பிற விளையாட்டு

சென்னை பல்கலைக்கழக தடகளம்: லயோலா, எம்.ஓ.பி.வைஷ்ணவா ‘சாம்பியன்’ + "||" + Madras University Athletics Loyola, MOP Vaishnava Champion

சென்னை பல்கலைக்கழக தடகளம்: லயோலா, எம்.ஓ.பி.வைஷ்ணவா ‘சாம்பியன்’

சென்னை பல்கலைக்கழக தடகளம்: லயோலா, எம்.ஓ.பி.வைஷ்ணவா ‘சாம்பியன்’
சென்னை பல்கலைக்கழக தடகள போட்டியில் லயோலா, எம்.ஓ.பி. வைஷ்ணவா கல்லூரி அணிகள் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றின.
சென்னை, 

ஏ.லட்சுமணசாமி முதலியார் கோப்பைக்கான 52-வது சென்னை பல்கலைக்கழக தடகள சாம்பியன்ஷிப் போட்டி சென்னை நேரு ஸ்டேடியத்தில் 3 நாட்கள் நடந்தது. இதில் 3-வது மற்றும் கடைசி நாளான நேற்று நடந்த ஆண்களுக்கான மினி மாரத்தான் பந்தயத்தில் ஏ.சரவணனும், 110 மீட்டர் தடை ஓட்டத்தில் வீரராகவேந்திரனும், நீளம் தாண்டுதலில் எம்.மகேசும் (மூவரும் லயோலா) தங்கப்பதக்கம் வென்றனர். உயரம் தாண்டுதலில் லயோலா வீரர் ஆதர்ஷ் ராம் (2.15 மீட்டர்) புதிய போட்டி சாதனையுடன் தங்கப்பதக்கத்தை தனதாக்கினார்.

200 மீட்டர் ஓட்டத்தில் நிதினும் (ஆர்.கே.எம்.விவேகானந்தா), 1,500 மீட்டர் ஓட்டத்தில் ஜீவா சரணும், டெக்கத்லானில் பிரவீன்குமாரும் (இருவரும் டி.ஜி.வைஷ்ணவா) தங்கப்பதக்கம் கைப்பற்றினார்கள். வட்டு எறிதலில் எம்.சி.சி. வீரர் சூர்யா (48.26 மீட்டர்) புதிய போட்டி சாதனையுடன் தங்கப்பதக்கத்தை சொந்தமாக்கினார்.

பெண்களுக்கான மினி மாரத்தானில் வைஜெயந்திமாலாவும் (சோகா இகேடா), ஹெப்டத்லானில் தீபிகாவும், 200 மீட்டர் ஓட்டத்தில் ரோஷிணியும் (இருவரும் எம்.ஓ.பி. வைஷ்ணவா), 1,500 மீட்டர் ஓட்டத்தில் சுஷ்மிதாவும் (எஸ்.டி.என்.பி.வைஷ்ணவா) தங்கப்பதக்கத்தை தட்டிச் சென்றனர். நீளம் தாண்டுதலில் எம்.ஓ.பி.வைஷ்ணவா வீராங்கனை ஷெரின் (6.16 மீட்டர்) புதிய போட்டி சாதனையுடன் தங்கப்பதக்கத்தை வென்றார்.

ஆண்கள் பிரிவில் லயோலா கல்லூரி (11 தங்கம், 6 வெள்ளி, 10 வெண்கலம்) சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. டி.ஜி.வைஷ்ணவா கல்லூரி (4 தங்கம், 12 வெள்ளி, 6 வெண்கலம்) 2-வது இடம் பெற்றது. பெண்கள் பிரிவில் எம்.ஓ.பி. வைஷ்ணவா கல்லூரி (13 தங்கம், 11 வெள்ளி, 6 வெண்கலம்) சாம்பியன் பட்டத்தை மீண்டும் சொந்தமாக்கியது. சோகா இகேடா கல்லூரி (4 தங்கம், 3 வெண்கலம்) 2-வது இடம் பெற்றது. ஆர்.கே.எம். விவேகானந்தா கல்லூரி வீரர் நிதினும் (1,059 புள்ளிகள்), எம்.ஓ.பி. வைஷ்ணவா கல்லூரி வீராங்கனை ஷெரினும் (1,033 புள்ளிகள்) தனிநபர் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார்கள்.

பின்னர் நடந்த பரிசளிப்பு விழாவில் சென்னை பல்கலைக்கழக துணைவேந்தர் பி.துரைசாமி கலந்து கொண்டு வெற்றி பெற்ற கல்லூரிகளுக்கு பரிசு கோப்பையை வழங்கினார். சென்னை பல்கலைக்கழக உடற்கல்வி இயக்குனர் வி.மகாதேவன், சின்டிகேட் உறுப்பினர்கள் லலிதா பாலகிருஷ்ணன், காந்திராஜ் உள்பட பலர் விழாவில் கலந்து கொண்டனர்.