உலக மல்யுத்தத்தில் இந்திய வீரர் பஜ்ரங் பூனியா அரைஇறுதியில் அதிர்ச்சி தோல்வி


உலக மல்யுத்தத்தில் இந்திய வீரர் பஜ்ரங் பூனியா அரைஇறுதியில் அதிர்ச்சி தோல்வி
x
தினத்தந்தி 19 Sep 2019 10:22 PM GMT (Updated: 19 Sep 2019 10:22 PM GMT)

உலக மல்யுத்த போட்டியில் இந்திய வீரர் பஜ்ரங் பூனியா அரைஇறுதியில் அதிர்ச்சி தோல்வி அடைந்தார்.

நுர் சுல்தான்,

கஜகஸ்தானில் நடைபெற்று வரும் உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டியில் நேற்று நடந்த ஆண்களுக்கான பிரீஸ்டைல் 65 கிலோ எடைப்பிரிவில் இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திரம் பஜ்ரங் பூனியா முதல் சுற்றில் கிர்சிஸ்டோவ் பென்கோவ்ஸ்கியையும் (போலந்து), 2-வது சுற்றில் டேவிட் ஹபாத்தையும் (சுலோவேனியா), கால்இறுதியில் ஜோங் சோல் சன்யையும் (கொரியா) வீழ்த்தி அரைஇறுதிக்கு முன்னேறினார்.

அரைஇறுதியில் பஜ்ரங் பூனியா, கஜகஸ்தான் வீரர் டாலெட் நியாஸ்பெகோவை சந்தித்தார். 6 நிமிடம் நடந்த இந்த போட்டியில் பல முறை சர்ச்சை கிளம்பியது. ஒரு கட்டத்தில் 2-9 என்ற புள்ளி கணக்கில் பின்தங்கி இருந்த பஜ்ரங் பூனியா கடைசி நேரத்தில் 2 முறை டாலெட் நியாஸ்பெகோவை கீழே சாய்த்து புள்ளிகள் சேர்த்து 9-9 என்ற கணக்கில் சமநிலையை எட்டினார். அத்துடன் பந்தயம் சமனில் முடிந்தது. இதையடுத்து ஒரே முயற்சியில் யார் அதிக புள்ளி குவித்தது என்பது பார்க்கப்பட்டது. இதன்படி பஜ்ரங் பூனியாவை ஒரு முறை மடக்கி களத்துக்கு வெளியே தள்ளியதற்கு டாலெட் நியாஸ்பெகோவ் ஒரே முயற்சியில் அதிகபட்சமாக 4 புள்ளிகள் பெற்று இருந்தார். இதன் அடிப்படையில் உள்ளூர் வீரரான டாலெட் நியாஸ்பெகோவ் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. முன்னதாக எதிராளிக்கு 4 புள்ளிகள் வழங்கிய முடிவை எதிர்த்து பஜ்ரங் பூனியா செய்த அப்பீல் நிராகரிக்கப்பட்டது.

ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி

கஜகஸ்தான் வீரர் போட்டியின் மத்தியில் சோர்வு அடைந்து 3 முறை சில வினாடிகள் ஓய்வு எடுத்தார். அப்போது பஜ்ரங் பூனியா அழைத்தும் அவர் களம் இறங்கவில்லை. அதற்காக நடுவர்கள் யாரும் அவரை எச்சரிக்கை செய்யவில்லை. நடுவர்களின் ஒருதலைபட்சமான முடிவால் பஜ்ரங் பூனியா அதிருப்தியுடன் வெளியேறினார். பஜ்ரங் பூனியாவின் பயிற்சியாளர் பெனிடிட்ஸ் ஒரு கட்டத்தில் ஆத்திரம் அடைந்து தனது அருகில் இருந்த பஞ்சு காகிதத்தை உதைத்து தள்ளினார். உலக போட்டியில் 2013-ம் ஆண்டில் வெண்கலப்பதக்கமும், 2018-ம் ஆண்டில் வெள்ளிப்பதக்கமும் வென்ற பஜ்ரங் பூனியா இன்று நடைபெறும் வெண்கலப்பதக்கத்துக்கான பந்தயத்தில் பங்கேற்கிறார். அரைஇறுதிக்கு முன்னேறியதன் மூலம் பஜ்ரங் பூனியா அடுத்த ஆண்டு நடைபெறும் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றார்.

சாக்‌ஷி மாலிக் தோல்வி

57 கிலோ எடைப்பிரிவில் இந்திய வீரர் ரவிகுமார் தாஹியா முதல் சுற்றில் சுங்வோன் கிம்மையும் (கொரியா), 2-வது சுற்றில் அர்சென் ஹருதுன்யனையும் (அர்மேனியா), கால்இறுதியில் யுகி தகாஹஷியையும் (ஜப்பான்) தோற்கடித்து அரைஇறுதிக்குள் அடியெடுத்து வைத்தார். அரைறுதியில் ரவிகுமார் 4-6 என்ற புள்ளி கணக்கில் ஜாவுர் உகுவிடம் (ரஷியா) தோல்வி அடைந்தார். அடுத்து ரவிகுமார் வெண்கலப்பதக்கத்துக் கான போட்டியில் களம் காணுகிறார். அரைஇறுதிக் குள் நுழைந்ததன் மூலம் ரவி குமாரும் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றார்.

பெண்களுக்கான பிரீஸ்டைல் 62 கிலோ எடைப்பிரிவில் முதல் சுற்றில் ரியோ ஒலிம்பிக் போட்டியில் வெண்கலப்பதக்கம் வென்றவரான இந்திய வீராங்கனை சாக்‌ஷி மாலிக் 7-10 என்ற புள்ளி கணக்கில் நைஜீரியாவின் அமினாட் அடினியிடம் தோல்வி அடைந்து நடையை கட்டினார். 68 கிலோ எடைப்பிரிவின் முதல் சுற்றில் இந்திய வீராங்கனை திவ்யா காக்ரன் 0-2 என்ற புள்ளி கணக்கில் ஜப்பானின் சாரா டோஷோவிடம் வீழ்ந்து வெளியேறினார். 59 கிலோ எடைப்பிரிவில் அரைஇறுதியில் தோல்வியை சந்தித்து வெண்கலப்பதக்கத்துக்கான வாய்ப்பில் நீடித்த இந்திய வீராங்கனை பூஜா தண்டா 3-5 என்ற புள்ளி கணக்கில் சீனாவின் ஜிங்ரு பெய்யிடம் தோல்வி கண்டு ஏமாற்றம் அளித்தார்.

Next Story