மலேசியா மாஸ்டர்ஸ் பேட்மிண்டன்: சாய்னா, சிந்து கால்இறுதிக்கு தகுதி


மலேசியா மாஸ்டர்ஸ் பேட்மிண்டன்: சாய்னா, சிந்து கால்இறுதிக்கு தகுதி
x
தினத்தந்தி 9 Jan 2020 11:58 PM GMT (Updated: 9 Jan 2020 11:58 PM GMT)

மலேசியா மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் போட்டியில் இந்திய வீராங்கனைகள் சாய்னா நேவால், பி.வி.சிந்து ஆகியோர் கால்இறுதிக்கு முன்னேறினார்கள்.

கோலாலம்பூர்,

மொத்தம் ரூ.2 கோடியே 86 லட்சம் பரிசுத்தொகைக்கான மலேசியா மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் போட்டி கோலாலம்பூரில் நடந்து வருகிறது.

இதில் நேற்று நடந்த பெண்கள் ஒற்றையர் பிரிவு 2-வது சுற்று ஆட்டம் ஒன்றில் நடப்பு சாம்பியனும், உலக தரவரிசையில் 6-வது இடத்தில் இருப்பவருமான இந்திய வீராங்கனை பி.வி.சிந்து, 19-வது இடத்தில் உள்ள ஜப்பான் வீராங்கனை அயா ஒஹோரியை சந்தித்தார்.

34 நிமிடம் நடந்த இந்த ஆட்டத்தில் சிந்து 21-10, 21-15 என்ற நேர்செட்டில் அயா ஒஹோரியை விரட்டியடித்து கால்இறுதிக்கு முன்னேறினார். ஒஹோரியை, சிந்து தொடர்ச்சியாக 9-வது முறையாக தோற்கடித்தார். கால்இறுதியில் சிந்து, நம்பர் ஒன் வீராங்கனையான தாய் ஜூ யிங்கை (சீன தைபே) சந்திக்கிறார். இதுவரை இருவரும் 16 முறை நேருக்கு நேர் மோதி இருக்கிறார்கள். இதில் தாய் ஜூ யிங் 11 முறையும், சிந்து 5 முறையும் வெற்றி கண்டுள்ளனர்.

மற்றொரு ஆட்டத்தில் தரவரிசையில் 11-வது இடத்தில் உள்ள இந்திய வீராங்கனை சாய்னா நேவால் 25-23, 21-12 என்ற நேர்செட்டில் 9-ம் நிலை வீராங்கனையான தென்கொரியாவின் அன் செ யங்கை வீழ்த்தி கால்இறுதிக்குள் நுழைந்தார். இந்த ஆட்டம் 39 நிமிடம் நடந்தது.

கடந்த ஆண்டு நடந்த பிரெஞ்ச் ஓபன் போட்டியில் அன் செ யங்கிடம் கண்ட தோல்விக்கு சாய்னா நேற்று பதிலடி கொடுத்தார். கால்இறுதியில் சாய்னா நேவால், ஒலிம்பிக் சாம்பியன் கரோலினா மரினை (ஸ்பெயின்) எதிர்கொள்கிறார். இருவரும் இதுவரை 12 முறை நேருக்கு நேர் மோதி இருக்கின்றனர். இதில் இருவரும் தலா 6 வெற்றியை ருசித்துள்ளனர்.

ஆண்கள் ஒற்றையர் பிரிவில் 2-வது சுற்று ஆட்டம் ஒன்றில் இந்திய வீரர் சமீர் வர்மா 19-21, 20-22 என்ற நேர்செட்டில் மலேசியாவின் லீ ஜி ஜியாவிடம் தோல்வி கண்டு வெளியேறினார். இன்னொரு ஆட்டத்தில் இந்திய வீரர் பிரனாய் 14-21, 16-21 என்ற நேர்செட்டில் நம்பர் ஒன் வீரரான கெண்டோ மோமோட்டாவிடம் (ஜப்பான்) வீழ்ந்து நடையை கட்டினார்.

Next Story