மாநில ஜூனியர் தடகளம்: நீளம் தாண்டுதலில் ஆன்ட்ரியா சாதனை


மாநில ஜூனியர் தடகளம்: நீளம் தாண்டுதலில் ஆன்ட்ரியா சாதனை
x
தினத்தந்தி 31 Aug 2019 11:13 PM GMT (Updated: 31 Aug 2019 11:13 PM GMT)

காஞ்சீபுரம், 34-வது மாநில ஜூனியர் தடகள சாம்பியன்ஷிப் போட்டி சென்னை நேரு ஸ்டேடியத்தில் நடந்து வருகிறது.

சென்னை,

காஞ்சீபுரம் மாவட்ட தடகள சங்கம் சார்பில், மாவட்டங்களுக்கு இடையிலான 34-வது மாநில ஜூனியர் தடகள சாம்பியன்ஷிப் போட்டி சென்னை நேரு ஸ்டேடியத்தில் நடந்து வருகிறது. இதில் 2-வது நாளான நேற்று நடந்த பெண்களுக்கான 20 வயதுக்கு உட்பட்ட பிரிவில் நீளம் தாண்டுதலில் காஞ்சீபுரம் வீராங்கனை ஆன்ட்ரியா 6.22 மீட்டர் தூரம் தாண்டி புதிய போட்டி சாதனையுடன் தங்கப்பதக்கம் வென்றார். இதன் 5 ஆயிரம் மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் நெல்லை வீராங்கனை பிரியங்காவும், வட்டு எறிதலில் சென்னை வீராங்கனை காருண்யாவும், 100 மீட்டர் தடை ஓட்டத்தில் சென்னை வீராங்கனை ஸ்ரீரேஷ்மாவும் முதலிடம் பிடித்தனர். 18 வயதுக்கு உட்பட்ட பிரிவில் குண்டு எறிதலில் காஞ்சீபுரம் வீராங்கனை ஜென்சி சூசன் (14.07 மீட்டர்) புதிய போட்டி சாதனையுடன் முதலிடத்தையும், டிரிபிள் ஜம்ப் பந்தயத்தில் காஞ்சீபுரம் வீராங்கனை பபிஷா (12.34 மீட்டர்) புதிய போட்டி சாதனையுடன் முதலிடத்தையும் தனதாக்கினார்கள். இதன் 3 ஆயிரம் மீட்டர் ஓட்டத்தில் ஹேமலதாவும் (திருவண்ணாமலை), 100 மீட்டர் தடை ஓட்டத்தில் தபிதாவும் (காஞ்சீபுரம்) வெற்றி பெற்றனர். 16 வயதுக்கு உட்பட்ட பிரிவில் ஈட்டி எறிதலில் ஐஸ்வர்யா (ராமநாதபுரம்) தங்கம் வென்றார். 14 வயதுக்கு உட்பட்ட பிரிவில் நீளம் தாண்டுதலில் பமிலா வர்ஷினி (மதுரை) முதலிடம் பிடித்தார்.

ஆண்களுக்கான 20 வயதுக்கு உட்பட்ட பிரிவில் 10 ஆயிரம் மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் கோவை வீரர் சதீஷ்குமார் (32 நிமிடம் 33.10 வினாடி) புதிய போட்டி சாதனையுடன் முதலிடத்தை சொந்தமாக்கினார். இதன் 110 மீட்டர் தடை ஓட்டத்தில் காஞ்சீபுரம் வீரர் ரவிசங்கர் தங்கப்பதக்கம் வென்றார். 18 வயதுக்கு உட்பட்ட பிரிவில் 3 ஆயிரம் மீட்டர் ஓட்டத்தில் காஞ்சீபுரம் வீரர் ராமனும், உயரம் தாண்டுதலில் கோவை வீரர் அரவிந்தும், ஈட்டி எறிதலில் திருப்பூர் வீரர் சூர்யாவும், டிரிபிள் ஜம்ப்பில் கோவை வீரர் டொனால்டும், 110 மீட்டர் தடை ஓட்டத்தில் தேனி வீரர் ஹரி ராமும் தங்கப்பதக்கம் பெற்றனர். 16 வயதுக்கு உட்பட்ட பிரிவில் ஈட்டி எறிதலில் காஞ்சீபுரம் வீரர் பன்னை அலங்காரா பண்டும், 100 மீட்டர் தடை ஓட்டத்தில் திருப்பூர் வீரர் விஷ்ணு குமாரும் முதலிடம் பிடித்தனர்.

Next Story