உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டி: கஜகஸ்தானில் இன்று தொடக்கம்


உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டி: கஜகஸ்தானில் இன்று தொடக்கம்
x
தினத்தந்தி 14 Sep 2019 12:14 AM GMT (Updated: 14 Sep 2019 12:14 AM GMT)

உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டி கஜகஸ்தானில் இன்று தொடங்க உள்ளது.

நூர் சுல்தான்,

உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டி கஜகஸ்தானில் இன்று தொடங்குகிறது. இதில் இந்தியா சார்பில் 30 வீரர்-வீராங்கனைகள் பங்கேற்கிறார்கள்.

உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டி கஜகஸ்தான் நாட்டில் உள்ள நூர் சுல்தானில் இன்று (சனிக்கிழமை) முதல் 22-ந் தேதி வரை நடக்கிறது. இதில் ஆண்களுக்கு பிரீஸ்டைல் மற்றும் கிரிகோ ரோமன் பிரிவுகளிலும், பெண்களுக்கு பிரீஸ்டைல் பிரிவிலும் பந்தயங்கள் நடைபெறுகிறது. இருபாலருக்கும் சேர்த்து மொத்தம் 30 எடைப்பிரிவுகளில் பந்தயங்கள் அரங்கேறுகிறது.

இந்த போட்டியில் குறிப்பிட்ட 18 எடைப்பிரிவுகளில் முதல் 6 இடத்தை பிடிப்பவர்கள் அடுத்த ஆண்டு (2020) டோக்கியோவில் நடைபெறும் ஒலிம்பிக் போட்டிக்கான தங்களது கோட்டாவை உறுதி செய்ய முடியும். ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி சுற்றாக அமைந்து இருப்பதால் இந்த போட்டி அதிக முக்கியத்துவம் பெற்றுள்ளது.

2008, 2012-ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டியில் ஆண்கள் பிரீஸ்டைல் பிரிவில் 66 கிலோ எடைப்பிரிவில் முறையே வெண்கலம் மற்றும் வெள்ளிப்பதக்கம் வென்ற இந்திய வீரரான சுஷில் குமார் இந்த போட்டியில் பங்கேற்கிறார். அவர் ரஷியாவில் 2010-ம் ஆண்டு நடைபெற்ற உலக சாம்பியன்ஷிப் போட்டியில் 66 கிலோ எடைப்பிரிவில் தங்கம் வென்று சாதனை படைத்து இருந்தார். உலக மல்யுத்த போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற ஒரே இந்தியர் என்ற பெருமைக்குரிய சுஷில்குமார் 8 ஆண்டுகளுக்கு பிறகு இந்த உலக போட்டியில் 74 கிலோ எடைப்பிரிவில் களம் காணுகிறார். புதிய எடைப்பிரிவில் சுஷில்குமார் சாதிப்பாரா? என்று ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள்.

உலக போட்டியில் பிரீஸ்டைல் பிரிவில் 2013-ம் ஆண்டு வெண்கலப்பதக்கமும் (60 கிலோ), 2018-ம் ஆண்டு வெள்ளிப்பதக்கமும் (65 கிலோ) கைப்பற்றிய இந்திய வீரர் பஜ்ரங் பூனியா இந்த தடவை மீண்டும் 65 கிலோ எடைப்பிரிவில் அடியெடுத்து வைக்கிறார். அவர் தனது பதக்கத்தை தங்கமாக மாற்றுவாரா? என்று எதிர்பார்க்கப்படுகிறது. 2018-ம் ஆண்டு காமன்வெல்த் மற்றும் ஆசிய விளையாட்டு போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற இந்திய வீராங்கனையான வினேஷ் போகத் 53 கிலோ எடைப்பிரிவில் போட்டியிடுகிறார். இந்த சீசனில் சிறப்பாக செயல்பட்டு வரும் அவர் சாதிப்பார் என்று கணிக்கப்படுகிறது. இன்று மாலை 5.30 மணிக்கு தொடங்கும் இந்த போட்டியை சோனி டென்3, சோனி இ.எஸ்.பி.என். சேனல் நேரடியாக ஒளிபரப்பு செய்கிறது.

இந்த உலக சாம்பியன்ஷிப் போட்டிக்கான இந்திய மல்யுத்த அணியில் 20 வீரர்களும், 10 வீராங்கனைகளும் இடம் பிடித்துள்ளனர். இந்திய அணி விவரம் வருமாறு:-

ஆண்கள் பிரீஸ்டைல்: ரவிக்குமார் (57 கிலோ), ராகுல் அவார் (61 கிலோ), பஜ்ரங் பூனியா (65 கிலோ), கரண் (70 கிலோ), சுஷில்குமார் (74 கிலோ), ஜிதேந்தர் (79 கிலோ), தீபக் பூனியா (86 கிலோ), பர்வீன் (92 கிலோ), மாவ்சம் காத்ரி (97 கிலோ), சுமித் மாலிக் (125 கிலோ).

ஆண்கள் கிரிகோ ரோமன்: மன்ஜீத் (55 கிலோ), மனிஷ் (60 கிலோ), சாகர் (63 கிலோ), மனிஷ் (67 கிலோ), யோகேஷ் (72 கிலோ), குர்பிரீத் சிங் (77 கிலோ), ஹர்பிரீத் சிங் (82 கிலோ), சுனில்குமார் (87 கிலோ), ரவி (97 கிலோ), நவீன் (130 கிலோ).

பெண்கள் பிரீஸ்டைல்: சீமா (50 கிலோ), வினேஷ் போகத் (53 கிலோ), லலிதா (55 கிலோ), சரிதா (57 கிலோ), பூஜா தண்டா (59 கிலோ), சாக்‌ஷி மாலிக் (62 கிலோ), நவ்ஜோத் கவுர் (65 கிலோ), திவ்யா காக்ரன் (68 கிலோ), கோமல் பக்வான் கோலே (72 கிலோ), கிரண் (76 கிலோ).


Next Story