உலக குத்துச்சண்டை போட்டி: இந்திய வீராங்கனை மஞ்சு ராணி இறுதிப்போட்டிக்கு முன்னேற்றம்


உலக குத்துச்சண்டை போட்டி: இந்திய வீராங்கனை மஞ்சு ராணி இறுதிப்போட்டிக்கு முன்னேற்றம்
x
தினத்தந்தி 12 Oct 2019 10:54 PM GMT (Updated: 12 Oct 2019 10:54 PM GMT)

பெண்கள் உலக குத்துச்சண்டை போட்டியில் இந்திய வீராங்கனை மஞ்சு ராணி இறுதிபோட்டிக்கு முன்னேறினார்.

உலன் உடே,

பெண்கள் உலக குத்துச்சண்டை போட்டியில் இந்திய வீராங்கனை மஞ்சு ராணி இறுதிபோட்டிக்கு முன்னேறினார். மற்றொரு இந்திய நட்சத்திரம் மேரிகோம் அரை இறுதியில் தோல்வி கண்டு வெண்கலப் பதக்கம் பெற்றார்.

11-வது பெண்கள் உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டி ரஷியாவில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த 51 கிலோ எடைப்பிரிவின் அரைஇறுதியில் இந்தியாவின் முன்னணி வீராங்கனையான மேரிகோம், ஐரோப்பிய சாம்பியனான பஸ்னாஸ் காகிரோக்லுவை (துருக்கி) சந்தித்தார்.

விறுவிறுப்பான இந்த போட்டியில் மேரிகோம் 1-4 என்ற கணக்கில் காகிரோக்லுவிடம் அதிர்ச்சி தோல்வி அடைந்தார். நெருக்கமான இந்த பந்தயத்தில் துருக்கி வீராங்கனை வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டதை எதிர்த்து மேரிகோம் சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. ஆனால் சர்வதேச குத்துச்சண்டை சம்மேளனத்தின் தொழில்நுட்ப கமிட்டி மேரிகோமின் அப்பீலை நிராகரித்தது.

இது குறித்து இந்திய அணியின் உதவி பயிற்சியாளர் செஹோத்லால் யாதவ் கருத்து தெரிவிக்கையில், ‘மேரிகோம் சிறப்பாக செயல்பட்டார். இந்த போட்டியில் அவர் தான் வென்று இருக்க வேண்டும். அவருக்கு சாதகமாக தீர்ப்பு கிடைக்காதது எங்களுக்கு அதிர்ச்சி அளிக்கிறது’ என்றார். பின்னர் மேரிகோம் டுவிட்டரில் வேதனையுடன் கருத்து தெரிவித்துள்ளார். அதில், ‘இந்த போட்டியின் முடிவு எந்த அளவுக்கு சரியானது, எந்த அளவுக்கு தவறானது என்பதை உலகம் அறிந்து கொள்ளட்டும்’ என்று குறிப்பிட்டுள்ளார். அத்துடன் அவர் அளித்த பேட்டியில், ‘நடுவரின் முடிவு எனக்கு மிகுந்த அதிருப்தி அளிக்கிறது. இந்த தோல்வியை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. இதுபோன்று எனக்கு நடக்கும் என்று நினைத்துகூட பார்க்கவில்லை. ஒட்டுமொத்தத்தில் நான் சிறப்பாகவே செயல்பட்டேன். 51 கிலோ எடைப்பிரிவில் நான் நல்ல நிலையில் உள்ளேன். இந்த போட்டியின் மூலம் ஒலிம்பிக் தகுதி போட்டியில் என்னால் சிறப்பாக செயல்பட முடியும் என்ற நம்பிக்கை கிடைத்து இருக்கிறது’ என்றார்.

தோல்வி அடைந்த மூன்று குழந்தைகளின் தாயாரான 36 வயதான மேரிகோம் வெண்கலப்பதக்கத்துடன் திருப்தி அடைய வேண்டியதானது. 2012-ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டியில் வெண்கலப்பதக்கம் வென்றவரான மேரிகோம் உலக சாம்பியன்ஷிப் போட்டியில் 6 தங்கப்பதக்கமும் (2002, 2005, 2006, 2008, 2010, 2018), ஒரு வெள்ளிப்பதக்கமும் (2001) வென்றுள்ளார். தற்போது 8-வது பதக்கத்தை வென்ற மேரிகோம் உலக குத்துச்சண்டை போட்டியில் அதிக பதக்கம் வென்றவர் என்ற சாதனையை படைத்தார். இதற்கு முன்பு கியூபா வீரர் பெலிக்ஸ் சவோன் உலக குத்துச்சண்டையில் 7 பதக்கம் (6 தங்கம், ஒரு வெள்ளி) கைப்பற்றியதே சாதனையாக இருந்தது.

48 கிலோ எடைப்பிரிவின் அரைஇறுதியில் மஞ்சு ராணி (இந்தியா), தாய்லாந்து வீராங்கனை சுதாமட் ராக்சட்டுடன் மோதினார். இதில் மஞ்சு ராணி 4-1 என்ற கணக்கில் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறினார். தனது அறிமுக உலக போட்டியிலேயே பிரமிக்க வைத்துள்ள மஞ்சு ராணி தங்கம் அல்லது வெள்ளிப்பதக்கம் வெல்வது உறுதியாகி விட்டது. தனது முதல் உலக போட்டியிலேயே இந்திய வீராங்கனை ஒருவர் இறுதி சுற்றை எட்டுவது 18 ஆண்டுகளில் இதுவே முதல் முறையாகும்.

54 கிலோ உடல் எடைப்பிரிவின் அரைஇறுதியில் இந்தியாவின் ஜமுனா போரோ 0-5 என்ற கணக்கில் ஆசிய விளையாட்டு போட்டியில் வெண்கலப்பதக்கம் வென்றவரான சீன தைபேயின் ஹூயாங் ஹியோ வென்னிடம் தோல்வி கண்டு வெண்கலப்பதக்கம் பெற்றார்.

இதே போல் 69 கிலோ உடல் எடைப்பிரிவின் அரைஇறுதியில் கடந்த உலக போட்டியில் வெண்கலப்பதக்கம் வென்றவரான இந்திய வீராங்கனை லவ்லினா போர்கோஹெய்ன் 2-3 என்ற கணக்கில் சீனாவின் யாங் லியிடம் தோல்வி அடைந்து மீண்டும் வெண்கலப்பதக்கத்தை கைப்பற்றினார்.


Next Story