பிற விளையாட்டு

புரோ கபடி லீக்: தமிழ் தலைவாஸ் அணியின் தோல்வி தொடருகிறது + "||" + Pro Kabaddi League: The defeat of the Tamil Thalaivas continues

புரோ கபடி லீக்: தமிழ் தலைவாஸ் அணியின் தோல்வி தொடருகிறது

புரோ கபடி லீக்: தமிழ் தலைவாஸ் அணியின் தோல்வி தொடருகிறது
புரோ கபடி லீக் தொடரில் நேற்று நடந்த லீக் ஆட்டத்தில் தமிழ் தலைவாஸ் அணி 25-51 என்ற புள்ளி கணக்கில் பாட்னா பைரட்ஸ் அணியிடம் தோல்வி கண்டது.
கொல்கத்தா,

7-வது புரோ கபடி லீக் தொடர் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் கொல்கத்தாவில் நேற்றிரவு நடந்த 83-வது லீக் ஆட்டத்தில் தமிழ் தலைவாஸ்-பாட்னா பைரட்ஸ் அணிகள் மோதின. ஆட்டத்தின் தொடக்கத்திலேயே தமிழ் தலைவாசை ‘ஆல்-அவுட்’ செய்த பாட்னா அணி முதற்பாதியில் 18-13 என்ற புள்ளி கணக்கில் முன்னிலை பெற்றது.


பிற்பாதியிலும் தமிழ் தலைவாஸ் அணியின் ஆட்டம் எடுபடவில்லை. பாட்னா பைரட்ஸ் அணி அடுத்தடுத்து 3 முறை தமிழ் தலைவாஸ் அணியை ‘ஆல்-அவுட்’ செய்து அசத்தியது. கடைசி வரை ஆதிக்கம் செலுத்திய பாட்னா பைரட்ஸ் அணி 51-25 என்ற புள்ளி கணக்கில் தமிழ் தலைவாஸ் அணியை எளிதில் தோற்கடித்தது. இந்த போட்டியில் 26 புள்ளிகள் குவித்த பாட்னா பைரட்ஸ் அணியின் நட்சத்திர வீரர் பர்தீப் நர்வால் புரோ கபடி வரலாற்றில் 1,000 புள்ளிகளை கடந்த முதல் வீரர் என்ற பெருமையை பெற்றார். 14-வது ஆட்டத்தில் ஆடிய பாட்னா பைரட்ஸ் அணி பெற்ற 4-வது வெற்றி இதுவாகும். 15-வது ஆட்டத்தில் ஆடிய தமிழ் தலைவாஸ் அணி சந்தித்த 10-வது தோல்வி இது.

முன்னதாக நடந்த மற்றொரு ஆட்டத்தில் உ.பி.யோத்தா-குஜராத் பார்ச்சுன் ஜெயன்ட்ஸ் அணிகள் சந்தித்தன. இந்த ஆட்டத்தின் முதல் பாதியில் உ.பி. யோத்தா அணி, குஜராத்தை ‘ஆல்-அவுட்’ செய்ததுடன் 16-9 என்ற புள்ளி கணக்கில் முன்னிலையும் பெற்றது. பரபரப்பான இந்த ஆட்டத்தில் பிற்பாதியில் குஜராத் அணி நெருக்கடி அளித்தாலும் வெற்றியை நெருங்க முடியவில்லை. முடிவில் உ.பி.யோத்தா அணி 33-26 என்ற புள்ளி கணக்கில் குஜராத் அணியை சாய்த்தது. 14-வது ஆட்டத்தில் ஆடிய உ.பி.யோத்தா அணி பெற்ற 7-வது வெற்றி இதுவாகும். 14-வது ஆட்டத்தில் ஆடிய குஜராத் அணி கண்ட 8-வது தோல்வி இதுவாகும்.

இன்று (செவ்வாய்க்கிழமை) நடைபெறும் ஆட்டத்தில் தெலுங்கு டைட்டன்ஸ்- மும்பை (இரவு 7.30 மணி) அணிகள் மோதுகின்றன.