உலகின் மிகச்சிறந்த பந்து வீச்சாளர் ஷமி - ஸ்டெயின் பேட்டி


உலகின் மிகச்சிறந்த பந்து வீச்சாளர் ஷமி - ஸ்டெயின் பேட்டி
x
தினத்தந்தி 17 Nov 2019 11:14 PM GMT (Updated: 17 Nov 2019 11:14 PM GMT)

உலகின் மிகச்சிறந்த பந்து வீச்சாளர் முகமது ஷமி என தென்ஆப்பிரிக்க முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஸ்டெயின் தெரிவித்துள்ளார்.


* இந்தூரில் நடந்த வங்காளதேசத்துக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 3-வது நாளிலேயே வெற்றி பெற்றது. 2-வது டெஸ்ட் பகல்-இரவு போட்டியாக கொல்கத்தாவில் வருகிற 22-ந்தேதி தொடங்குகிறது. இந்தூரிலேயே தங்கியிருக்கும் இந்திய வீரர்களில் பெரும்பாலானோர் நேற்று அங்கு மின்னொளியின் கீழ் பயிற்சி மேற்கொண்டனர். அதே சமயம் கேப்டன் கோலி, ரோகித் சர்மா மற்றும் பிரதான வேகப்பந்து வீச்சாளர்களுக்கு ஓய்வு அளிக்கப்பட்டிருந்தது.

* பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் முஷ்தாக் அகமது நேற்று அளித்த ஒரு பேட்டியில், ‘ இந்தியா-பாகிஸ்தான் அணிகள் இடையே மீண்டும் கிரிக்கெட் போட்டிகள் நடத்தப்பட வேண்டும். கிரிக்கெட் போட்டியின் மூலம் இரு நாட்டு உறவை மேம்படுத்த முடியும். ரசிகர்களும் இந்தியா-பாகிஸ்தான் போட்டியை பார்க்க ஆர்வமாக இருக்கிறார்கள். கிரிக்கெட்டில் இந்தியா-பாகிஸ்தான் அணிகள் சந்திக்கும் போதெல்லாம் அது அனல்பறக்கும் போட்டியாக இருக்கும். இது, ஆஷஸ் தொடரை விட பெரியது’ என்றார்.

* தென்ஆப்பிரிக்க முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஸ்டெயின் ரசிகரின் கேள்விக்கு அளித்த ஒரு பதிலில், ‘இந்தியாவின் முகமது ஷமி தற்போது இருக்கும் பார்மை பார்க்கும் போது, அவர் தான் இப்போது உலகின் மிகச்சிறந்த பந்து வீச்சாளர் ஆவார்’ என்றார்.

* இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் ஆல்-ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ் சமீபத்தில் வெளியிட்ட தனது புத்தகத்தில், ‘ஹெட்டிங்லேயில் நடந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆஷஸ் டெஸ்டின் போது ஸ்லிப்பில் நின்ற டேவிட் வார்னர் என்னை ஏதேதோ சொல்லி சீண்டியபடி இருந்தார். அது தான் அந்த போட்டியில் நான் கடைசி வரை களத்தில் நின்று (135 ரன்) வெற்றி பெறுவதற்கு தூண்டுகோளாக இருந்தது’ என்று எழுதியுள்ளார். இதனை மறுத்துள்ள ஆஸ்திரேலிய கேப்டன் டிம் பெய்ன் கூறுகையில் ‘அந்த டெஸ்டில் எனது அருகில் தான் வார்னர் நின்று கொண்டிருந்தார். அவர் கிரிக்கெட் பற்றி பேசினாரே தவிர ஸ்டோக்சை எதுவும் விமர்சிக்கவில்லை. திட்டவும் இல்லை. தங்களது புத்தகத்தை விற்பதற்காக இங்கிலாந்து வீரர்கள் வழக்கமாக கையாளும் யுக்தி தான் இது’ என்று சாடியுள்ளார்.


Next Story