ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளராக ஆஸ்திரேலிய முன்னாள் டெஸ்ட் வீரர் நியமனம்


ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளராக ஆஸ்திரேலிய முன்னாள் டெஸ்ட் வீரர் நியமனம்
x
தினத்தந்தி 21 Oct 2019 10:57 PM GMT (Updated: 21 Oct 2019 10:57 PM GMT)

ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளராக ஆஸ்திரேலிய முன்னாள் டெஸ்ட் வீரர் ஆன்ட்ரூ பார்ரி மெக்டொனால்டு நியமனம் செய்யப்பட்டுள்ளார்.


* ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிக்கான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளராக ஆஸ்திரேலிய முன்னாள் டெஸ்ட் வீரர் ஆன்ட்ரூ பார்ரி மெக்டொனால்டு நியமனம் செய்யப்பட்டுள்ளார். கொல்கத்தாவில் டிசம்பர் 19-ந் தேதி நடைபெறும் வீரர்கள் ஏலத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி நிர்வாகத்தினருடன் ஆன்ட்ரூ பார்ரி மெக்டொனால்டு இணைந்து செயல்பட இருக்கிறார்.

* வங்காளதேசத்துக்கு எதிரான 20 ஓவர் போட்டி தொடரில் இந்திய அணி கேப்டன் விராட்கோலி கலந்து கொள்ளவில்லை என்றும் தொடர்ந்து போட்டிகளில் பங்கேற்று வருவதால் இந்த தொடரில் மட்டும் அவர் ஓய்வு எடுத்து கொள்ள விரும்புவதாக செய்திகள் வெளியாயின. இது குறித்து இந்திய கிரிக்கெட் வாரிய புதிய தலைவர் கங்குலியிடம் நேற்று கேட்ட போது, ‘விராட்கோலியை வருகிற 24-ந் தேதி சந்தித்து பேச இருக்கிறேன். அப்போது வாரிய தலைவர் என்ற முறையில் இது குறித்து அவரிடம் பேசுவேன். கேப்டன் என்ற முறையில் அவர் இந்த விஷயத்தில் முடிவு எடுத்து கொள்ளலாம். ரோகித் சர்மாவின் ஆட்டம் எனக்கு மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. அவர் திறமை வாய்ந்த பேட்ஸ்மேன் என்பது எங்களுக்கு தெரியும்’ என்று கூறினார்.

* பாகிஸ்தான் கிரிக்கெட் அணி நவம்பர் மாதத்தில் ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து மூன்று 20 ஓவர் மற்றும் 2 டெஸ்ட் போட்டியில் விளையாடுகிறது. இந்த போட்டி தொடருக்கான பாகிஸ்தான் கிரிக்கெட் அணி நேற்று அறிவிக்கப்பட்டது. சமீபத்தில் பாகிஸ்தான் அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்ட விக்கெட் கீப்பர் மற்றும் பேட்ஸ்மேனான சர்ப்ராஸ் அகமதுக்கு எதிர்பார்த்தபடி அணியில் இடம் கிடைக்கவில்லை. அவருக்கு பதிலாக விக்கெட் கீப்பர் முகமது ரிஸ்வான் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். 20 ஓவர் அணியில் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் அப்துல் காதிர் மகன் உஸ்மான் புதுமுக வீரராக இடம் பிடித்துள்ளார்.


Next Story