கல்லூரி தடகளம்: எம்.ஓ.பி.வைஷ்ணவா வீராங்கனை இளவரசி 2 தங்கம் வென்றார்


கல்லூரி தடகளம்: எம்.ஓ.பி.வைஷ்ணவா வீராங்கனை இளவரசி 2 தங்கம் வென்றார்
x
தினத்தந்தி 11 Jan 2020 11:59 PM GMT (Updated: 11 Jan 2020 11:59 PM GMT)

கல்லூரி தடகளப் போட்டியில், எம்.ஓ.பி.வைஷ்ணவா வீராங்கனை இளவரசி 2 தங்கம் வென்றார்.

சென்னை,

சென்னை அம்பத்தூர் மேனாம்பேடுவில் உள்ள அன்னை வய்லட் கலைக்கல்லூரி சார்பில் கல்லூரிகளுக்கு இடையிலான 5-வது தடகள போட்டி சென்னை நேரு ஸ்டேடியத்தில் நேற்று நடந்தது. என்.ஆர். தனபாலன் கோப்பைக்கான இந்த போட்டியில் 37 கல்லூரிகளை சேர்ந்த சுமார் 500 வீரர்-வீராங்கனைகள் பங்கேற்றனர். இதன் ஆண்கள் பிரிவில் 100 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் லயோலா கல்லூரி வீரர் கார்த்திகேயனும் (10.6 வினாடி), 200 மீட்டர் ஓட்டத்தில் லயோலா வீரர் ராகுல்குமாரும் (21.42 வினாடி), 400 மீட்டர் ஓட்டத்தில் எஸ்.ஆர்.எம். வீரர் நிலேசும், 800 மீட்டர் ஓட்டத்தில் டி.ஜி.வைஷ்ணவா கல்லுரி வீரர் முகேசும், 1,500 மீட்டர் ஓட்டத்தில் டி.ஜி.வைஷ்ணவா வீரர் அருண் கிருஷ்ணனும், 5 ஆயிரம் மீட்டர் ஓட்டத்தில் ஏ.என்.ஜெயின் கல்லூரி வீரர் திருநாவுக்கரசும், 110 மீட்டர் தடை ஓட்டத்தில் எஸ்.ஆர்.எம். கல்லூரி வீரர் பிரவீன்குமாரும், நீளம் தாண்டுதலில் டி.ஜி.வைஷ்ணவா வீரர் விஷ்ணுவும், உயரம் தாண்டுதலில் டி.ஜி.வைஷ்ணவா வீரர் ஜவகர் அலியும் முதலிடம் பிடித்தனர்.

பெண்கள் பிரிவில் 100 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் ஸ்டெல்லா மாரிஸ் வீராங்கனை சான்ட்ரா தெரசா (12.3 வினாடி), 200 மீட்டர் ஓட்டத்தில் ஜே.பி.ஏ.எஸ். வீராங்கனை ரோகிணி (22.42 வினாடி), 400 மீட்டர் ஓட்டத்தில் எத்திராஜ் கல்லூரி வீராங்கனை மரிய ராசாத்தி, 800 மற்றும் 1,500 மீட்டர் ஓட்டத்தில் எம்.ஓ.பி.வைஷ்ணவா கல்லூரி வீராங்கனை இளவரசி, 5 ஆயிரம் மீட்டர் ஓட்டத்தில் சோகா இகெடா கல்லூரி வீராங்கனை நித்தின் ஷா, நீளம் தாண்டுதலில் எத்திராஜ் கல்லூரி வீராங்கனை மரிய ராசாத்தி, உயரம் தாண்டுதலில் பெண்கள் கிறிஸ்தவ கல்லூரி வீராங்கனை விஜயலட்சுமி, ஈட்டி எறிதலில் சோகா இகெடா கல்லூரி வீராங்கனை திவ்ய தர்ஷினி ஆகியோர் தங்கப்பதக்கம் வென்றனர். ஆண்கள் பிரிவில் டி.ஜி.வைஷ்ணவா கல்லூரி அணியும், பெண்கள் பிரிவில் சோகா இகெடா அணியும் அதிக புள்ளிகள் பெற்று சாம்பியன் பட்டத்தை கைப்பற்றின.

சிறந்த வீரராக கார்த்திகேயனும் (லயோலா), சிறந்த வீராங்கனையான இளவரசியும் (எம்.ஓ.பி.வைஷ்ணவா) தேர்வு செய்யப்பட்டனர்.

பரிசளிப்பு விழாவில் சென்னை பல்கலைக்கழக உடற்கல்வி இயக்குனர் வி.மகாதேவன் கலந்து கொண்டு பரிசு கோப்பையை வழங்கினார்.


Next Story