தென்ஆப்பிரிக்கா ‘ஏ’ அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டி: 7 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய ‘ஏ’ அணி வெற்றி


தென்ஆப்பிரிக்கா ‘ஏ’ அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டி:  7 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய ‘ஏ’ அணி  வெற்றி
x
தினத்தந்தி 16 Sep 2019 11:19 PM GMT (Updated: 16 Sep 2019 11:19 PM GMT)

தென்ஆப்பிரிக்கா ‘ஏ’ அணிக்கு எதிரான அதிகாரபூர்வமற்ற டெஸ்ட் போட்டியில், இந்திய ‘ஏ’ அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.


* இந்தியா ‘ஏ’-தென்ஆப்பிரிக்கா ‘ஏ’ அணிகள் இடையிலான 2 ஆட்டங்கள் கொண்ட அதிகாரபூர்வமற்ற டெஸ்ட் போட்டி தொடரில் திருவனந்தபுரத்தில் நடந்த முதல் முதலாவது டெஸ்ட் போட்டியில் இந்திய ‘ஏ’ அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த நிலையில் இவ்விரு அணிகள் இடையிலான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி மைசூருவில் இன்று (செவ்வாய்க்கிழமை) தொடங்குகிறது.

* போஸ்னியாவில் நடந்த ஏ.டி.பி.சேலஞ்சர் டென்னிஸ் போட்டியின் இறுதி ஆட்டத்தில் இந்திய வீரர் சுமித் நாகல் 2-6, 3-6 என்ற நேர்செட்டில் நெதர்லாந்து வீரர் தலோன் கிரிஸ்போரிடம் தோல்வி அடைந்தார். இறுதிப்போட்டிக்குள் நுழைந்ததன் மூலம் 15 இடங்கள் முன்னேறிய சுமித் நாகல் ஆண்கள் ஒற்றையர் பிரிவு தரவரிசையில் 159-வது இடத்தை பிடித்துள்ளார். மற்றொரு இந்திய வீரர் பிரஜ்னேஷ் குணேஸ்வரன் 3 இடம் ஏற்றம் கண்டு 82-வது இடம் பெற்றுள்ளார். இன்னொரு இந்திய வீரர் ராம்குமார் ராமநாதன் 3 இடம் சரிந்து 179-வது இடத்தை பிடித்துள்ளார்.

* உலக பில்லியர்ட்ஸ் சாம்பியன்ஷிப் பட்டத்தை 22-வது முறையாக கைப்பற்றிய இந்திய வீரர் பங்கஜ் அத்வானிக்கு, பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் டுவிட்டர் பதிவில், ‘உங்களுடைய சாதனையை நினைத்து நாடே பெருமைப்படுகிறது. உங்களது விடாமுயற்சி எல்லோரையும் கவருகிறது. வருங்காலங்களில் மேலும் பல வெற்றிகளை குவிக்க வாழ்த்துகள்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

* இந்திய கிரிக்கெட் வாரிய நிர்வாக கமிட்டி தலைவர் வினோத்ராய் டெல்லியில் நேற்று அளித்த ஒரு பேட்டியில், ‘வருகிற 28-ந் தேதிக்குள் மாநில கிரிக்கெட் சங்க தேர்தலை லோதா கமிட்டி சிபாரிசின் படி நடத்த வேண்டும். அதனை தொடர்ந்து அக்டோபர் 22-ந் தேதி இந்திய கிரிக்கெட் வாரிய நிர்வாகிகள் தேர்தல் நடைபெறும். 38 சங்கங்கள் லோதா கமிட்டி சிபாரிசுகளை ஏற்றுக்கொண்டுள்ளன. தமிழ்நாடு, அரியானா, அருணாச்சலபிரதேசம், உத்தரகாண்ட் ஆகிய 4 மாநில சங்கங்கள் இன்னும் ஏற்றுக்கொள்ளவில்லை. இந்திய கிரிக்கெட் வாரிய பொதுக்குழுவில் அங்கம் வகிக்க வேண்டுமா? என்பது மாநில சங்கங்கள் விருப்பத்துக்கு உட்பட்டதாகும். அதற்கான காலக்கெடு முடிந்து விட்டது. லோதா கமிட்டி சிபாரிசுக்கு உடன்படாத கிரிக்கெட் சங்கங்களின் கிரிக்கெட் நடவடிக்கைகள் எதுவும் பாதிக்கப்படாது. இந்திய கிரிக்கெட் வாரிய தேர்தலில் ஓட்டு போடும் தகுதியை இழக்கும் மாநில சங்கத்தின் நிர்வாகத்தை நிர்வகிக்க இடைக்கால கமிட்டி நியமிக்கப்படும்’ என்று தெரிவித்தார்.

* சீன ஓபன் பேட்மிண்டன் போட்டி சாங்ஸ்ஹோவில் இன்று தொடங்குகிறது. இதில், சமீபத்தில் நடந்த உலக சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்த இந்திய வீராங்கனை பி.வி.சிந்து கலந்து கொள்கிறார். அவர் இந்த போட்டியில் 2016-ம் ஆண்டில் சாம்பியன் பட்டம் வென்றவர் ஆவார். இந்திய வீராங்கனை சாய்னா நேவாலும் களம் காணுகிறார். ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இருந்து முழங்கால் காயம் காரணமாக ஸ்ரீகாந்த், டெங்கு காய்ச்சல் காரணமாக பிரணாய் ஆகியோர் விலகி இருக்கிறார்கள். இந்திய வீரர்கள் சாய் பிரனீத், காஷ்யப் ஆகியோர் களம் இறங்குகிறார்கள்.


Next Story