புரோ கபடி லீக்: கடைசி லீக்கில் உ.பி.யோத்தா அணி வெற்றி


புரோ கபடி லீக்: கடைசி லீக்கில் உ.பி.யோத்தா அணி வெற்றி
x
தினத்தந்தி 11 Oct 2019 11:11 PM GMT (Updated: 11 Oct 2019 11:13 PM GMT)

புரோ கபடி தொடரின் கடைசி லீக்கில் உ.பி.யோத்தா அணி வெற்றி பெற்றது.

நொய்டா,

12 அணிகள் இடையிலான 7-வது புரோ கபடி லீக் போட்டி கடந்த ஜூலை 20-ந் தேதி தொடங்கி நடந்து வருகிறது. இறுதிகட்டத்தை நெருங்கிவிட்ட இந்த கபடி திருவிழாவில் நேற்றிரவு நொய்டாவில் கடைசி சுற்று லீக் ஆட்டங்கள் நடந்தன. இதில் தபாங் டெல்லி- மும்பை இடையிலான பரபரப்பான ஆட்டம் 37-37 என்ற புள்ளி கணக்கில் சமனில் (டை) முடிந்தது. டெல்லி அணி வெற்றி பெறும் என்று எதிர்பார்த்த நிலையில் கடைசி ரைடில் மும்பை வீரர் அபிஷேக் சிங் ஒரு புள்ளி எடுத்து அணி சமநிலையை எட்ட உதவினார்.

அதைத் தொடர்ந்து நடந்த 132-வது லீக் ஆட்டத்தில் உ.பி.யோத்தா 45-33 என்ற புள்ளி கணக்கில் நடப்பு சாம்பியன் பெங்களூரு புல்சை வீழ்த்தி 13-வது வெற்றியை சுவைத்தது. பெங்களூரு அணியில் நட்சத்திர வீரர் பவான் செராவத் 13 புள்ளிகள் சேகரித்தும் பலன் இல்லை.

லீக் சுற்று முடிவில் டாப்-2 இடங்களை பிடித்த தபாங் டெல்லி, பெங்கால் வாரியர்ஸ் அணிகள் நேரடியாக அரைஇறுதிக்குள் நுழைந்தன. அடுத்த 4 இடங்களை பெற்ற உ.பி.யோத்தா, மும்பை, அரியானா ஸ்டீலர்ஸ், பெங்களூரு புல்ஸ் ஆகிய 4 அணிகள் அரைஇறுதிக்கான பிளே-ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றன. தமிழ் தலைவாஸ், பாட்னா பைரட்ஸ் உள்பட எஞ்சிய 6 அணிகள் வெளியேற்றப்பட்டன.



 

போட்டியில் இன்றும், நாளையும் ஓய்வு நாளாகும். ஆமதாபாத்தில் வருகிற 14-ந் தேதி நடைபெறும் முதலாவது வெளியேற்றுதல் சுற்றில் உ.பி.யோத்தா- பெங்களூரு புல்ஸ் அணிகளும் (7.30 மணி), அதே நாளில் நடக்கும் 2-வது வெளியேற்றுதல் சுற்றில் (இரவு 8.30 மணி) மும்பை-அரியானா அணிகளும் மோதுகின்றன. இந்த ஆட்டங்களில் வெற்றி பெறும் அணிகள் அரைஇறுதிக்கு தகுதி பெறும். 16-ந் தேதி அரைஇறுதி ஆட்டங்களும், 19-ந் தேதி இறுதிப்போட்டியும் அரங்கேறுகிறது.


Next Story