இந்திய டேபிள் டென்னிஸ் வீரர்களுக்கு சென்னையில் பயிற்சி


இந்திய டேபிள் டென்னிஸ் வீரர்களுக்கு சென்னையில் பயிற்சி
x
தினத்தந்தி 28 Dec 2019 12:01 AM GMT (Updated: 28 Dec 2019 12:01 AM GMT)

இந்திய டேபிள் டென்னிஸ் வீரர்களுக்கு சென்னையில் பயிற்சி அளிக்கப்படுகிறது.

சென்னை,

ஒலிம்பிக் தகுதி சுற்று போட்டிக்கு தயாராகும் வகையில் இந்திய டேபிள் டென்னிஸ் அணிக்கு பயிற்சி முகாம் சென்னை நேரு ஸ்டேடியத்தில் நேற்று தொடங்கியது. 9 முறை தேசிய சாம்பியனான சரத்கமல் தலைமையில் அந்தோணி அமல்ராஜ், மனவ் தாக்கர், ஹர்மீத் தேசாய், சத்யன் ஆகியோர் கொண்ட இந்திய அணியினர் பயிற்சியில் ஈடுபட்டு உள்ளனர். 30-ந்தேதி வரை இங்கு பயிற்சி மேற்கொள்கிறார்கள். அதன் பிறகு 2-வது கட்டபயிற்சி முகாம் ஜெர்மனியில் ஜனவரி 13-ந்தேதி முதல் 20-ந்தேதி வரை நடக்கிறது. பயிற்சி முடிந்ததும் இந்திய அணி, போர்ச்சுகலில் ஜனவரி 22-ந்தேதி முதல் 26-ந்தேதி வரை நடக்கும் ஒலிம்பிக் தகுதி சுற்று டேபிள் டென்னிஸ் போட்டியில் கலந்து கொள்கிறது. இந்திய டேபிள் டென்னிஸ் ஜாம்பவான் கமலேஷ் மேத்தா வீரர், வீராங்கனைகளுக்கு தொழில்நுட்பங்கள் குறித்து பல்வேறு ஆலோசனைகளை முகாமில் வழங்கினார்.

தமிழகத்தை சேர்ந்த நட்சத்திர வீரர் சரத்கமல் கூறுகையில், ‘இந்த முகாமில் தொழில்நுட்ப ரீதியிலான தவறுகளை திருத்திக்கொள்வதிலும், உடல்தகுதியை மேம்படுத்துவதிலும் கவனம் செலுத்துகிறோம். 2-வது கட்ட பயிற்சி முகாமின் போது நிறைய போட்டிகளிலும் விளையாட இருக்கிறோம். இந்திய அணி நல்ல பார்மில் உள்ளது. அதனால் ஒலிம்பிக்குக்கு தகுதி பெறுவது மட்டுமல்ல, ஒலிம்பிக்கிலும் பதக்கம் வெல்ல வாய்ப்புள்ளது’ என்றார்.


Next Story