பிற விளையாட்டு

இந்திய வீரர் தீபக் பூனியா இறுதிப்போட்டிக்கு முன்னேற்றம் - ஒலிம்பிக் போட்டிக்கும் தகுதி பெற்றார் + "||" + Indian player Deepak Poonia progresses to final - He also qualified for the Olympics

இந்திய வீரர் தீபக் பூனியா இறுதிப்போட்டிக்கு முன்னேற்றம் - ஒலிம்பிக் போட்டிக்கும் தகுதி பெற்றார்

இந்திய வீரர் தீபக் பூனியா இறுதிப்போட்டிக்கு முன்னேற்றம் - ஒலிம்பிக் போட்டிக்கும் தகுதி பெற்றார்
உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய வீரர் தீபக் பூனியா இறுதிப்போட்டிக்கு முன்னேறினார். அத்துடன் அவர் ஒலிம்பிக் போட்டிக்கும் தகுதி பெற்றார்.
நுர் சுல்தான்,

உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டி கஜகஸ்தான் நாட்டில் உள்ள நுர் சுல்தானில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த ஆண்களுக்கான பிரீஸ்டைல் 86 கிலோ எடைப்பிரிவில் நடப்பு ஜூனியர் உலக சாம்பியனான இந்திய வீரர் தீபக் பூனியா களம் கண்டார். அவர் முதல் சுற்றில் 8-6 என்ற புள்ளி கணக்கில் அடிலெட் டாவ்லும்பயேவையும் (கஜகஸ்தான்), 2-வது சுற்றில் 6-0 என்ற புள்ளி கணக்கில் பஹோடர் கோடிரோவையும் (தஜிகிஸ்தான்) வீழ்த்தி கால்இறுதியை எட்டினார்.


கால்இறுதியில் தீபக் பூனியா, கொலம்பியாவின் கார்லஸ் அர்டுரோ மென்டெஸ்சை எதிர்கொண்டார். இந்த பந்தயம் கடைசி வரை விறுவிறுப்பு நிறைந்ததாக அமைந்தது. போட்டி முடிய ஒரு நிமிடம் இருக்கையில் 3-6 என்ற புள்ளி கணக்கில் பின்தங்கி இருந்த தீபக் பூனியா கடைசி வினாடியில் கார்லஸ் அடுரோவை புரட்டி போட்டதுடன் 7-6 என்ற புள்ளி கணக்கில் வெற்றி பெற்று அரைஇறுதிக்குள் அடியெடுத்து வைத்தார். அரைஇறுதிக்கு முன்னேறியதன் மூலம் தீபக் பூனியா அடுத்த ஆண்டு டோக்கியோவில் நடைபெறும் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றார். மல்யுத்தத்தில் இருந்து டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்ற 4-வது இந்தியர் தீபக் பூனியா ஆவார்.

இதைத் தொடர்ந்து நடைபெற்ற அரைஇறுதி ஆட்டத்திலும் தீபக் பூனியா ஆதிக்கம் செலுத்தினார். அவர் 8-2 என்ற புள்ளி கணக்கில் சுவிட்சர்லாந்தின் ஸ்டீபன் ரிச்முத்தை தோற்கடித்து இறுதிப்போட்டிக்குள் நுழைந்தார். இன்று நடைபெறும் இறுதிப்போட்டியில் தீபக் பூனியா, ஆசிய மற்றும் ஒலிம்பிக் சாம்பியனான ஈரானின் ஹஸ்சன் அலிஜாம் யஸ்டானிசாரட்டியை சந்திக்கிறார். இதன் மூலம் இந்த போட்டியில் தீபக் பூனியா தங்கம் அல்லது வெள்ளிப்பதக்கம் வெல்வது உறுதியாகி விட்டது.

61 கிலோ உடல் எடைப்பிரிவில் இந்திய வீரர் ராகுல் அவாரே முதல் சுற்றில் 13-2 என்ற புள்ளி கணக்கில் கெரிம் ஹோஜாகோவையும் (துர்க்மெனிஸ்தான்), கால்இறுதியில் 10-7 என்ற புள்ளி கணக்கில் ரஸ்சூல் காலியேவையும் (கஜகஸ்தான்) வீழ்த்தி அரைஇறுதிக்கு முன்னேறினார். அரைஇறுதியில் ராகுல் அவாரே 6-10 என்ற புள்ளி கணக்கில் ஜார்ஜியா வீரர் பெகா லோம்டாட்ஜியிடம் தோல்வி அடைந்தார். அடுத்து அவர் வெண்கலப்பதக்கத்துக்கான போட்டியில் மோதுவார்.

79 கிலோ உடல் எடைப்பிரிவில் இந்திய வீரர் ஜிதேந்தர் தகுதி சுற்றில் 7-2 என்ற புள்ளி கணக்கில் மால்டோவா வீரர் ஜியார்ஜி பாஸ்காலோவையும், முதல் சுற்றில் 7-1 என்ற புள்ளி கணக்கில் துருக்கி வீரர் முஹாமித் நூரியையும் தோற்கடித்து கால்இறுதி சுற்றுக்கு வந்தார். ஆனால் கால்இறுதியில் ஜிதேந்தர் 0-4 என்ற புள்ளி கணக்கில் சுலோவக்கியா வீரர் தைமுராஸ் சால்கசனோவிடம் தோல்வி அடைந்து வெளியேறினார். 97 கிலோ உடல் எடைப்பிரிவின் முதல் சுற்றில் இந்திய வீரர் மாவ்சாம் காத்ரி 0-10 என்ற புள்ளி கணக்கில் அமெரிக்க வீரர் கைல் பிரடெரிக் சின்டெரிடம் வீழ்ந்தார்.