பிற விளையாட்டு

‘ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் வெல்வேன்’மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் நம்பிக்கை + "||" + Wrestling Sportswoman Vinesh Phogat Hopeful

‘ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் வெல்வேன்’மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் நம்பிக்கை

‘ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் வெல்வேன்’மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் நம்பிக்கை
ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் வெல்வேன் என்று உலக மல்யுத்த போட்டியில் வெண்கலப்பதக்கம் வென்ற இந்திய வீராங்கனை வினேஷ் போகத் நம்பிக்கை தெரிவித்தார்.
நுர் சுல்தான்,

உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டியில் பெண்களுக்கான பிரீஸ்டைல் 53 கிலோ உடல் எடைப்பிரிவில் வெண்கலப்பதக்கம் வென்று அசத்திய இந்திய வீராங்கனை வினேஷ் போகத் அளித்த பேட்டியில் கூறியதாவது:-

வெண்கலப்பதக்கத்துக்கான போட்டியின் போது எனது யுக்தியில் சில மாற்றங்கள் செய்யுமாறு பயிற்சியாளர்கள் எனக்கு அறிவுரை வழங்கினர். ஆனால் களத்தில் போட்டி வேறுவிதமாக இருப்பதை உணர்ந்து அதற்கு தகுந்தபடி எனது வியூகத்தை மாற்றினேன். மரியா எனது காலை பிடித்து வீழ்த்த முயற்சித்தார். அதனை நான் வலுவான தற்காப்பு யுக்தியின் மூலம் தடுத்து நிறுத்தினேன். இதில் அவர் அதிக சக்தியை செலவிட்டதால் சோர்வடைந்தார். அது எனக்கு சாதகமாக அமைந்தது.

ஒலிம்பிக் பதக்கம்

ஒலிம்பிக் போட்டிக்கு முதல் தகுதி சுற்றாக அமைந்து இருக்கும் இந்த உலக சாம்பியன்ஷிப் போட்டிக்கு எல்லா வீராங்கனைகளும் நன்றாக தயாராகி வந்து இருப்பார்கள். இந்த மாதிரியான நிலையில் நான் பதக்கம் வென்று இருப்பது பெரிய விஷயமாகும். இந்த வெற்றி எனக்கு நிம்மதி அளிக்கிறது. ஏனெனில் இதன் மூலம் ஒலிம்பிக் போட்டிக்கு தயாராக நிறைய நேரம் கிடைத்து இருக்கிறது. தற்போது வெண்கலப்பதக்கம் வென்று இருக்கிறேன். இதனை தங்கப்பதக்கமாக மாற்ற வேண்டும் என்று விரும்புகிறேன். அத்துடன் ஒலிம்பிக் போட்டியிலும் பதக்கம் வெல்ல ஆர்வமாக உள்ளேன்.

எனது சிறந்த செயல்பாடு இன்னும் வெளிப்படவில்லை. ஒலிம்பிக் போட்டியில் எனது சிறப்பான செயல்பாட்டை நீங்கள் பார்ப்பீர்கள் என்று நினைக்கிறேன். அது உச்சபட்ச செயல்பாடாக இருக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் அவர் கூறும் போது, ‘2016-ம் ஆண்டு ரியோ ஒலிம்பிக் போட்டியின் போது எனக்கு காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது. அதன் பிறகு எனது தாயார் என்னுடைய பந்தயங்களை பெரும்பாலும் பார்ப்பது கிடையாது. சில சமயங்களில் அவர் பார்த்தாலும் எனது கால் காயம் குறித்த அச்ச உணர்வு இன்னும் அவருக்கு உள்ளது. மற்ற வீராங்கனைகள் எனது காலை பிடித்து வீழ்த்த முயற்சித்தால் என் தாயார் எனது மகள் காலை விட்டு விடு, விட்டு விடு என்று உணர்ச்சிவசப்பட்டு கத்துவார்’ என்றார்.