உலக மல்யுத்தம்: இந்திய வீராங்கனைகள் தோல்வி


உலக மல்யுத்தம்: இந்திய வீராங்கனைகள் தோல்வி
x
தினத்தந்தி 17 Sep 2019 11:47 PM GMT (Updated: 17 Sep 2019 11:47 PM GMT)

உலக மல்யுத்த போட்டியில் இந்திய நட்சத்திர வீராங்கனை வினேஷ் போகத் உள்பட அனைவரும் தோல்வியை தழுவினர்.

நுர் சுல்தான்,

உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டி கஜகஸ்தானில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த பெண்களுக்கான பிரீஸ்டைல் 53 கிலோ எடைப்பிரிவில் தகுதி சுற்றில் இந்திய முன்னணி வீராங்கனை வினேஷ் போகத் 13-0 என்ற புள்ளி கணக்கில் ரியோ ஒலிம்பிக் போட்டியில் வெண்கலப்பதக்கம் வென்றவரான சுவீடன் வீராங்கனை சோபியா மாட்சனை வீழ்த்தினார்.

ஆனால் முதல் சுற்று வினேஷ் போகத்துக்கு ஏமாற்றம் அளிப்பதாக அமைந்தது. இதில் வினேஷ் போகத் 0-7 என்ற புள்ளி கணக்கில் நடப்பு உலக சாம்பியன் மாயு முகைடாவிடம் (ஜப்பான்) தோல்வி அடைந்தார். ஆசிய மற்றும் காமன்வெல்த் விளையாட்டு சாம்பியனான வினேஷ் போகத், மாயு முகைடாவுக்கு எதிரான போட்டியில் இந்த சீசனில் தொடர்ச்சியாக 2-வது முறையாக தோல்வி கண்டுள்ளார். தன்னை வீழ்த்திய மாயு முகைடா இறுதிப்போட்டிக்குள் நுழைந்ததால், வெண்கலப்பதக்கம் வரை முன்னேறக்கூடிய ‘ரெபிசாஜ்’ வாய்ப்பில் வினேஷ் போகத் நீடிக்கிறார்.

50 கிலோ எடைப்பிரிவில் முதல் சுற்றில் இந்திய வீராங்கனை சீமா பிஸ்லா 2-9 என்ற புள்ளி கணக்கில் ஒலிம்பிக் போட்டியில் 3 முறை பதக்கம் வென்றுள்ள அஜர்பைஜான் வீராங்கனை மரியா ஸ்டானிக்கிடம் வீழ்ந்தார். சீமா பிஸ்லாவை வீழ்த்திய மரியா ஸ்டானிக் இறுதிப்போட்டிக்கு முன்னேறினார். இதனால் சீமா பிஸ்லாவுக்கு ‘ரெபிசாஜ்’ வாய்ப்பு கிடைத்துள்ளது. இந்த வாய்ப்பில் அதிகபட்சமாக வெண்கலப்பதக்கம் வெல்ல முடியும்.

72 கிலோ எடைப்பிரிவின் முதல் சுற்றில் இந்திய வீராங்கனை கோமல் பக்வான் 1-4 என்ற புள்ளி கணக்கில் துருக்கி வீராங்கனை பெஸ்டி அல்துக்கிடம் தோற்று வெளியேறினார். இதேபோல் 55 கிலோ எடைப்பிரிவில் இந்திய வீராங்கனை லலிதா 3-10 என்ற புள்ளி கணக்கில் மங்கோலியாவின் போலார்டியா பாட் ஒஷிரிடம் பணிந்தார்.

ஆண்களுக்கான ‘கிரிகோ ரோமன்’ 130 கிலோ எடைப்பிரிவில் ரெபிசாஜ் வாய்ப்பில் நீடித்த இந்திய வீரர் நவீன் 0-9 என்ற புள்ளி கணக்கில் எஸ்தோனியா வீரர் ஹெய்கி நபியிடம் தோல்வி அடைந்து ஏமாற்றம் அளித்தார்.


Next Story