பெண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டிக்கு பியான்கா ஆன்ட்ரீஸ்கு தகுதி


பெண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டிக்கு பியான்கா ஆன்ட்ரீஸ்கு தகுதி
x
தினத்தந்தி 1 Oct 2019 9:45 PM GMT (Updated: 1 Oct 2019 8:25 PM GMT)

அமெரிக்க ஓபன் சாம்பியனான பியான்கா ஆன்ட்ரீஸ்கு, பெண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டிக்கு தகுதிபெற்றுள்ளார்.


* உலக பேட்மிண்டன் தரவரிசையில் இந்திய நட்சத்திர வீராங்கனையான உலக சாம்பியன் பி.வி.சிந்து ஒரு இடம் சரிந்து 6-வது இடத்திற்கு இறங்கியுள்ளார். கடந்த இரு தொடர்களில் தோல்வி எதிரொலியாக அவருக்கு தரவரிசையில் சறுக்கல் ஏற்பட்டுள்ளது.

* விஜய் ஹசாரே கோப்பைக்கான உள்நாட்டு ஒரு நாள் கிரிக்கெட் தொடரில் ஜெய்ப்பூரில் நேற்று நடந்த சி பிரிவு லீக் ஆட்டம் ஒன்றில் தமிழக அணி 74 ரன்கள் வித்தியாசத்தில் பெங்காலை பந்தாடியது. முதலில் பேட் செய்த தமிழக அணி கேப்டன தினேஷ் கார்த்திக் (97 ரன், 62 பந்து, 8 பவுண்டரி, 4 சிக்சர்), ஷாருக்கான் (69 ரன், 45 பந்து, 4 பவுண்டரி, 5 சிக்சர்) ஆகியோரது அதிரடியான அரைசதங்களின் உதவியுடன் 7 விக்கெட் இழப்புக்கு 286 ரன்கள் குவித்தது. தொடர்ந்து ஆடிய பெங்கால் அணி 45.3 ஓவர்களில் 212 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. ஷபாஸ் அகமது (107 ரன்) சதம் அடித்தும் பலன் இல்லை. தோல்வியே சந்திக்காத தமிழக அணி தொடர்ச்சியாக சுவைத்த 4-வது வெற்றி இதுவாகும்.

* பாகிஸ்தான் - இலங்கை அணிகள் இடையிலான 3-வது மற்றும் கடைசி ஒரு நாள் கிரிக்கெட் போட்டி கராச்சியில் இன்று (மாலை 3.30 மணி) நடக்கிறது. முதலாவது ஆட்டம் மழையால் கைவிடப்பட்ட நிலையில் 2-வது ஆட்டத்தில் பாகிஸ்தான் 67 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தது.

* தென்ஆப்பிரிக்கா- இந்தியா பெண்கள் அணிகள் இடையிலான 4-வது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி சூரத்தில் நேற்றிரவு நடந்தது. ஆடுகளம் ஈரப்பதம் காரணமாக 17 ஓவர்களாக குறைக்கப்பட்டு நடந்த இந்த ஆட்டத்தில் முதலில் பேட் செய்த இந்தியா 4 விக்கெட்டுக்கு 140 ரன்கள் சேர்த்தது. 15 வயதான ஷபாலி வர்மா 46 ரன்கள் (33 பந்து, 5 பவுண்டரி, 3 சிக்சர்) விளாசினார். தொடர்ந்து ஆடிய தென்ஆப்பிரிக்க அணி 7 விக்கெட்டுக்கு 89 ரன்கள் மட்டுமே எடுத்து தோற்றது.

* சீன ஓபன் டென்னிஸ் போட்டியில் விளையாடி வரும் அமெரிக்க ஓபன் சாம்பியனான பியான்கா ஆன்ட்ரீஸ்கு (கனடா) டாப்-8 வீராங்கனைகள் மட்டுமே கலந்து கொள்ளும் பெண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டிக்கு (அக்.27-ல் தொடக்கம்) முதல்முறையாக தகுதி பெற்றுள்ளார்.


Next Story