போலி சான்றிதழ் தயாரித்து கொடுத்ததால் மாநில நடுவர் பொறுப்பில் இருந்து சீமான் நீக்கம் - தமிழ்நாடு அமெச்சூர் கபடி சங்கம் நடவடிக்கை


போலி சான்றிதழ் தயாரித்து கொடுத்ததால் மாநில நடுவர் பொறுப்பில் இருந்து சீமான் நீக்கம் - தமிழ்நாடு அமெச்சூர் கபடி சங்கம் நடவடிக்கை
x
தினத்தந்தி 4 Dec 2019 11:20 PM GMT (Updated: 4 Dec 2019 11:20 PM GMT)

போலி சான்றிதழ் தயாரித்து கொடுத்ததால் மாநில நடுவர் பொறுப்பில் இருந்து சீமான் நீக்கம் செய்து தமிழ்நாடு அமெச்சூர் கபடி சங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.

சென்னை,

தமிழ்நாடு அமெச்சூர் கபடி சங்க பொதுச்செயலாளர் ஏ.ஷபியுல்லா நேற்று விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த மணிராஜன் என்பவர் கேரள மாநிலம் காசர்கோட்டில் கடந்த 2014-ம் ஆண்டு நடந்த தேசிய சீனியர் கபடி போட்டியில் கலந்து கொண்டது போல் போலி சான்றிதழ் மற்றும் அதற்கு உண்டான படிவம்-2 ஆகியவற்றை கொடுத்து திருச்சி ஆயுதப்படை போலீசில் சேர்ந்து இருக்கிறார். இந்த சான்றிதழின் உண்மை தன்மையை அறிய தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரியம், மாநில கபடி சங்கத்துக்கு அனுப்பி வைத்தது. இந்த சான்றிதழ் போலியானது என்று மாநில கபடி சங்கம் சார்பில் தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரியத்துக்கு தெரிவிக்கப்பட்டது. இந்த போலி சான்றிதழை தயாரித்து கொடுத்தவர் காஞ்சீபுரம் மாவட்டத்தை சேர்ந்த மாநில கபடி நடுவர் சீமான் என்பது போலீஸ் விசாரணையில் தெரியவந்து அவர் கைது செய்யப்பட்டுள்ளார். தேசிய கபடி சான்றிதழை போலியாக தயாரித்து மாநில கபடி சங்கத்துக்கு மிகப்பெரிய களங்கத்தை ஏற்படுத்திய சீமான் மாநில நடுவர் பொறுப்பில் இருந்து இன்று (நேற்று) முதல் நீக்கப்பட்டுள்ளார் என்பதை தெரிவித்து கொள்கிறேன். அவரை அகில இந்திய நடுவர் பொறுப்பில் இருந்து நீக்கவும் இந்திய கபடி சம்மேளனத்துக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. எனவே இனி வரும் காலங்களில் சீமானிடம் கபடி சம்பந்தமாக யாரும் தொடர்பு வைத்து கொள்ள வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story