ஒலிம்பிக் துப்பாக்கி சுடுதலில் இந்தியா பதக்கம் வெல்லும்- விளையாட்டுத்துறை மந்திரி கிரண் ரிஜிஜூ நம்பிக்கை


ஒலிம்பிக் துப்பாக்கி சுடுதலில் இந்தியா பதக்கம் வெல்லும்- விளையாட்டுத்துறை மந்திரி கிரண் ரிஜிஜூ நம்பிக்கை
x
தினத்தந்தி 7 Sep 2019 1:39 AM GMT (Updated: 7 Sep 2019 1:39 AM GMT)

ஒலிம்பிக் துப்பாக்கி சுடுதலில் இந்தியா பதக்கம் வெல்லும் என்று விளையாட்டுத்துறை மந்திரி கிரண் ரிஜிஜூ நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி,

பிரேசிலில் சமீபத்தில் நடந்த உலக கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டியில் இந்தியா 5 தங்கம், 2 வெள்ளி, 2 வெண்கலம் என்று மொத்தம் 9 பதக்கங்களை வென்று பட்டியலில் முதலிடம் பிடித்தது. சாதனை படைத்த இந்திய துப்பாக்கி சுடுதல் வீரர், வீராங்கனைகளான அபூர்வி சண்டிலா, அஞ்சும் மோட்ஜில், இளவேனில், மானு பாகெர், யாஷ்அஸ்வினி, சஞ்சீவ் ராஜ்புத், அபிஷேக் வர்மா, தீபக்குமார் ஆகியோர் நேற்று மத்திய விளையாட்டுத்துறை மந்திரி கிரண் ரிஜிஜூவை டெல்லியில் சந்தித்து வாழ்த்து பெற்றனர். தேசிய துப்பாக்கி சுடுதல் சங்க தலைவர் ரனிந்தர் சிங்கும் அப்போது உடன் இருந்தார்.


உலக கோப்பை துப்பாக்கி சுடுதலில் இந்திய அணியின் செயல்பாடு மெச்சத்தகுந்த வகையில் இருந்தது. இதற்காக ஒட்டுமொத்த அணியினரையும் பாராட்டுகிறேன். அடுத்த ஆண்டு டோக்கியாவில் நடக்கும் ஒலிம்பிக் போட்டிக்கு துப்பாக்கி சுடுதல் பிரிவில் இந்தியாவுக்கு இதுவரை 9 இடங்கள் உறுதியாகியுள்ளன. இந்த இடத்தை முடிந்தவரை 12 இடங்களாக உயர்த்தும்படி வீரர்களிடம் கூறியிருக்கிறேன். உலக அளவில் துப்பாக்கி சுடுதல் போட்டியில் நாம் தற்போது உயர்ந்த நிலையில் இருக்கிறோம். ஒலிம்பிக் போட்டியிலும் அது எதிரொலிக்க வேண்டும். ஒலிம்பிக்கில் நிச்சயம் நம்மால் கணிசமான பதக்கங்களை வெல்ல முடியும். நமக்கு அதிக நம்பிக்கையை கொடுக்கும் பிரிவுகளில் ஒன்றாக துப்பாக்கி சுடுதல் திகழ்கிறது.

காமன்வெல்த் விளையாட்டு சம்மேளனத்தில் முக்கியமான நாடுகளில் இந்தியாவும் ஒன்று. 2022-ம் ஆண்டு பர்மிங்காமில் நடக்கும் காமன்வெல்த் விளையாட்டு போட்டியில் இருந்து துப்பாக்கி சுடுதல் பந்தயம் நீக்கப்பட்டதால் நாங்கள் அதிர்ச்சி அடைந்து இருக்கிறோம். மீண்டும் துப்பாக்கி சுடுதல் பிரிவை சேர்க்க முயற்சித்து வருகிறோம். இது தொடர்பாக இங்கிலாந்தின் விளையாட்டுத்துறை செயலாளருக்கு கடிதம் எழுதி இருக்கிறேன்.

இவ்வாறு கிரண் ரிஜிஜூ கூறினார்.

Next Story