இந்திய குத்துச்சண்டை அணி தேர்வை நியாயமான முறையில் நடத்த வேண்டும் இளம் வீராங்கனை நிகாத் ஜரீன் வலியுறுத்தல்


இந்திய குத்துச்சண்டை அணி தேர்வை நியாயமான முறையில் நடத்த வேண்டும் இளம் வீராங்கனை நிகாத் ஜரீன் வலியுறுத்தல்
x
தினத்தந்தி 17 Oct 2019 11:09 PM GMT (Updated: 17 Oct 2019 11:09 PM GMT)

இந்திய குத்துச்சண்டை அணிக்கான வீராங்கனைகள் தேர்வை நியாயமான முறையில் நடத்த வேண்டும். மேரிகோமுக்கு சலுகை அளிக்கக்கூடாது என்று இளம் வீராங்கனை நிகாத் ஜரீன் வலியுறுத்தி உள்ளார்.

புதுடெல்லி,

சமீபத்தில் ரஷியாவில் நடந்த பெண்கள் உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் 51 கிலோ எடைப்பிரிவில் இந்தியாவின் முன்னணி வீராங்கனையான 36 வயது மேரிகோம் வெண்கலப்பதக்கம் வென்றார். உலக போட்டியில் அவர் வென்ற 8-வது பதக்கம் இதுவாகும். உலக போட்டிக்கு முன்பு இந்திய அணிக்கு யாரை தேர்வு செய்வது என்பதை தகுதி போட்டி வைத்து தீர்மானிக்க முடிவு செய்து இருந்த இந்திய குத்துச்சண்டை சம்மேளனம் கடைசி நேரத்தில் தகுதி போட்டியை ரத்து செய்ததுடன், முந்தைய உலக போட்டியில் தங்கம் மற்றும் வெள்ளிப்பதக்கம் வென்ற வீராங்கனைகள் நேரடியாக உலக போட்டிக்கான இந்திய அணிக்கு தேர்வு செய்யப்படுவார்கள் என்று அறிவித்தது.

உலக போட்டியில் 6 முறை தங்கம் வென்ற மேரிகோம் தொடர்ச்சியாக சிறப்பாக செயல்பட்டு வருவதன் அடிப்படையில் உலக போட்டிக்கான இந்திய குத்துச்சண்டை அணியில் நேரடியாக இடம் பிடித்தார். இதே எடைப்பிரிவில் உள்ள முன்னாள் ஜூனியர் உலக சாம்பியனான 23 வயது நிகாத் ஜரீனுக்கு அணியில் இடம் கிடைக்கவில்லை. அவர் தகுதி போட்டி நடத்தி இந்திய அணியை முடிவு செய்ய வேண்டும் என்று விடுத்த கோரிக்கை நிராகரிக்கப்பட்டது.

டோக்கியோவில் அடுத்த ஆண்டு (2020) நடைபெறும் ஒலிம்பிக் போட்டிக்கான குத்துச்சண்டை பந்தய தகுதி சுற்று போட்டி சீனாவில் வருகிற பிப்ரவரி மாதம் நடக்கிறது. இந்த தகுதி சுற்று போட்டிக்கான இந்திய குத்துச்சண்டை அணிக்கு மேரிகோமை நேரடியாக தேர்வு செய்ய இந்திய குத்துச்சண்டை சம்மேளனம் முடிவு செய்து இருப்பதாக தெரிகிறது. மேரிகோமை தகுதி போட்டி நடத்தி தேர்வு செய்ய வேண்டும் என்று சக வீராங்கனை நிகாத் ஜரீன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இது தொடர்பாக நிகாத் ஜரீன் மத்திய விளையாட்டு துறை மந்திரி கிரண் ரிஜிஜூவுக்கு எழுதியிருக்கும் கடிதத்தில் கூறியிருப்பதாவது:-

நான் 2011-ம் ஆண்டு நடந்த பெண்கள் ஜூனியர் உலக குத்துச்சண்டை போட்டியில் தங்கப்பதக்கமும், 2013-ம் ஆண்டு நடந்த இளையோர் உலக குத்துச்சண்டை போட்டியில் வெள்ளிப்பதக்கமும் வென்றேன். இந்த ஆண்டில் நடந்த தாய்லாந்து ஓபன் போட்டியில் வெள்ளிப்பதக்கம் கைப்பற்றினேன். அந்த போட்டியில் நான் நடப்பு உலக சாம்பியனான அய்பாயெவா லிலியாவை வீழ்த்தினேன். சமீபத்தில் நடந்த உலக குத்துச்சண்டை போட்டிக்கான இந்திய அணி வீராங்கனைகளுக்கு தகுதி போட்டி டெல்லியில் கடந்த ஆகஸ்டு 6 மற்றும் 7-ந் தேதி நடைபெறும் என்று எனக்கு அழைப்பு விடுக்கப்பட்டு இருந்தது. ஆனால் கடைசியில் தகுதி போட்டி ரத்து செய்யப்பட்டதுடன், மேரிகோம் உலக போட்டிக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

அதன் பிறகு உலக போட்டியில் தங்கம் மற்றும் வெள்ளிப்பதக்கம் வென்றவர்களுக்கு ஒலிம்பிக் போட்டிக்கான இந்திய அணியில் இடம் பிடிக்க தகுதி போட்டியில் பங்கேற்பதில் இருந்து விலக்கு அளிக்கப்படும் என்று இந்திய குத்துச்சண்டை சம்மேளனம் தெரிவித்தது. தற்போது அந்த விதிமுறையிலும் மாற்றம் செய்யப்பட்டு இருப்பதாக நான் அறிகிறேன். ஒலிம்பிக் தகுதி சுற்று போட்டிக்கான இந்திய அணியில் மேரிகோம் நேரடியாக இடம் பெற வசதியாக இந்த மாற்றம் செய்யப்பட்டுள்ளது. விளையாட்டின் அடிப்படை தத்துவமே நியாயமான முறையில் செயல்பட வேண்டும் என்பது தான். ஒவ்வொரு முறையும் வீராங்கனைகள் தங்கள் திறமையை நிரூபித்து காட்ட வேண்டியது அவசியமானதாகும். ஒலிம்பிக் போட்டியில் தங்கப்பதக்கம் வென்றவர்கள் கூட மீண்டும் தங்கள் நாட்டுக்காக களம் காண தகுதி போட்டியில் விளையாட தான் செய்கிறார்கள். நான் எனக்கு சாதகமாக நடக்க வேண்டும் என்று கேட்கவில்லை. மேரிகோமோ அல்லது வேறு யாராக இருந்தாலும் தகுதி போட்டியின் மூலமே இந்திய அணிக்கு தேர்வு செய்யப்பட வேண்டும். இந்த விஷயத்தில் நீங்கள் (மத்திய விளையாட்டு மந்திரி) தலையிட்டு நியாயமான தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Next Story