டென்னிஸ் தரவரிசையில் சுமித் நாகல் முன்னேற்றம்


டென்னிஸ் தரவரிசையில் சுமித் நாகல் முன்னேற்றம்
x
தினத்தந்தி 10 Sep 2019 12:21 AM GMT (Updated: 10 Sep 2019 12:21 AM GMT)

டென்னிஸ் தரவரிசையில் சுமித் நாகல் முன்னேற்றம் கண்டுள்ளார்.


டென்னிஸ் தரவரிசையில் சுமித் நாகல் முன்னேற்றம்

உலக டென்னிஸ் வீரர்களின் தரவரிசை பட்டியலை சர்வதேச டென்னிஸ் சம்மேளனம் நேற்று வெளியிட்டது. இதன்படி ஆண்கள் ஒற்றையர் தரவரிசையில் செர்பியா வீரர் ஜோகோவிச் (9,865 புள்ளிகள்) முதலிடத்திலும், அமெரிக்க ஓபன் சாம்பியன் பட்டம் வென்ற ஸ்பெயின் வீரர் ரபெல் நடால் (9,225 புள்ளிகள்) 2-வது இடத்திலும், சுவிட்சர்லாந்து வீரர் ரோஜர் பெடரர் (7,130 புள்ளிகள்) 3-வது இடத்திலும் தொடருகின்றனர். அமெரிக்க ஓபன் இறுதிப்போட்டியில் தோல்வி கண்ட ரஷிய வீரர் டேனில் மெட்விடேவ் (5,235 புள்ளிகள்) ஒரு இடம் முன்னேறி முதல்முறையாக 4-வது இடத்தை பிடித்துள்ளார். ஆஸ்திரியா வீரர் டோமினிக் திம் (4,575 புள்ளிகள்) ஒரு இடம் சரிந்து 5-வது இடம் பெற்றார். அமெரிக்க ஓபனில் முதல் சுற்றில் தோல்வி கண்டு வெளியேறிய இந்திய வீரர் சுமித் நாகல் 16 இடங்கள் ஏற்றம் கண்டு 174-வது இடம் பிடித்துள்ளார். மற்றொரு இந்திய வீரர் ராம்குமார் ராமநாதன் ஒரு இடம் முன்னேறி 176-வது இடம் பெற்றுள்ளார். இந்திய வீரர்களில் பிரஜ்னேஷ் குணேஸ்வரன் 3 இடம் முன்னேறி 85-வது இடத்தில் உள்ளார். பெண்கள் ஒற்றையர் தரவரிசையில் நவோமி ஒசாகா (ஜப்பான்), ஆஷ்லி பார்டி (ஆஸ்திரேலியா), கரோலினா பிளிஸ்கோவா (செக்குடியரசு), சிமோனா ஹாலெப் (ருமேனியா), ஸ்விடோலினா (உக்ரைன்) ஆகியோர் முறையே முதல் 5 இடங்களில் நீடிக்கின்றனர்.

ரவிசாஸ்திரிக்கு சம்பளம் உயர்வு

இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் ரவிசாஸ்திரியின் பதவி காலம் சமீபத்தில் 2 ஆண்டுகள் நீட்டிக்கப்பட்டது. புதிய ஒப்பந்தத்தின்படி அவருக்கு 20 சதவீதம் சம்பள உயர்வு அளிக்கப்பட்டுள்ளது. முன்பு ஆண்டுக்கு ரூ.8 கோடி வாங்கிய ரவி சாஸ்திரிக்கு இனிமேல் ஆண்டுக்கு ரூ.9.60 கோடி சம்பளமாக கிடைக்கும்.

இங்கிலாந்து அணி கேப்டனாக தொடர விருப்பம்-ஜோரூட்

ஆஷஸ் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி தொடரில் மான்செஸ்டரில் நடந்த 4-வது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 185 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் ஆஸ்திரேலிய அணி 2-1 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இவ்விரு அணிகள் இடையிலான 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி லண்டன் ஓவல் மைதானத்தில் வருகிற 12-ந் தேதி தொடங்குகிறது. இந்த போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்று தொடரை டிரா செய்தாலும் நடப்பு சாம்பியன் என்ற வகையில் ஆஸ்திரேலிய அணி ஆஷஸ் கோப்பையை தக்க வைத்து கொள்ளும். 2001-ம் ஆண்டுக்கு பிறகு இங்கிலாந்து மண்ணில் ஆஸ்திரேலிய அணி ஆஷஸ் கோப்பையை தக்க வைத்து கொள்வது இது முதல்முறையாகும்.

கடைசி ஆஷஸ் டெஸ்ட் போட்டிக்கான இங்கிலாந்து அணியில் மாற்றம் எதுவும் இல்லை என்று நேற்று அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் இங்கிலாந்து அணி கேப்டன் ஜோரூட் அளித்த ஒரு பேட்டியில், ‘ஆஷஸ் தொடரில் தோல்வி கண்டது ஏமாற்றமும், வருத்தமும் அளிக்கிறது. இங்கிலாந்து டெஸ்ட் அணியின் கேப்டனாக இருப்பது அருமையான வாய்ப்பாகும். தோல்வியை சந்தித்தாலும் கேப்டன் பொறுப்பில் தொடரவே விரும்புகிறேன். எங்கள் அணி வீரர்கள் எல்லோரும் வெற்றிக்கான ஆர்வத்தில் உள்ளனர். இந்த போட்டியில் ஸ்டீவன் சுமித்தை (ஆஸ்திரேலியா) தவிர்த்து விட்டால் இரு அணிகளிலும் பேட்டிங்கிலும் யாரும் ஜொலிக்கவில்லை. ஸ்டீவன் சுமித் நல்ல பார்மில் உள்ளார். அவருக்கு எதிரான வாய்ப்பை கோட்டை விட்டது எங்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தியது. இந்த தொடரில் பவுலர்கள் தான் ஆதிக்கம் செலுத்தி வருகிறார்கள்’ என்று தெரிவித்தார்.


Next Story