பிற விளையாட்டு

லா லிகா கால்பந்து போட்டி: கிரனடா அணி வெற்றி + "||" + La Liga Football Tournament: Granada Team Win

லா லிகா கால்பந்து போட்டி: கிரனடா அணி வெற்றி

லா லிகா கால்பந்து போட்டி: கிரனடா அணி வெற்றி
லா லிகா கால்பந்து போட்டியில், கிரனடா அணி 2-0 என்ற கோல் கணக்கில் பார்சிலோனா அணியை வீழ்த்தியது.

* லா லிகா கால்பந்து போட்டி ஸ்பெயின் நாட்டில் நடந்து வருகிறது. 20 அணிகள் பங்கேற்றுள்ள இந்த போட்டியில் மாட்ரிட்டில் நேற்று நடந்த ஆட்டம் ஒன்றில் நடப்பு சாம்பியன் பார்சிலோனா அணி, கிரனடா அணியுடன் மோதியது. விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் கிரனடா அணி 2-0 என்ற கோல் கணக்கில் பார்சிலோனா அணிக்கு அதிர்ச்சி அளித்தது. கிரனடா அணியில் ரமோன் அஜீஸ் 2-வது நிமிடத்திலும், அல்வாரோ வாடில்லா 66-வது நிமிடத்திலும் கோல் அடித்தனர். பார்சிலோனா அணியால் கடைசி வரை பதில் கோல் திருப்ப முடியவில்லை. 5-வது லீக் ஆட்டத்தில் ஆடிய கிரனடா அணி 3 வெற்றி, ஒரு டிரா, ஒரு தோல்வியுடன் 10 புள்ளிகள் பெற்று முதலிடத்தில் உள்ளது. 5-வது ஆட்டத்தில் விளையாடிய பார்சிலோனா அணி சந்தித்த 2-வது தோல்வி இதுவாகும்.


* இந்திய மோட்டார் ஸ்போர்ட்ஸ் சம்மேளனம் சார்பில் தேசிய கார் பந்தய சாம்பியன்ஷிப் போட்டி நடத்தப்பட்டு வருகிறது. 6 சுற்றுகள் கொண்ட இந்த போட்டியில் 3-வது சுற்று பந்தயம் ராஜஸ்தானில் உள்ள பார்மரில் நேற்று முன்தினம் நடந்தது. இந்த போட்டியின் போது ஓடுபாதையில் எதிர்பாராமல் நுழைந்த ஒரு மோட்டார் சைக்கிள் மீது, முன்னணி கார் பந்தய வீரர் கவுரவ் கில்லின் கார் பயங்கரமாக மோதியது. இதில் மோட்டார் சைக்கிளில் வந்த நரேந்திர குமார், அவரது மனைவி புஷ்பா தேவி, அவர்களது மகன் ஜிதேந்திரா ஆகியோர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார்கள். இந்த சம்பவம் குறித்து பலியானவர்களின் உறவினர்கள் சாம்தாரி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். போலீசார், கவுரவ் கில், மற்றொரு டிரைவரான ஷரிப் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். போட்டியை நடத்திய நிறுவனங்களின் பெயர்களும் முதல் தகவல் அறிக்கையில் இடம் பெற்றுள்ளன.

* ஆசிய சீனியர் ஆண்கள் கைப்பந்து சாம்பியன்ஷிப் போட்டி ஈரானில் உள்ள தெக்ரானில் நடந்தது. இதில் இறுதிப்போட்டியில் ஈரான் அணி 25-14, 25-17, 25-21 என்ற நேர்செட்டில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி 3-வது முறையாக சாம்பியன் பட்டத்தை சொந்தமாக்கியது. முன்னதாக நடந்த 3-வது இடத்துக்கான ஆட்டத்தில் ஜப்பான் அணி 25-23, 25-17, 23-25, 25-22 என்ற செட் கணக்கில் தென்கொரியாவை சாய்த்தது. இந்த போட்டியில் இந்திய அணி 8-வது இடத்தை பெற்றது.

* முர்ரே கோப்பை சேலஞ்சர் டென்னிஸ் போட்டி இங்கிலாந்தில் உள்ள கிளாஸ்கோவில் நடந்தது. இதன் ஆண்கள் ஒற்றையர் பிரிவின் அரைஇறுதியில் இந்திய வீரர் ராம்குமார் ராமநாதன் 5-7, 1-6, 4-6 என்ற செட் கணக்கில் பிரான்ஸ் வீரர் அலெக்சான்ட் முல்லரிடம் தோல்வி கண்டு வெளியேறினார்.