‘மேரிகோமுக்கு நான் எதிரானவள் அல்ல’ - நிகாத் ஜரீன்


‘மேரிகோமுக்கு நான் எதிரானவள் அல்ல’ - நிகாத் ஜரீன்
x
தினத்தந்தி 29 Dec 2019 11:15 PM GMT (Updated: 29 Dec 2019 11:15 PM GMT)

மேரிகோமுக்கு நான் எதிரானவள் அல்ல என்று நிகாத் ஜரீன் தெரிவித்துள்ளார்.


‘மேரிகோமுக்கு நான் எதிரானவள் அல்ல’ - நிகாத் ஜரீன்

ஒலிம்பிக் போட்டிக்கான தகுதி சுற்றில் விளையாடும் இந்திய பெண்கள் குத்துச்சண்டை அணியை தேர்வு செய்ய டெல்லியில் நடந்த தகுதி போட்டியில் 6 முறை உலக சாம்பியனான இந்திய மூத்த வீராங்கனை மேரிகோம், ‘இளம் புயல்’ நிகாத் ஜரீனை எளிதில் வீழ்த்தினார். தன்னை பலமுறை வெளிப்படையாக விமர்சித்ததால் ஆத்திரமடைந்த மேரிகோம் போட்டி முடிந்த பிறகு அவருடன் கைகுலுக்கிக் கொள்ள மறுத்தார். அவர் மீதும் சாடினார். இந்த சர்ச்சை குறித்து 23 வயதான நிகாத் ஜரீன் நேற்று கூறுகையில், ‘மேரிகோம் இந்த அளவுக்கு கோபம் அடைவார் என்று எதிர்பார்க்கவில்லை. தகுதி போட்டி நேர்மையாக, முறைப்படி நடத்தப்பட வேண்டும் என்று தான் போராடினேன். முன்பு கடைபிடிக்கப்பட்ட இதற்கான நடைமுறையைத்தான் நான் எதிர்த்தேனே தவிர மேரிகோமை அல்ல. மேரிகோம் ஒரு ஜாம்பவான். எனவே அவர் தகுதி போட்டியை கண்டு பயப்படக்கூடாது. அவர் முன் நாங்கள் எல்லாம் கத்துகுட்டிகள். அவர் எப்போதும் தகுதி போட்டிக்கு தயாராக இருந்து, இளம் தலைமுறையினருக்கு முன்னுதாரணமாக விளங்க வேண்டும்.’ என்றார்.

டெல்லி கிரிக்கெட் சங்கத்தில் கைகலப்பு

டெல்லி கிரிக்கெட் சங்கத்தின் ஆண்டு பொதுக்குழு கூட்டம் நேற்று நடந்தது. இந்த கூட்டத்தில், குறிப்பிட்ட தீர்மானத்தை ஒருமித்த உடன்பாடு இல்லாமலேயே நிறைவேற்றியதற்கு உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து கூச்சலிட்டனர். இதைத் தொடர்ந்து டெல்லி கிரிக்கெட் சங்க இணைச் செயலாளர் ரஞ்சன் மஞ்சந்தாவுக்கும், எதிர்குரூப்பை சேர்ந்த மசூத் ஆலமுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பாக மாறியது. இது தொடர்பான வீடியோ சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது. ‘இது வெட்ககேடான செயல்’ என்று டுவிட்டரில் பதிவிட்டுள்ள முன்னாள் கிரிக்கெட் வீரரும், எம்.பி.யுமான டெல்லியைச் சேர்ந்த கவுதம் கம்பீர், டெல்லி கிரிக்கெட் சங்கத்தை கலைக்கும்படி கங்குலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் வாரியத்துக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். மேலும் தகராறில் ஈடுபட்ட நிர்வாகிகளுக்கு வாழ்நாள் தடை விதிக்கும்படியும் வலியுறுத்தியிருக்கிறார்.

ஐ.எஸ்.எல். கால்பந்து: மும்பை சிட்டி வெற்றி

10 அணிகள் இடையிலான 6-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து தொடரில் நேற்றிரவு மும்பையில் அரங்கேறிய 49-வது லீக் ஆட்டத்தில் மும்பை சிட்டி அணி 2-1 என்ற கோல் கணக்கில் ஐதராபாத் எப்.சி.யை வீழ்த்தி 4-வது வெற்றியை ருசித்தது. மும்பை அணியில் இரண்டு கோலையும் மோடோ சோகு (6 மற்றும் 78-வது நிமிடம்) அடித்தார். முன்னதாக மும்பை வீரர் சர்தாக் கோலு இரண்டு முறை மஞ்சள் அட்டை எச்சரிக்கைக்குள்ளாகி, சிவப்பு அட்டை (67-வது நிமிடம்) காட்டப்பட்டு வெளியேற்றப்பட்டார். இதனால் அடுத்த ஆட்டத்தில் அவரால் விளையாட முடியாது. வருகிற 3-ந்தேதி நடக்கும் அடுத்த லீக் ஆட்டத்தில் பெங்களூரு-கோவா அணிகள் மோதுகின்றன.


Next Story