புரோ கபடி போட்டி: பெங்கால் வாரியர்ஸ் அணி ‘சாம்பியன்’ - டெல்லியை வீழ்த்தியது


புரோ கபடி போட்டி: பெங்கால் வாரியர்ஸ் அணி ‘சாம்பியன்’ - டெல்லியை வீழ்த்தியது
x
தினத்தந்தி 19 Oct 2019 4:36 PM GMT (Updated: 19 Oct 2019 11:07 PM GMT)

புரோ கபடி இறுதி ஆட்டத்தில் தபாங் டெல்லியை வீழ்த்தி பெங்கால் வாரியர்ஸ் அணி முதல்முறையாக சாம்பியன் பட்டத்தை உச்சிமுகர்ந்தது.

ஆமதாபாத்,

7-வது புரோ கபடி லீக் போட்டி கடந்த ஜூலை 20-ந்தேதி தொடங்கியது. 12 அணிகள் பங்கேற்ற இந்த கபடி திருவிழாவில் லீக், அரைஇறுதி சுற்று முடிவில் தபாங் டெல்லியும், பெங்கால் வாரியர்சும் முதல்முறையாக இறுதிப்போட்டிக்குள் நுழைந்தன. இந்த நிலையில் இவ்விரு அணிகள் இடையே மகுடம் யாருக்கு என்பதை நிர்ணயிக்கும் இறுதி ஆட்டம் ஆமதாபாத்தில் நேற்றிரவு அரங்கேறியது. தோள்பட்டை காயம் காரணமாக பெங்கால் கேப்டன் மனீந்தர்சிங் இந்த ஆட்டத்திலும் ஆடவில்லை.

விறுவிறுப்பான இந்த மோதலில் ஆரம்பத்தில் டெல்லி அணியினர் மளமளவென புள்ளிகளை சேர்த்தனர். 7-வது நிமிடத்தில் பெங்காலை ஆல்-அவுட் செய்த டெல்லி 11-3 என்ற புள்ளி கணக்கில் முன்னிலை பெற்றது. இதன் பிறகு ஆக்ரோஷமாக எழுச்சி பெற்ற பெங்கால் வீரர்கள் டெல்லியை ஆல்-அவுட் செய்து பதிலடி கொடுத்தனர். பொறுப்பு கேப்டன் முகமது நபிபாக்‌ஷ், ரைடு மூலம் இரண்டு வீரர்களை சாதுர்யமாக வீழ்த்தியது பெங்கால் அணியின் உத்வேகத்துக்கு அடித்தளமாக அமைந்தது. முதல் பாதி ஆட்டம் 17-17 என்ற புள்ளி கணக்கில் சமன் ஆனது.

பிற்பாதியில் பெங்கால் வீரர்கள் முழுமையாக ஆதிக்கம் செலுத்தினர். அவர்களின் ஒருங்கிணைந்த ஆட்டத்தை சமாளிக்க முடியாமல் டெல்லி அணியினர் மிரண்டனர். இரண்டு முறை டெல்லியை ஆல்-அவுட் செய்த பெங்கால் ஒரு கட்டத்தில் 34-26 என்ற புள்ளி கணக்கில் வலுவான முன்னிலை கண்டது.

டெல்லி அணியை பொறுத்தவரை நட்சத்திர வீரர் நவீன்குமார் தனிவீரராக போராடினார். இடைவிடாது ரைடு சென்று புள்ளிகளை சேகரித்தார். ஆனால் டெல்லியின் டேக்கிள்ஸ் யுக்தி மெச்சும்படி இல்லை. ஆட்டம் நெருங்கிய சமயத்தில் பெங்கால் அணியினர் நேரத்தை கடத்தி முன்னிலையை தக்க வைத்துக் கொண்டனர்.



 


முடிவில் பெங்கால் அணி 39-34 என்ற புள்ளி கணக்கில் டெல்லியை வீழ்த்தி முதல்முறையாக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. பெங்கால் அணியில் அதிகபட்சமாக நபிபாக்‌ஷ் 10 புள்ளிகளும், சுகேஷ் ஹெக்டே 8 புள்ளிகளும் எடுத்தனர். டெல்லி அணியில் நவீன்குமார் 18 புள்ளிகள் எடுத்தும் பலன் இல்லை.

புரோ கபடியில் ஏற்கனவே ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ், யூ மும்பா, பாட்னா பைரட்ஸ் (3 முறை), பெங்களூரு புல்ஸ் ஆகிய அணிகள் பட்டம் வென்றுள்ளன. அந்த வரிசையில் பெங்கால் வாரியர்சும் இணைந்துள்ளது. வாகை சூடிய பெங்கால் வாரியர்சுக்கு ரூ.3 கோடியும், 2-வது இடத்தை பிடித்த தபாங் டெல்லிக்கு ரூ.1.8 கோடியும் பரிசுத்தொகையாக வழங்கப்பட்டது.

தொடரின் மிகவும் மதிப்பு மிக்க வீரராக டெல்லி வீரர் நவீன்குமார் (23 ஆட்டத்தில் 301 ரைடு புள்ளி) தேர்வு செய்யப்பட்டார். அவருக்கு ரூ.20 லட்சம் பரிசுத்தொகை கிடைத்தது.


Next Story