புரோ கபடியில் இறுதிப்போட்டிக்கு முன்னேறுவது யார்? டெல்லி-பெங்களூரு, பெங்கால்-மும்பை அணிகள் இன்று மோதல்


புரோ கபடியில் இறுதிப்போட்டிக்கு முன்னேறுவது யார்? டெல்லி-பெங்களூரு, பெங்கால்-மும்பை அணிகள் இன்று மோதல்
x
தினத்தந்தி 15 Oct 2019 11:54 PM GMT (Updated: 15 Oct 2019 11:54 PM GMT)

புரோ கபடியில் இறுதிப்போட்டிக்கு முன்னேறுவது யார்? என்பதை நிர்ணயிக்கும் அரைஇறுதி ஆட்டங்களில் தபாங் டெல்லி-பெங்களூரு புல்ஸ், பெங்கால் வாரியர்ஸ்-மும்பை அணிகள் மோதுகின்றன.

ஆமதாபாத்,

7-வது புரோ கபடி லீக் தொடர் இறுதி கட்டத்தை நெருங்கி விட்டது. 12 அணிகள் பங்கேற்ற இந்த போட்டியில் லீக் சுற்று முடிவில் புள்ளி பட்டியலில் முதலிடம் பிடித்த தபாங் டெல்லி, 2-வது இடம் பெற்ற பெங்கால் வாரியர்ஸ் அணிகள் நேரடியாக அரை இறுதிக்கு முன்னேறின.

நேற்று முன்தினம் நடந்த அரைஇறுதிக்கு முந்தைய ‘பிளே-ஆப்’ சுற்று ஆட்டங்களில் நடப்பு சாம்பியன் பெங்களூரு புல்ஸ் அணி கூடுதல் நேரத்தில் 48-45 என்ற புள்ளி கணக்கில் உ.பி.யோத்தா அணியை வீழ்த்தியும், முன்னாள் சாம்பியனான மும்பை அணி 46-38 என்ற புள்ளி கணக்கில் அரியானா ஸ்டீலர்சை சாய்த்தும் அரைஇறுதிக் குள் அடியெடுத்து வைத்தன.

இந்த நிலையில் குஜராத் மாநிலம் ஆமதாபாத்தில் இன்று (புதன்கிழமை) நடைபெறும் முதலாவது அரைஇறுதியில் ஜோகிந்தர் நர்வால் தலைமையிலான தபாங் டெல்லி, ரோகித் குமார் தலைமையிலான நடப்பு சாம்பியன் பெங்களூரு புல்ஸ் (இரவு 7.30 மணி) அணியை எதிர்கொள்கிறது. மற்றொரு அரைஇறுதியில் மனிந்தர் சிங் தலைமையிலான பெங்கால் வாரியர்ஸ், பாசெல் அட்ராசாலி தலைமையிலான மும்பை அணியை (இரவு 8.30 மணி) சந்திக்கிறது.

பெங்களூரு புல்ஸ் அணியின் நட்சத்திர வீரர் பவான் செராவத் இதுவரை 335 புள்ளிகள் குவித்து முன்னிலை வகிக்கிறார். அவரை நம்பியே அந்த அணி அதிகம் இருக்கிறது. அவரை டெல்லி அணி விரைவில் கட்டுப்படுத்தாவிட்டால் ஆட்டம் அந்த அணியின் கையைவிட்டு நழுவி விடும் என்பதில் சந்தேகம் இல்லை. இவ்விரு அணிகளும் இந்த சீசனில் 2 முறை நேருக்கு நேர் மோதி இருக்கின்றன. இதில் ஒரு ஆட்டத்தில் டெல்லி அணி (33-31) வெற்றி பெற்றது. மற்றொரு ஆட்டம் சமனில் (39-39) முடிந்தது.

பெங்கால் அணியை பொறுத்தவரை கேப்டன் மனிந்தர் சிங் கடந்த 2 லீக் ஆட்டங்களில் காயம் காரணமாக விளையாடவில்லை. அவர் இல்லாத குறையை பிரபஞ்சன், முகமது ஆகியோர் சரி செய்தனர். இந்த போட்டியில் மனிந்தர் சிங் களம் திரும்புவார் என்று நம்பப்படுகிறது. அவர் களம் திரும்பினால் பெங்கால் அணி வலுவாக விளங்கும்.

மும்பை அணியை எடுத்துக் கொண்டால், அணியின் கேப்டன் பாசெல் அட்ராசாலி நல்ல வியூகம் அமைத்து அணியை திறம்பட வழிநடத்தி வருகிறார். சமபலம் வாய்ந்த இரு அணிகளும் மல்லுக்கட்டும் இந்த ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது. இந்த சீசனில் இரு அணிகளும் 2 முறை சந்தித்து இருக்கின்றன. 2 முறையும் பெங்கால் அணி (32-30, 29-26) மும்பையை வீழ்த்தி இருந்தது.

போட்டி குறித்து பெங்கால் அணியின் பயிற்சியாளர் ரமேஷ் கூறுகையில், ‘மனிந்தர் சிங் எங்கள் அணியின் முன்மாதிரி வீரர். அவர் அணியில் இடம் பெறுவது எங்களுக்கு மிகவும் முக்கியமானதாகும். காயம் அடைந்த முன்னணி ரைடரான மனிந்தர்சிங் உடல் தகுதியை எட்டிவிட்டால் நாங்கள் நிச்சயம் சாம்பியன் பட்டத்தை வெல்வோம்’ என்றார்.

Next Story