ஜிம்னாஸ்டிக்சில் புதிய வரலாறு படைத்தார் அமெரிக்க வீராங்கனை


ஜிம்னாஸ்டிக்சில் புதிய வரலாறு படைத்தார் அமெரிக்க வீராங்கனை
x
தினத்தந்தி 13 Oct 2019 11:22 PM GMT (Updated: 13 Oct 2019 11:22 PM GMT)

ஜிம்னாஸ்டிக்சில் புதிய வரலாறு படைத்தார் அமெரிக்க வீராங்கனை சிமோன் பைல்ஸ்.

ஸ்டட்கர்ட்,

உலக ஆர்டிஸ்டிக் ஜிம்னாஸ்டிக்ஸ் சாம்பியன்ஷிப் போட்டி ஜெர்மனியின் ஸ்டட்கர்ட் நகரில் நடந்து வந்தது. கடைசி நாளான நேற்று பெண்களுக்கான புளோர் பிரிவில் தனது சாகசத்தை காட்டி சிலிர்க்க வைத்த அமெரிக்க வீராங்கனை சிமோன் பைல்ஸ் மொத்தம் 15.133 புள்ளிகளுடன் முதலிடத்தை பிடித்து தங்கப்பதக்கத்தை தனதாக்கினார். இதே போல் பேலன்ஸ் பீம் பிரிவிலும் சிமோன் பைல்ஸ் மகுடம் சூடினார். இந்த தொடரில் இது அவரது 5-வது தங்கமாகும். இதன் மூலம் உலக ஜிம்னாஸ்டிக் போட்டியில் அவரது ஒட்டுமொத்த பதக்கங்களின் எண்ணிக்கை 25 ஆக உயர்ந்தது. உலக ஜிம்னாஸ்டிக்ஸ் வரலாற்றில் பெலாரஸ் வீரர் விடாலி ஸ்செர்போ 23 பதக்கம் வென்றதே இதுவரை அதிகபட்சமாக இருந்தது. அவரை 22 வயதான சிமோன் பைல்ஸ் பின்னுக்கு தள்ளி புதிய சரித்திரம் படைத்திருக்கிறார். இவர் ரியோ ஒலிம்பிக்கில் 4 தங்கம் வென்றது நினைவு கூரத்தக்கது.

Next Story