சீன ஓபன் பேட்மிண்டன்: 2-வது சுற்றில் சிந்து வெளியேற்றம்


சீன ஓபன் பேட்மிண்டன்: 2-வது சுற்றில் சிந்து வெளியேற்றம்
x
தினத்தந்தி 19 Sep 2019 10:17 PM GMT (Updated: 19 Sep 2019 10:17 PM GMT)

சீன ஓபன் பேட்மிண்டன் போட்டியின் 2-வது சுற்றில் சிந்து வெளியேற்றப்பட்டார்.

சாங்ஜோவ்,

சீன ஓபன் பேட்மிண்டன் போட்டி சாங்ஜோவில் நடந்து வருகிறது. இதில் 3-வது நாளான நேற்று நடந்த பெண்கள் ஒற்றையர் பிரிவு 2-வது சுற்று ஆட்டம் ஒன்றில் சமீபத்தில் உலக சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்தவரும், உலக தரவரிசையில் 5-வது இடத்தில் இருப்பவருமான இந்திய வீராங்கனை பி.வி.சிந்து, 15-வது இடத்தில் இருக்கும் தாய்லாந்து வீராங்கனை போர்ன்பவி சோச்சுவாங்கை சந்தித்தார். 58 நிமிடம் நீடித்த இந்த விறுவிறுப்பான ஆட்டத்தில் போர்ன்பவி 12-21, 21-13, 21-19 என்ற செட் கணக்கில் சிந்துவை வீழ்த்தி கால்இறுதிக்கு முன்னேறினார். 3-வது செட்டில் ஒரு கட்டத்தில் சிந்து 19-15 என்ற புள்ளி கணக்கில் முன்னிலை பெற்று வெற்றியை நெருங்கினார். ஆனால் அந்த சமயத்தில் சிந்து செய்த சில தவறுகள் பாதகமாக மாறியது. அதனை சரியாக பயன்படுத்தி தொடர்ச்சியாக 6 புள்ளிகள் குவித்த போர்ன்பவி அந்த செட்டை கைப்பற்றியதுடன், வெற்றியையும் வசப்படுத்தினார் சிந்துவுடன் 4-வது முறையாக மல்லுக்கட்டிய போர்ன்பவி அவருக்கு எதிராக பெற்ற முதல் வெற்றி இதுதான்.

ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவில் 2-வது சுற்று ஆட்டம் ஒன்றில் இந்திய வீரர் சாய் பிரனீத் 21-19, 21-19 என்ற நேர்செட்டில் சீன வீரர் லூ குயாங் சூவை வீழ்த்தி கால்இறுதியை எட்டினார்.

Next Story