பிற விளையாட்டு

தெற்காசிய விளையாட்டு போட்டி: தடகளத்தில் இந்தியாவுக்கு 4 தங்கம் உள்பட 10 பதக்கம் - கைப்பந்திலும் அசத்தல் + "||" + South Asian Games Tournament: India wins 10 medals including 4 gold in athletics

தெற்காசிய விளையாட்டு போட்டி: தடகளத்தில் இந்தியாவுக்கு 4 தங்கம் உள்பட 10 பதக்கம் - கைப்பந்திலும் அசத்தல்

தெற்காசிய விளையாட்டு போட்டி: தடகளத்தில் இந்தியாவுக்கு 4 தங்கம் உள்பட 10 பதக்கம் - கைப்பந்திலும் அசத்தல்
தெற்காசிய விளையாட்டு போட்டியில் இந்தியா நேற்று ஒரே நாளில் தடகளத்தில் 4 தங்கம் உள்பட 10 பதக்கங்களை அள்ளியது. இந்திய கைப்பந்து அணிகள் தங்கப்பதக்கத்தை தனதாக்கியது.
காத்மண்டு,

13-வது தெற்காசிய விளையாட்டு போட்டி நேபாளத்தில் உள்ள காத்மண்டு, போக்ஹராவில் நடந்து வருகிறது. இந்தியா, இலங்கை, பாகிஸ்தான் உள்பட 7 நாடுகளை சேர்ந்த 2,700 வீரர்-வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.

இதில் தடகள போட்டிகள் காத்மண்டுவில் உள்ள தசரத் ஸ்டேடியத்தில் நேற்று தொடங்கியது. பெண்களுக்கான 100 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் இந்திய வீராங்கனை அர்ச்சனா சுசீந்திரன் 11.80 வினாடியில் பந்தய தூரத்தை கடந்து தங்கப்பதக்கத்தை தனதாக்கினார். இலங்கை வீராங்கனைகள் தனுஜி அம்ஷா (11.82 வினாடி) வெள்ளிப்பதக்கமும், லக்‌ஷிகா சுகந்த் (11.84 வினாடி) வெண்கலப்பதக்கமும் பெற்றனர். உயரம் தாண்டுதலில் இந்திய வீராங்கனை ஜாஷ்னா 1.73 மீட்டர் உயரம் தாண்டி தங்கப்பதக்கத்தை கைப்பற்றினார். மற்றொரு இந்திய வீராங்கனை ருபினா யாதவ் (1.69 மீட்டர்) வெண்கலப்பதக்கம் பெற்றார்.


ஆண்களுக்கான உயரம் தாண்டுதலில் இந்திய வீரர் சர்வேஷ் அனில் குஷாரே 2.21 மீட்டர் உயரம் தாண்டி தங்கப்பதக்கமும், மற்றொரு இந்திய வீரர் சேத்தன் பாலசுப்பிரமன்யா 2.16 மீட்டர் உயரம் தாண்டி வெள்ளிப்பதக்கமும், வென்றனர். 1,500 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் இந்திய வீரர் அஜய்குமார் சரோஜ் 3 நிமிடம் 54.18 வினாடியில் பந்தய தூரத்தை கடந்து தங்கப்பதக்கத்தை தட்டிச் சென்றார். மற்றொரு இந்திய வீரர் அஜீத் குமார் (3 நிமிடம் 57.18 வினாடி) வெள்ளிப்பதக்கம் பெற்றார்.

பெண்களுக்கான 10,000 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் இந்திய வீராங்கனை கவிதா யாதவ் வெள்ளிப்பதக்கம் வென்றார். 1,500 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் இந்திய வீராங்கனைகள் சண்டா வெள்ளிப்பதக்கமும், சித்ரா பாலாகீஸ் வெண்கலப்பதக்கமும் பெற்றனர். தடகள போட்டியில் நேற்று ஒரே நாளில் இந்தியா 4 தங்கம், 4 வெள்ளி, 2 வெண்கலம் என மொத்தம் 10 பதக்கங்களை கைப்பற்றியது.

துப்பாக்கி சுடுதலில் பெண்களுக்கான 10 மீட்டர் ஏர் ரைபிள் பந்தயத்தில் 19 வயது இந்திய வீராங்கனையான மெகுலி கோஷ் 253.3 புள்ளிகள் குவித்து புதிய உலக சாதனையுடன் தங்கப்பதக்கத்தை சொந்தமாக்கினார். இந்த பிரிவில் இந்திய வீராங்கனை அபூர்வி சண்டிலா 252.9 புள்ளிகள் குவித்ததே நடப்பு உலக சாதனையாக உள்ளது. ஆனால் தெற்காசிய போட்டியில் படைக்கப்படும் சாதனைக்கு சர்வதேச துப்பாக்கி சுடுதல் சம்மேளனம் அங்கீகாரம் அளிப்பது கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது. 


  இந்திய வீராங்கனைகள் ஸ்ரீயங்கா சடாங்கி (250.8 புள்ளிகள்) வெள்ளிப்பதக்கமும், ஸ்ரேயா அகர்வால் (227.2 புள்ளிகள்) வெண்கலப்பதக்கமும் பெற்றனர். இதன் அணிகள் பிரிவிலும் இந்தியா மகுடம் சூடியது. தேக்வாண்டோ போட்டியில் இந்தியாவுக்கு ஒரு தங்கமும், 3 வெண்கலப்பதக்கமும், டேபிள் டென்னிஸ் போட்டியில் இந்திய ஆண்கள் மற்றும் பெண்கள் அணி அணி தங்கப்பதக்கத்தையும் வசப்படுத்தியது.

கைப்பந்து போட்டியில் இந்திய ஆண்கள் மற்றும் பெண்கள் அணிகள் தங்கப்பதக்கம் வென்று அசத்தியது. ஆண்கள் பிரிவின் இறுதிப்போட்டியில் இந்திய அணி 20-25, 25-15, 25-17, 29-27 என்ற செட் கணக்கில் பாகிஸ்தானை சாய்த்தது.

பெண்கள் பிரிவின் இறுதிசுற்றில் இந்திய அணி 25-17, 23-25, 21-25, 25-20, 15-6 என்ற செட் கணக்கில் நேபாள அணியை வீர்த்தி தங்கப்பதக்கத்தை உச்சி முகர்ந்தது. தங்கப்பதக்கம் வென்ற இந்திய கைப்பந்து அணியினருக்கு, இந்திய கைப்பந்து சம்மேளன தலைவர் எஸ்.வாசுதேவன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

பதக்கபட்டியலில் நேபாளம் 23 தங்கம், 9 வெள்ளி, 12 வெண்கலத்துடன் முதலிடத்தில் உள்ளது. இந்தியா 18 தங்கம், 16 வெள்ளி, 9 வெண்கலத்துடன் 2-வது இடத்தில் உள்ளது.


தொடர்புடைய செய்திகள்

1. பள்ளி மாணவிகளுக்கான தடகளம்: உயரம் தாண்டுதலில் சென்னை வீராங்கனை முதலிடம்
பள்ளி மாணவிகளுக்கான தடகள போட்டியில், உயரம் தாண்டுதலில் சென்னை வீராங்கனை முதலிடம் பிடித்தார்.

அதிகம் வாசிக்கப்பட்டவை