்து தடுப்பு முகமையின் டைரக்டர் ஜெனரல் நவின் அகர்வாலிடம் கேட்ட போது, ‘தேசிய ஊக்க மருந்து ஆய்வு மையம் தனியானது. சோதனை முடிவுக்கும் எங்களுக்கும் சம்பந்தம் கிடையாது. நாங்கள் சோதனைக்கு தேவையான மாதிரிகளை மட்டுமே சேகரித்து கொடுப்போம்’ என்றார்.

இந்த பிரச்சினை குறித்து இந்திய ஒலிம்பிக் சங்க தலைவர் நரிந்தர் பத்ரா கூறுகையில் ‘இந்திய வீரர்களிடம் ஊக்க மருந்து சோதனைக்காக சேகரிக்கப்படும் சிறுநீர், ரத்த மாதிரிகளை வெளிநாடுகளுக்கு அனுப்பி சோதனை செய்வதற்கு ஆகும் செலவை எங்களால் ஏற்க முடியாது. அதற்கான செலவுகள் நிச்சயம் அதிகரிக்கும். இதனால் இனிமேல் மாதிரிகளை சேகரிக்கும் அளவும் குறையும். ஒலிம்பிக் போட்டிக்கு இன்னும் 11 மாதங்களே இருக்கும் நிலையில் இந்த தடை விதிக்கப்பட்டு இருப்பது இந்திய விளையாட்டு துறைக்கு மிகப்பெரிய பின்னடைவாகும். சோதனைக்கு கூடுதலாக ஆகும் செலவுகளை தாங்கும் நிலையில் தேசிய விளையாட்டு அமைப்புகள் இல்லை’ என்றார்.

அப்பீல் செய்ய முடிவு

தடை காலத்துக்குள் வாடாவின் விதிமுறைகளின் படி சர்வதேச தரத்துக்கு தகுந்த படி தேசிய ஊக்க மருந்து ஆய்வு மையத்தின் ஆய்வக தரத்தை உயர்த்தி விட்டு விண்ணப்பித்தால் 6 மாதத்துக்கு பிறகு மீண்டும் அங்கீகாரம் கிடைக்க வாய்ப்பு உள்ளது.

தேசிய ஊக்க மருந்து தடுப்பு முகமையின் சோதனைக்குள் இந்திய கிரிக்கெட் வீரர்களை மத்திய விளையாட்டு அமைச்சகம் கட்டாயப்படுத்தி கொண்டு வந்த நிலையில் இந்த தடை விதிக்கப்பட்டு இருப்பது மத்திய விளையாட்டு அமைச்சகத்துக்கு தர்ம சங்கடத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

இந்த விவகாரம் குறித்து மத்திய விளையாட்டுத்துறை மந்திரி கிரண் ரிஜிஜூ வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘தேசிய ஊக்க மருந்து ஆய்வு மையத்தில் முன்பு சில பிரச்சினைகள் இருந்தது. நான் விளையாட்டு மந்திரியாக பதவி ஏற்றதும் அதில் கவனம் செலுத்தி அதனை சரிசெய்ய முயற்சி மேற்கொண்டேன். இந்த நிலையில் ‘வாடா’ எடுத்த இடைநீக்கம் முடிவு அதிர்ச்சி அளிக்கிறது. தேசிய ஊக்க மருந்து ஆய்வு மையத்துக்கு விதிக்கப்பட்ட தடையை எதிர்த்து சர்வதேச விளையாட்டு தீர்ப்பாயத்தில் அப்பீல் செய்வோம். அதற்கான நடவடிக்கைகளை ஏற்கனவே தொடங்கி விட்டோம்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story