உகாண்டா கால்பந்து அணியின் புதிய பயிற்சியாளராக ஜோனதன் மெக்கின்ஸ்ட்ரி நியமனம்


உகாண்டா கால்பந்து அணியின் புதிய பயிற்சியாளராக ஜோனதன் மெக்கின்ஸ்ட்ரி நியமனம்
x

உகாண்டா கால்பந்து அணியின் புதிய பயிற்சியாளராக ஜோனதன் மெக்கின்ஸ்ட்ரி நேற்று நியமனம் செய்யப்பட்டார்.


* தோகாவில் நடந்து வரும் உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் நேற்று நடந்த பெண்களுக்கான ஈட்டி எறிதல் பந்தயத்தின் தகுதி சுற்றில் ‘ஏ’ பிரிவில் இடம் பிடித்து இருந்த இந்திய வீராங்கனை அன்னு ராணி 62.43 மீட்டர் தூரம் எறிந்து புதிய தேசிய சாதனை படைத்து தனது பிரிவில் 3-வது இடத்தை பிடித்தார். 2 வீராங்கனைகள் மட்டுமே தகுதி இலக்கை (63.50 மீட்டர்) எட்டினார்கள். அவர்களை அடுத்து சிறப்பாக செயல்பட்ட 10 பேரில் ஒருவராக அன்னு ராணி இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.

* சீனா ஓபன் டென்னிஸ் போட்டி பீஜிங்கில் நடந்து வருகிறது. இதன் பெண்கள் ஒற்றையர் பிரிவில் முதல் சுற்று ஆட்டம் ஒன்றில் உலக தரவரிசையில் 5-வது இடத்தில் உள்ள ருமேனியா வீராங்கனை சிமோனா ஹாலெப் 2-6, 3-6 என்ற நேர்செட்டில் 38-ம் நிலை வீராங்கனை எகதெனியா அலெக்சாண்ட்ரோவிடம் (ரஷியா) அதிர்ச்சி தோல்வி கண்டு வெளியேறினார். மற்றொரு ஆட்டத்தில் உலக தரவரிசையில் 6-வது இடத்தில் உள்ள கனடா வீராங்கனை பியான்கா ஆன்ட்ரீஸ்கு 6-2, 2-6, 6-1 என்ற செட் கணக்கில் பெலாரஸ் வீராங்கனை அலியாக்சான்ட்ராவை வீழ்த்தி 2-வது சுற்றுக்குள் நுழைந்தார்.

* உகாண்டா கால்பந்து அணியின் பயிற்சியாளராக இருந்த செபாஸ்டியன் தேசாப்ரி சமீபத்தில் அந்த பதவியில் இருந்து விலகினார். இந்த நிலையில் உகாண்டா கால்பந்து அணியின் புதிய பயிற்சியாளராக அயர்லாந்தை சேர்ந்த 34 வயதான ஜோனதன் மெக்கின்ஸ்ட்ரி நேற்று நியமனம் செய்யப்பட்டுள்ளார். அவரது பதவி காலம் 3 ஆண்டுகள் ஆகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

* இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியின் துணை கேப்டன் ரஹானே அளித்த ஒரு பேட்டியில், ‘கவுண்டி போட்டியில் ஹாம்ப்ஷைர் அணிக்காக விளையாடுகையில் எப்பொழுது டெஸ்ட் போட்டியில் அறிமுகம் ஆவேன் என்று சிந்தித்து கொண்டு இருந்தேன். இதேபோல் 17 டெஸ்ட் போட்டியில் சதம் எதுவும் அடிக்காத நேரத்தில் எப்பொழுது சதம் அடிப்பேன் என்று எதிர்பார்த்து காத்து இருந்தேன். ஆனால் அப்போது அது நடக்கவில்லை. வெஸ்ட்இண்டீஸ் தொடரில் நான் சதம் குறித்து எதுவும் சிந்திக்கவில்லை. ஆனால் சதம் வந்தது. எது நடக்க வேண்டுமோ? அது தானாக நடக்கும். கடினமான சூழ்நிலைகளில் நான் எனது ஆட்ட நுணுக்கத்தை மாற்றவில்லை. மனநிலையில் தான் மாற்றம் செய்ய முயற்சித்தேன். எந்தவொரு போட்டியையும் எளிதாக எடுக்கக்கூடாது. டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியில் வெற்றிக்கும், டிராவுக்கும் வழங்கப்படும் புள்ளியில் அதிக வித்தியாசம் உள்ளது. உள்ளூரில் நடைபெறும் டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்றால் வெளியூர் டெஸ்ட் போட்டிகள் நமக்கு அனுகூலமாக அமையும். தென்ஆப்பிரிக்க அணியில் சிறந்த வீரர்கள் உள்ளனர். அவர்களை எளிதாக நினைக்கக்கூடாது. ஆடுகளத்தின் தன்மையை பொறுத்தே அணியின் வீரர்கள் இறுதி செய்யப்படுவார்கள். தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் 2 சுழற்பந்து வீச்சாளர்களுடன் நாம் களம் இறங்க வாய்ப்பு உள்ளது’ என்று தெரிவித்தார்.

Next Story