உலக கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டி: இந்தியாவுக்கு மேலும் ஒரு தங்கப்பதக்கம்


உலக கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டி: இந்தியாவுக்கு மேலும் ஒரு தங்கப்பதக்கம்
x
தினத்தந்தி 31 Aug 2019 12:30 AM GMT (Updated: 31 Aug 2019 12:30 AM GMT)

பிரேசிலில் நடந்து வரும் உலக கோப்பை துப்பாக்கி சுடுதலில் இந்திய வீரர் அபிஷேக் வர்மா தங்கப்பதக்கம் வென்றார்.

ரியோடி ஜெனீரோ,

உலக கோப்பை துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் போட்டி பிரேசிலின் ரியோடி ஜெனீரோ நகரில் நடந்து வருகிறது. இதில் நேற்று முன்தினம் நடந்த ஆண்களுக்கான 10 மீட்டர் ஏர்பிஸ்டல் பிரிவின் தகுதி சுற்றில் 87 வீரர்கள் கலந்து கொண்டனர். இவர்களில் இருந்து டாப்-8 இடங்களை பிடித்த வீரர்கள் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றனர்.

இறுதி சுற்றில் மொத்தம் 24 ரவுண்ட் இலக்கை குறி பார்த்து சுட வேண்டும். 12-வது ரவுண்டுக்கு பிறகு கடைசி இடத்தில் உள்ள வீரர்கள் கழற்றி விடப்பட்டு கொண்டே வருவார்கள். இந்த பாணியில் நடந்த இந்த பந்தயத்தில் அசத்திய இந்திய வீரரான அபிஷேக் வர்மா தொடக்கத்தில் 2-வது இடத்தில் இருந்தாலும், 12-வது ரவுண்டுக்கு பிறகு முதலிடத்துக்கு முன்னேறினார். ஆனால், அவருக்கும் துருக்கி வீரர் இஸ்மாயில் கெலிசுக்கும் இடையே இறுதிவரை கடும் போட்டி நிலவியது. கடைசி ரவுண்டில் அபிஷேக் வர்மா 10.7 புள்ளிகள் திரட்டினார். அதே சமயம் இஸ்மாயில் கெலிஸ் 9.7 புள்ளிகளே எடுத்தார். இதனால் முன்னிலையை தக்க வைத்துக் கொண்ட அபிஷேக் வர்மா 244.2 புள்ளிகளுடன் முதலிடத்தை பிடித்து தங்கப்பதக்கத்தை தட்டிச் சென்றார். ஆசிய விளையாட்டு சாம்பியனான 30 வயதான அபிஷேக் வர்மா பகுதி நேர வழக்கறிஞராக பணியாற்றுவது குறிப்பிடத்தக்கது.

துருக்கி வீரர் இஸ்மாயில் கெலிஸ் 243.1 புள்ளிகளுடன் வெள்ளிப்பதக்கத்தை வென்றார். மற்றொரு இந்திய வீரரான சவுரப் சவுத்ரி 221.9 புள்ளிகளுடன் 3-வது இடத்தை பிடித்து வெண்கலப்பதக்கத்தை கைப்பற்றினார். 17 வயதான சவுரப் சவுத்ரி இந்த ஆண்டில் உலக போட்டியில் வென்ற 6-வது பதக்கம் இதுவாகும்.

தகுதி சுற்றில் முதலாவதாக வந்த உக்ரைன் மூத்த வீரர் ஓலே ஒமெல்சக் 200.8 புள்ளிகளுடன் 4-வது இடத்துக்கு தள்ளப்பட்டார். முன்னாள் ஒலிம்பிக் மற்றும் உலக சாம்பியனான சீனாவின் பாங் வீயும் (7-வது இடம்) ஏமாற்றத்திற்கு உள்ளானார்.

ஆண்களுக்கான 50 மீட்டர் ரைபிள் மூன்று நிலைப் பிரிவில் குரோஷிய வீரர் பீட்டர் கோர்சா 462.2 புள்ளிகளுடன் தங்கப்பதக்கத்தை கபளகரம் செய்தார். இந்திய வீரர் சஞ்சீவ் ராஜ்புத் 462 புள்ளிளுடன் வெள்ளிப்பதக்கத்தை வசப்படுத்தியதுடன் இந்த பிரிவில் ஒலிம்பிக் தகுதி இடத்தையும் இந்தியாவுக்கு பெற்றுத்தந்தார். இதையும் சேர்த்து 2020-ம் ஆண்டு டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்குக்கு இந்தியா தரப்பில் துப்பாக்கி சுடுதலில் 8 இடங்கள் உறுதியாகி உள்ளன.

நடப்பு உலக துப்பாக்கி சுடுதலில் இந்தியாவின் பதக்கவேட்டையை தமிழக வீராங்கனை இளவேனில் தங்கப்பதக்கத்துடன் தொடங்கி வைத்தார். இந்தியா இதுவரை 2 தங்கம், ஒரு வெள்ளி, ஒரு வெண்கலம் என்று 4 பதக்கங்களுடன் பட்டியலில் முதலிடம் வகிக்கிறது.


Next Story