டென்மார்க் ஓபன் பேட்மிண்டன்: லின் டானுக்கு அதிர்ச்சி அளித்தார், சாய் பிரனீத்


டென்மார்க் ஓபன் பேட்மிண்டன்: லின் டானுக்கு அதிர்ச்சி அளித்தார், சாய் பிரனீத்
x
தினத்தந்தி 15 Oct 2019 11:57 PM GMT (Updated: 15 Oct 2019 11:57 PM GMT)

டென்மார்க் ஓபன் பேட்மிண்டன் போட்டியில் இந்திய வீரர் சாய் பிரனீத், முன்னாள் ‘நம்பர் ஒன்’ வீரர் சீனாவின் லின் டானுக்கு அதிர்ச்சி அளித்து அசத்தினார்.

ஒடென்சி,

மொத்தம் ரூ.5½ கோடி பரிசுத்தொகைக்கான டென்மார்க் ஓபன் சர்வதேச பேட்மிண்டன் போட்டி ஒடென்சி நகரில் நேற்று தொடங்கியது. இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் நேற்று நடந்த முதலாவது சுற்று ஆட்டம் ஒன்றில் உலக சாம்பியனான இந்தியாவின் பி.வி.சிந்து 22-20, 21-18 என்ற நேர் செட் கணக்கில் முன்னாள் ஜூனியர் உலக சாம்பியனான கிரிகோரியா மரிஸ்கா துன்ஜங்கை (இந்தோனேஷியா) தோற்கடித்து 2-வது சுற்றுக்கு முன்னேறினார். சிந்து அடுத்து அன் செ யங்கை (தென்கொரியா) எதிர்கொள்கிறார்.

சிந்துவுக்கு சவால் அளிக்கும் வகையில் டாப்-3 நட்சத்திரங்களான தாய் ஜூ யிங் (சீனதைபே), அகானே யமாகுச்சி (ஜப்பான்), சென் யூ பெய் (சீனா) மற்றும் ஒலிம்பிக் சாம்பியன் கரோலினா மரின் (ஸ்பெயின்) ஆகியோரும் களத்தில் உள்ளனர். இன்று களம் காணும் மற்றொரு இந்திய வீராங்கனை சாய்னா நேவால் முதல் சுற்றில் சயாகா தகாஹசியுடன் (ஜப்பான்) மோதுகிறார்.

ஆண்கள் ஒற்றையர் முதலாவது சுற்று ஆட்டம் ஒன்றில் தரவரிசையில் 12-வது இடம் வகிக்கும் இந்தியாவின் சாய்பிரனீத், இரண்டு முறை ஒலிம்பிக் சாம்பியனுமான, 5 முறை உலக சாம்பியன் பட்டத்தை வென்றவருமான லின் டானை (சீனா) எதிர்கொண்டார். இதில் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய சாய் பிரனீத் 21-14, 21-17 என்ற நேர் செட் கணக்கில் லின் டானை சாய்த்து 2-வது சுற்றுக்கு தகுதி பெற்றார். 36 நிமிடங்களில் இந்த ஆட்டம் முடிவுக்கு வந்தது. லின் டானை சாய் பிரனீத் வீழ்த்துவது இதுவே முதல் முறையாகும். இதற்கு முன்பு அவருக்கு எதிராக மோதிய 2 ஆட்டங்களிலும் தோற்று இருந்தார்.

மற்றொரு ஆட்டத்தில் முன்னாள் காமன்வெல்த் சாம்பியனான காஷ்யப் (இந்தியா) 13-21, 12-21 என்ற நேர் செட் கணக்கில் சித்திகோம் தாமாசினிடம் (தாய்லாந்து) தோற்று வெளியேறினார். இதேபோல் இந்தியாவின் சவுரப் வர்மா 21-19, 11-21, 17-21 என்ற செட் கணக்கில் மார்க் கல்ஜோவிடம் (நெதர்லாந்து) போராடி வீழ்ந்தார்.

இதன் இரட்டையர் முதலாவது சுற்றில் இந்தியாவின் சாத்விக் சாய்ராஜ் ரங்கிரெட்டி-சிராக் ஷெட்டி ஜோடி 24-22, 21-11 என்ற நேர் செட் கணக்கில் கிம் ஜி ஜங்க்- லீ யாங் டா இணையை வென்றது.

Next Story