உலக தடகள போட்டியில் உயரம் தாண்டுதலில் ரஷிய வீராங்கனை மரியா ‘ஹாட்ரிக்’ சாம்பியன்


உலக தடகள போட்டியில் உயரம் தாண்டுதலில் ரஷிய வீராங்கனை மரியா ‘ஹாட்ரிக்’ சாம்பியன்
x
தினத்தந்தி 1 Oct 2019 11:15 PM GMT (Updated: 1 Oct 2019 9:08 PM GMT)

உலக தடகள போட்டியில் பெண்களுக்கான உயரம் தாண்டுதலில் ரஷிய வீராங்கனை மரியா லசிட்ஸ்கேனி ‘ஹாட்ரிக்’ சாம்பியன் பட்டத்தை வென்றார்.

தோகா,

17-வது உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டி கத்தார் தலைநகர் தோகாவில் நடந்து வருகிறது. இதில் நேற்று முன்தினம் நள்ளிரவு நடந்த ஆண்களுக்கான 400 மீட்டர் தடை ஓட்டத்தில் நார்வே வீரர் கார்ஸ்டென் வார்ஹோல்ம் 47.42 வினாடியில் பந்தய தூரத்தை கடந்து தங்கப்பதக்கத்தை மீண்டும் தனதாக்கினார். அவர் கடந்த 2017-ம் ஆண்டு உலக போட்டியிலும் தங்கம் வென்று இருந்தார்.

5 ஆயிரம் மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் எத்தியோப்பியா வீரர் முக்தார் எட்ரிஸ் 12 நிமிடம் 58.85 வினாடியில் இலக்கை எட்டி பட்டத்தை தக்க வைத்துக் கொண்டார்.

ஆண்களுக்கான 3 ஆயிரம் மீட்டர் ஸ்டீபிள்சேஸ் ஓட்டப்பந்தயத்தின் முதல் ரவுண்டில் இந்திய வீரர் அவினாஷ் சபில் 8 நிமிடம் 25.23 வினாடிகளில் இலக்கை கடந்து தனது பிரிவில் 7-வது இடத்திற்கு தள்ளப்பட்டு இறுதிப்போட்டி வாய்ப்பை இழந்தார். இந்த ஏமாற்றத்திற்கு மத்தியில் தனது முந்தைய தேசிய சாதனையை முறியடித்தது மட்டுமே அவருக்கு ஆறுதலாகும்.

பெண்களுக்கான உயரம் தாண்டுதலில் ரஷியாவை சேர்ந்த மரியா லசிட்ஸ்கேனி, உக்ரைன் வீராங்கனை யரோஸ்லாவா மஹூசிக் ஆகியோர் தலா 2.04 மீட்டர் உயரம் தாண்டினார்கள். ஆனால் ரஷிய வீராங்கனை மரியா தனது முதல் முயற்சியிலேயே அந்த இலக்கை தாண்டியதால் அவர் தங்கப்பதக்கத்தை தனதாக்கினர். இதன் மூலம் உலக போட்டியில் தொடர்ச்சியாக 3 முறை (2015, 2017, 2019) தங்கம் வென்ற முதல் உயரம் தாண்டுதல் வீராங்கனை என்ற பெருமையை அவர் பெற்றார். ஊக்க மருந்து சர்ச்சை காரணமாக ரஷிய தடகள சம்மேளனத்தை, சர்வதேச தடகள சம்மேளனம் தடை செய்து இருப்பதால் 26 வயதான மரியா லசிட்ஸ்கேனி இந்த போட்டியில் பொதுவான வீராங்கனைகள் பட்டியலில் பங்கேற்றார். யுரோஸ்வாலா மஹூசிக் தனது 3-வது முயற்சியில் அந்த உயரத்தை எட்டியதால் வெள்ளிப்பதக்கம் பெற்றார்.


Next Story