ஜஸ்பிரித் பும்ராவின் பந்து வீச்சு துல்லியமாக இருக்கிறது; இயான் பிஷப்


ஜஸ்பிரித் பும்ராவின் பந்து வீச்சு துல்லியமாக இருக்கிறது; இயான் பிஷப்
x
தினத்தந்தி 3 Sep 2019 1:26 AM GMT (Updated: 3 Sep 2019 1:26 AM GMT)

ஜஸ்பிரித் பும்ரா பந்து வீச்சு துல்லியமாக இருக்கிறது என முன்னாள் வெஸ்ட்இண்டீஸ் வீரர் இயான் பிஷப் கூறியுள்ளார்.

* டெலிவிஷன் வர்ணனையாளரும், வெஸ்ட்இண்டீஸ் முன்னாள் வீரருமான இயான் பிஷப் வர்ணனையின் போது பேசுகையில், ‘இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா பந்து வீச்சு முறை விதிமுறைக்கு மாறாக இருப்பதாக சிலர் கேள்வி எழுப்புகிறார்கள். அவர்களது கேள்வியை நான் நம்பவில்லை. பும்ராவின் பந்து வீச்சு தனித்துவமானது. விதிமுறைக்கு உட்பட்டதாகவே அவரது பந்து வீச்சு உள்ளது. அவரது பவுலிங் துல்லியமாக இருக்கிறது. குறை கூறுபவர்கள் கண்ணாடியில் பார்க்கட்டும்’ என்று தெரிவித்தார். இதேபோல் இந்திய அணியின் முன்னாள் கேப்டனும், சக வர்ணனையாளருமான கவாஸ்கர் கருத்து தெரிவிக்கையில், ‘பும்ராவின் பந்து வீச்சு குறித்து கேள்வி எழுப்புவர்கள் யார்? என்று சொல்ல முடியுமா?. அவர் கையை மேலே உயர்த்தி நேராக பந்து வீசுகிறார். அவர் முழங்கையை மடக்கவில்லை. அவரது பந்து வீச்சு அருமையாக உள்ளது’ என்றார்.

* இங்கிலாந்துக்கு எதிரான ஆஷஸ் டெஸ்ட் போட்டி தொடரில் முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 251 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 2-வது டெஸ்ட் போட்டி டிராவில் முடிந்தது. லீட்சில் நடந்த 3-வது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி ஒரு விக்கெட் வித்தியாசத்தில் திரில் வெற்றியை பெற்றது. முதல் 2 டெஸ்ட் போட்டிகளில் ஆஸ்திரேலிய அணியின் ஆலோசகராக செயல்பட்ட முன்னாள் கேப்டன் ஸ்டீவ் வாக் 3-வது டெஸ்ட் போட்டியின் போது ஒரு விழாவில் பங்கேற்க ஆஸ்திரேலியா திரும்பி விட்டார். இங்கிலாந்து-ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான 4-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி மான்செஸ்டரில் நாளை தொடங்குகிறது. இந்த நிலையில் ஸ்டீவ் வாக்கை, ஆஸ்திரேலிய அணி நிர்வாகம் இங்கிலாந்து வந்து அணியினருடன் இணைந்து ஆலோசகராக செயல்பட அழைப்பு விடுத்துள்ளது. அதனை ஏற்று அவர் இங்கிலாந்து திரும்புகிறார்.

* 2012-ம் ஆண்டு லண்டனில் நடந்த ஒலிம்பிக் போட்டியில் வெண்கலப்பதக்கம் வென்ற இந்திய துப்பாக்கி சுடுதல் வீரர் ககன் நரங் இந்த ஆண்டில் எந்தவொரு போட்டியிலும் பங்கேற்கவில்லை. 8 மாத ஓய்வுக்கு பிறகு மீண்டும் அவர் களம் திரும்ப இருக்கிறார். டெல்லியில் இந்த வாரம் நடைபெற இருக்கும் தேசிய தேர்வு போட்டியில் கலந்து கொள்ள இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

* இலங்கை-நியூசிலாந்து அணிகள் இடையிலான 3 ஆட்டங்கள் கொண்ட 20 ஓவர் போட்டி தொடரில் பல்லகெலேவில் நடந்த முதலாவது 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் நியூசிலாந்து அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இந்த நிலையில் இலங்கை-நியூசிலாந்து அணிகள் இடையிலான 2-வது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி இன்று (செவ்வாய்க்கிழமை) நடக்கிறது. டிம் சவுதி தலைமையிலான நியூசிலாந்து அணி இந்த போட்டியில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்ற தீவிரம் காட்டும். அதேநேரத்தில் உள்ளூரில் தொடரை இழக்காமல் இருக்க மலிங்கா தலைமையிலான இலங்கை அணி கடுமையாக போராடும். எனவே இந்த ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது. இந்திய நேரப்படி இரவு 7 மணிக்கு தொடங்கும் இந்த போட்டியை சோனி சிக்ஸ் சேனல் நேரடியாக ஒளி பரப்பு செய்கிறது.

Next Story