ஆசிய துப்பாக்கி சுடுதலில் இந்திய வீரர் தீபக்குமாருக்கு வெண்கலம் - ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றார்


ஆசிய துப்பாக்கி சுடுதலில் இந்திய வீரர் தீபக்குமாருக்கு வெண்கலம் - ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றார்
x
தினத்தந்தி 5 Nov 2019 11:39 PM GMT (Updated: 5 Nov 2019 11:39 PM GMT)

ஆசிய துப்பாக்கி சுடுதலில் இந்திய வீரர் தீபக்குமார் வெண்கலம் வென்றார். இதன்மூலம் ஒலிம்பிக் போட்டிக்கு அவர் தகுதி பெற்றார்.

தோகா,

14-வது ஆசிய துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் போட்டி கத்தார் தலைநகர் தோகாவில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த ஆண்களுக்கான 10 மீட்டர் ஏர் ரைபிள் பந்தயத்தின் இறுதிப்போட்டியில் இந்திய வீரர் தீபக்குமார் 227.8 புள்ளிகள் குவித்து வெண்கலப்பதக்கம் வென்றார். இதன் மூலம் அவர் அடுத்த ஆண்டு டோக்கியோவில் நடைபெறும் ஒலிம்பிக் போட்டிக்கான கோட்டாவை உறுதி செய்தார். அவருக்கு நேற்று 32-வது பிறந்த நாள் ஆகும். பிறந்த நாள் பரிசாக ஒலிம்பிக் வாய்ப்பு கிட்டியுள்ளது. இந்த போட்டியில் சீன வீரர் யுகுன் லி (250.5 புள்ளிகள்) தங்கப்பதக்கமும், மற்றொரு சீன வீரர் ஹனான் யு (249.1 புள்ளிகள்) வெள்ளிப்பதக்கமும் வென்றனர். டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கான துப்பாக்கி சுடுதலில் இந்தியா பெற்ற 10-வது கோட்டா இதுவாகும்.

பெண்களுக்கான 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவில் இந்திய வீராங்கனை 17 வயதான மானு பாகெர் 244.3 புள்ளிகளுடன் முதலிடத்தை பிடித்து தங்கப்பதக்கத்தை தட்டிச் சென்றார். இவர் ஏற்கனவே ஒலிம்பிக் வாய்ப்பை உறுதி செய்து விட்டது குறிப்பிடத்தக்கது.


Next Story