உலக கோப்பை துப்பாக்கி சுடுதலில் தமிழக வீராங்கனை இளவேனில் தங்கம் வென்று அசத்தல்


உலக கோப்பை துப்பாக்கி சுடுதலில் தமிழக வீராங்கனை இளவேனில் தங்கம் வென்று அசத்தல்
x
தினத்தந்தி 29 Aug 2019 3:22 AM GMT (Updated: 29 Aug 2019 11:26 PM GMT)

உலக கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டியில் தமிழக வீராங்கனை இளவேனில் தங்கப்பதக்கம் வென்று அசத்தினார்.

ரியோடிஜெனீரோ,

உலக கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டி பிரேசில் தலைநகர் ரியோடிஜெனீரோவில் நடந்து வருகிறது. இதில் நேற்று முன்தினம் நடந்த பெண்களுக்கான 10 மீட்டர் ஏர்ரைபிள் பந்தயத்தில் இந்தியாவின் அபூர்வி சண்டிலா, அஞ்சும் மோட்ஜில், இளவேனில் வாலறிவன் உள்பட 109 வீராங்கனைகள் கலந்து கொண்டனர்.

தகுதி சுற்று முடிவில் இளவேனில் (629.4 புள்ளிகள்) 4-வது இடத்தையும், அஞ்சும் மோட்ஜில் (629.1 புள்ளிகள்) 5-வது இடத்தையும் பிடித்து இறுதிசுற்றுக்கு தகுதி பெற்றனர். உலக தரவரிசையில் முதலிடத்தில் உள்ள இந்திய வீராங்கனை அபூர்வி சண்டிலா (627.7 புள்ளிகள்) 11-வது இடத்துக்கு தள்ளப்பட்டு இறுதிசுற்று வாய்ப்பை இழந்தார்.

இதைத் தொடர்ந்து நடந்த 8 வீராங்கனைகள் இடையிலான இறுதி சுற்றில் இந்திய இளம் புயல் இளவேனில் குறிதவறாமல் சுட்டு பிரமிப்பூட்டினார். அவர் மொத்தம் 251.7 புள்ளிகள் குவித்து தங்கப்பதக்கத்தை சொந்தமாக்கினார். இங்கிலாந்து வீராங்கனை சியனாட் மெக்கின்தோஷ் 250.6 புள்ளிகளுடன் வெள்ளிப்பதக்கமும், சீன தைபே வீராங்கனை யிங் ஷின் லின் 229.9 புள்ளிகளுடன் வெண்கலப்பதக்கமும் பெற்றனர். அஞ்சும் மோட்ஜில் 166.8 புள்ளிகளுடன் 6-வது இடத்தை பெற்று ஏமாற்றம் அளித்தார்.

உலக கோப்பை துப்பாக்கி சுடுதலில் பெண்களுக்கான 10 மீட்டர் ஏர்ரைபிள் பந்தயத்தில் தங்கப்பதக்கம் வென்ற 3-வது இந்திய வீராங்கனை என்ற பெருமையை 20 வயதான இளவேனில் பெற்று இருக்கிறார். இளவேனில் கடலூரில் பிறந்தவர். தமிழகத்தை சேர்ந்தவர் என்றாலும் அவருக்கு 3 வயது இருக்கும்போது, அவரது குடும்பம் குஜராத்தில் உள்ள ஆமதாபாத்துக்கு இடம் பெயர்ந்து விட்டது. தற்போது அவர் அங்கு தான் வசித்து வருகிறார்.

சீனியர் உலக கோப்பை போட்டியில் இளவேனில் ருசித்த முதல் பதக்கம் இதுவாகும். ஏற்கனவே உலக கோப்பை ஜூனியர் போட்டியில் தங்கம் வென்று இருக்கிறார். மகுடம் சூடிய பிறகு இளவேனில் அளித்த பேட்டியில், ‘தங்கம் வென்று சாதனை படைத்தது திரில்லிங்காக இருக்கிறது. இந்த வெற்றி அடுத்து வரும் சர்வதேச போட்டிகளுக்கு எனக்கு நம்பிக்கையை அளிக்கும். துப்பாக்கி சுடுதலில் நான் சாதிக்க உறுதுணையாக இருக்கும் எனது பெற்றோருக்கு இந்த பதக்கத்தை அர்ப்பணிக்கிறேன். 2 மாதங்கள் கழித்து சீனாவில் நடைபெறும் உலக கோப்பை போட்டிக்கு தயாராகுவது தான் எனது அடுத்த இலக்கு’ என்றார்.

‘ஒலிம்பிக் போட்டியிலும் இளவேனில் தங்கம் வெல்வார்’ - கடலூரில் வசிக்கும் அவரது தாத்தா நம்பிக்கை

உலக கோப்பை துப்பாக்கி சுடுதலில் தங்கப்பதக்கத்தை வசப்படுத்திய இளவேனிலின் சொந்த ஊர், கடலூர் அருகே உள்ள காராமணிக்குப்பம் ஆகும். அவர் வெற்றி பெற்றதை அறிந்ததும் அவருடைய தாத்தாவான ஓய்வுபெற்ற கால்நடை ஆய்வாளர் உருத்திராபதி, பாட்டி கிருஷ்ணவேணி ஆகியோர் காராமணிக்குப்பம் மக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடினர். பின்னர் உருத்திராபதி நிருபர்களுக்கு அளித்த பேட்டியில், ‘எனது மகன் வாலறிவன், மருமகள் சரோஜா ஆகிய இருவரும் முனைவர் பட்டம் பெற்றவர்கள். தற்போது குஜராத் மாநிலம் ஆமதாபாத் நகரில் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு இறைவன் என்ற மகனும், இளவேனில் என்ற மகளும் உள்ளனர். இறைவன் ராணுவத்தில் பணியாற்றுகிறார். இறைவன் துப்பாக்கி சுடுதல் பயிற்சி பெற்றுள்ளார். இதை பார்த்த இளவேனிலுக்கும் துப்பாக்கி சுடுதல் பயிற்சி பெற ஆசை ஏற்பட்டது. பெற்றோரும், அவரது ஆசையை நிறைவேற்ற துப்பாக்கி சுடுதல் பயிற்சிக்கு அனுப்பி வைத்தனர். அன்று முதல் இளவேனில் கடுமையாக துப்பாக்கி சுடுதல் பயிற்சி மேற்கொண்டார். படிப்பிலும் சுட்டியான இளவேனில் பிளஸ்-2 பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் எடுத்ததால் டாக்டர் மற்றும் என்ஜினீயரிங் கல்லூரியில் இடம் கிடைத்தது. ஆனால் அந்த துறை படிப்பில் கவனம் செலுத்தினால் துப்பாக்கி சுடுதல் பயிற்சியில் கவனம் செலுத்த முடியாது என்று எண்ணிய இளவேனில் அந்த படிப்பை தவிர்த்து, இளங்கலை (ஆங்கிலம்) பட்டப்படிப்பு படித்து வருகிறார்.

துப்பாக்கி சுடுதலில் தொடர்ச்சியாக சாதித்து வரும் இளவேனில் தற்போது உலககோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டியில் தங்கம் வென்று பெருமை சேர்த்துள்ளார். தொடர்ந்து அவரை ஊக்கப்படுத்தி வருகிறோம். அடுத்த ஆண்டு நடக்கும் ஒலிம்பிக் போட்டியிலும் இளவேனில் தங்கப்பதக்கம் வெல்வார் என்ற நம்பிக்கை உள்ளது’ என்று தெரிவித்தார்.


Next Story