பிற விளையாட்டு

“விமர்சனங்களுக்கு பதக்கம் வென்று பதிலடி கொடுப்பேன்” குத்துச்சண்டை வீராங்கனை மேரிகோம் பேட்டி + "||" + To criticism I will medal and retaliate Boxer merikom Interview

“விமர்சனங்களுக்கு பதக்கம் வென்று பதிலடி கொடுப்பேன்” குத்துச்சண்டை வீராங்கனை மேரிகோம் பேட்டி

“விமர்சனங்களுக்கு பதக்கம் வென்று பதிலடி கொடுப்பேன்” குத்துச்சண்டை வீராங்கனை மேரிகோம் பேட்டி
தன் மீதான விமர்சனங்களுக்கு உலக குத்துச்சண்டை போட்டியில் பதக்கம் வென்று பதிலடி கொடுக்க முடியும் என்று இந்திய வீராங்கனை மேரிகோம் கூறியுள்ளார்.
புதுடெல்லி, 

11-வது பெண்கள் உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டி வருகிற 3-ந்தேதி முதல் 13-ந்தேதி வரை ரஷியாவில் நடக்கிறது. இந்த போட்டியில் இந்திய மூத்த வீராங்கனை மேரிகோம் கலந்து கொள்கிறார். 9-வது முறையாக உலக குத்துச்சண்டை போட்டியில் அடியெடுத்து வைக்கும் மூன்று குழந்தைகளின் தாயாரான மேரிகோம் 6 தங்கமும், ஒரு வெள்ளியும் வென்று சாதனையாளராக திகழ்கிறார். பெரும்பாலும் அவரது வெற்றிகள் 48 கிலோ உடல் எடைப்பிரிவில் கிடைத்தவை ஆகும். ஆனால் 48 கிலோ எடைப்பிரிவு ஒலிம்பிக்கில் இருந்து நீக்கப்பட்டு விட்டதால் 51 கிலோ எடைப்பிரிவுக்கு மாறி இருக்கிறார். இது குறித்து 37 வயதான மேரிகோம் கூறியதாவது:-

எனது மிகச்சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்துவேன்; ஆனால் பதக்கம் வெல்வது குறித்து எந்த உத்தரவாதமும் கொடுக்க முடியாது. இதைத் தான் எனக்குள்ளும் சொல்லிக் கொள்வேன். நெருக்கடி எப்போதும் இருக்கத்தான் செய்யும். அதை திறம்பட கையாள வேண்டும். அதிக எதிர்பார்ப்பு நம்மை பதற்றத்திற்குள்ளாக்கி விடும்.

இந்த உலக கோப்பை போட்டி எனக்கு மிகவும் முக்கியமானது. நான் களம் காணும் எடைப்பிரிவு (51 கிலோ) ஒலிம்பிக் போட்டியிலும் இருக்கிறது. அதனால் தான் அதில் முழு கவனத்தையும் செலுத்துகிறேன். என் மீதான எதிர்மறை விமர்சனங்களுக்கு பதக்கம் வென்று பதிலடி கொடுப்பதே சிறந்த வழிமுறையாக இருக்கும் கருதுகிறேன். மற்றபடி என்னை பற்றி கருத்து கூறுபவர்களை நான் தடுத்து நிறுத்த முடியாது.

இந்த எடைப்பிரிவில் நிறைய பேர் மோத உள்ளனர். என்னை விட வலிமையான மங்கை யார்? என்பதை அறிந்து, அதற்கு ஏற்ப வியூகங்களை வகுக்க வேண்டும். என்னை விட உயரமான, வலுமிக்க வீராங்கனைகளுடன் மோதித் தான் நான் பயிற்சி மேற்கொள்கிறேன்.

அது மட்டுமின்றி 51 கிலோ பிரிவில் நான் இறங்குவது இது முதல் முறை கிடையாது. ஏற்கனவே ஆசிய விளையாட்டு போட்டியில் 2014-ம் ஆண்டில் தங்கமும், 2018-ம் ஆண்டில் வெண்கலப்பதக்கமும் இந்த பிரிவில் தான் வென்றேன். இந்த பிரிவு எளிதானதா? அல்லது கடினமானதா? என்பது பற்றி எதையும் சொல்ல மாட்டேன். இதற்குரிய பதிலை களத்தில் மட்டுமே என்னால் சொல்ல முடியும். 51 கிலோ எடைப்பிரிவை பொறுத்தவரை உடல்வலிமை தான் சவாலான விஷயமாக இருக்கும். ஆனால் அதை எல்லாம் சந்திக்க தயாராக இருக்கிறேன்.

நான் முன்பை விட இப்போது நல்ல நிலையில் இருப்பதாக உணர்கிறேன். பயிற்சிக்காக இத்தாலி சென்று வந்தது எனது உடல்தகுதியை மேம்படுத்த உதவியது.

களத்தில் எனது முழு திறமையை வெளிப்படுத்த வேண்டும் என்று விரும்புகிறேன். அதை நான் செய்தேன் என்றால், தங்கப்பதக்கம் வெல்வதில் எந்த சிக்கலும் இருக்காது. இந்த முறையும் நன்றாக செயல்படுவேன் என்று நம்புகிறேன்.

உலக குத்துச்சண்டையில் நான் இதுவரை வென்ற பதக்கங்களிலேயே 2018-ம் ஆண்டில் டெல்லியில் மகுடம் சூடியதை மறக்க முடியாத ஒன்றாக சொல்வேன். இந்த தங்கப்பதக்கத்தை நான் எனது குடும்பத்தினர், நண்பர்கள், ஆதரவாளர்கள் மத்தியில் வென்றதோடு, என் மீதான விமர்சனங்களையும் தவறு என்று நிரூபித்து காட்டினேன். எனவே இந்த பதக்கம் சிறப்பு வாய்ந்தது.

இவ்வாறு மேரிகோம் கூறினார்.